Home 2011 ஜனவரி சிந்தனைச் செம்மல் - அரிஸ்டாட்டில்
வெள்ளி, 09 ஜூன் 2023
சிந்தனைச் செம்மல் - அரிஸ்டாட்டில்
Print E-mail

அரிஸ்டாட்டில் பிளேட்டோ வழிவந்த சிந்தனைச் செம்மல். பிளேட்டோ விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றிய தர்க்கமேதை. பிளேட்டோவிற்கு வயது அறுபது; அப்போது அவரது அகாதெமி (Achademy) எனும் பள்ளியில் ஆர்வமுடன் பயிலவந்த மாணவன் அரிஸ்டாட்டிலுக்கு வயது பதினேழு. கற்பதில் ஆர்வமும் இளமைத் துடிப்பும் கூரிய விழிகளும் தெளிந்த பார்வையும் கட்டமைப்பான உடல்வளமும் - தீர்க்க சிந்தனையும் - அறிவு நுட்பமும் கொண்ட இளைஞன் அரிஸ்டாட்டில் தம் தகுதிகளால் பிளேட்டோவைக் கவர்ந்தார். பிளேட்டோவின் பள்ளியில் கற்பதற்காக அரிஸ்டாட்டில் தம் பெயரைப் பதிவு செய்தார். அப்பதிவு பிளேட்டோவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாயிற்று.

அரிஸ்டாட்டில் மாசிடோனியா நாட்டில் ஏஜியன் (Aegean) கடற்கரையின் வடமேற்குப் பகுதியில் அமைந்த ஸ்டேஜிரா (Stagira) எனும் இடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்து வளம் சேர்த்த காலம் கி.மு - 384 முதல் 322 வரை. ஒப்பற்ற சிந்தனையாளர். அவரது அறிவாற்றலால் ஈர்க்கப்பெற்ற பிளேட்டோ, அவரைத் தம் கல்விக் கூடத்தின் மூளை (Mind of the Achademy) என்றே குறிப்பிட்டுள்ளார். பிளேட்டோ தாம் கண்ட உண்மைகளை உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் இயல்பினர் (Subjective); ஆனால், அரிஸ்டாட்டில் தாம் கண்டவற்றில் ஏற்புடையது எது? நடைமுறைக்கு ஏற்றது எது? என்று ஆய்ந்து, பின்னர் சரியானவற்றை ஏற்றுக் கொள்ளும் தன்மையர் (objective) பிளேட்டோ ஆரம்பித்தது பல்கலைக்கழகம்; ஆனால், அரிஸ்டாட்டில் ஆரம்பித்தது நடமாடும் பல்கலைக்-கழகம். இவ்விருவரும் -ஏசுகிறித்து பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் கல்விக்கண் திறந்த சிந்தனையாளர்கள். ஆடவருடன், மகளிரும் சமமாகக் கல்வி கற்க அடித்தளம் அமைத்த மாண்பினர். அவர்கள் காட்டிய வழியில்தான் இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கிறது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பதே இவர்கள் காட்டிய கொள்கை.

கி.மு. 347 ஆம் ஆண்டில் பிளேட்டோ மறைந்தார்; அவரது மறைவிற்குப் பின்னர் அவரது கல்விக் கூடத்தின (Achademy) தலைமைப் பதவி ஏதன்ஸ் நகர விதிமுறைகளின்படி அவரது சகோதரியின் மகன் ஸ்பெசிப்பஸ் (Speusippus) என்பவர் வசம் சென்றது. அதனால் அரிஸ்டாட்டில் பிளேட்டோவின் வழிவந்த ஜெனோகிரேட்டீஸ் (Zenocrates) துணையுடன் அஸ்செஸ் (Asses) என்ற நகர் சென்று அந்நகரில் செல்வ வளம் மிக்க ஹெர்மியாஸ் (Hermias) என்ற இளவரசரைச் சந்தித்தார். அவரது சகோதரியின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அவரது துணையுடன் மாசிடோனியாவை ஆண்ட மன்னன் பிலிப்ஸ் என்பவரைச் சந்தித்தார். அதற்கு அடுத்த ஏழு ஆண்டுகள், தான் சந்தித்த அந்த மன்னனின் மைந்தனுக்கு (மகன்) கல்வி கற்றுத் தந்து உலக வரலாற்றில் உன்னத இடம்பெற்றார். இவர் கல்வி கற்றுத் தந்த இளைஞன் வேறுயாருமல்ல; உலகப் புகழ்பெற்றவரும், மாசிடோனிய நாட்டின் பெருமையை நிலைநாட்டிய பேரரசரும் அஞ்சா நெஞ்சம் கொண்டவரும் ஆகிய அலெக்சாண்டர் ஆவார்.

அலெக்சாண்டர் கி.மு 335இல் அரசராகப் பொறுப்பேற்றவுடன் அரிஸ்டாட்டில் மீண்டும் ஏதன்ஸ் நகருக்கே திரும்பினார். அங்குதான் அவர் லிசியம் (Lyceum) என்ற பள்ளியைத் தொடங்கினார். அப்பள்ளிதான், பின்னர் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது. இப்பல்கலைக்கழகம் விசாலமான அழகுமிகுந்த தோட்டத்தில் அமைந்திருந்தது. அங்கு அரிஸ்டாட்டில் இலக்கியம், உயிரியல், உளவியல், புதிய அறிவியல் சார்ந்த தர்க்கவியல், கணிதம், அரசியல் சார்ந்த தத்துவ இயல் ஆகிய பாடங்களை மாணவர்களுடன் நடந்தவண்ணம் கலந்துரையாடல் முறையில் விளக்கமாகக் கற்றுத் தந்தார் என்பதை அறிந்து வியக்கிறோம். அவரது கற்றுத்தரும் முறை நமக்கெல்லாம் ஊக்கமளிப்பதாய் நடைமுறைக்கு (Practical) ஏற்றதாய் விளங்குகிறது.

மக்களுக்குப் புரியாத மொழியில் தத்துவ விளக்கங்களைத் தந்தவர் அல்லர் அரிஸ்டாட்டில். அவரது கருத்துகள் எளிமையானவை. ஆனால் உறுதியானவை; நியாயமானவை. மற்றும் எளிதில் பின்பற்றத் தகுந்தவை. அவர் அப்படி எதைச் சொல்லி மக்களைத் தம்பால் ஈர்த்தார்? அவர் சிந்தனையில் உதித்த எண்ணங்கள் பிஞ்சுகளாகிய நீங்கள் புரிந்து கொள்ளும் அளவு ஆழமானவை. அவை வருமாறு: மனிதன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; அம்மகிழ்ச்சி, தான் செய்யும் உயர்ந்த செயல்களால் மட்டுமே கிடைக்கும். அவ்வுயரிய செயல்களைச் செய்ய வேண்டுமாயின் மனித சமுதாயத்தில் செல்வச்சிறப்பு, அறிவு நலம், உடல் வளம், பண்பட்ட தோழர்களின் நட்பு ஆகியன ஒன்றாக இணைய வேண்டும். இத்தகு நிலை (சூழல்) வாழ்நாள் முழுதும் அமைதல் வேண்டும்.

அவர் காட்டிச் சென்ற நெறி “Golden Mean” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, மனிதன் அளவு கடந்த ஆரவாரத்துடன் செல்வச் செழிப்பில் தன்னை மறந்து வாழ்வதும் கூடாது, அதே சமயம் சேற்றில் கிடந்து தடுமாறும் புழுக்களைப் போல் அறிவிழந்து சகதியில் வீழ்ந்து தடுமாறவும் கூடாது. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வாழ்தல் வேண்டும். அத்தகு வாழ்வு வாழ்வதை வள்ளுவர் வாழ்வாங்கு வாழ்தல் என்றார்.

பேராசான் பெரியார் தனக்குமேல் எவரும் இல்லை - தனக்குக்கீழ் எவரும் இல்லை என்று நினைத்து அனைவரையும் சமமாக மதித்து, சமுதாயத்தைச் சமனிய சமுதாயமாக மாற்றுவதே தம் பணி என்று வாழ்நாள் முழுதும் அதற்காகவே உழைத்தார்.

எனவேதான், அவர் தமிழ்நாடு கண்டெடுத்த தன்னிகரற்ற தத்துவ மேதை என்று புகழப்பட்டார். தத்துவஞானி சாக்ரடீஸ், அவரது மாணவர் பிளேட்டோ, அவர் வழி வந்த அரிஸ்டாட்டில் ஆகிய மூவரும் காட்டிய நெறியும், நமது தலைவர் பெரியார் காட்டிய நெறியும் பிஞ்சுகளாகிய உங்களை உயர்த்தும்.

- சாரதாமணி ஆசான்

Share