Home 2011 பிப்ரவரி சிந்திப்போம்...
புதன், 22 ஜனவரி 2020
சிந்திப்போம்...
Print E-mail

இன்பமும் துன்பமும்

தாய்க்கோழி தனது குஞ்சுகளை அழைத்துக் கொண்டு இரை தேடச் சென்றது. மகிழ்ச்சியில் ஓடி ஓடி இரையினைத் தேடிக் கொத்திக் கொண்டிருந்தன குஞ்சுகள். அதனைப் பார்த்த தாய்க்கோழி குஞ்சுகளைப் பார்த்து, என் அருமைச் செல்லங்களே! இப்படி நீங்கள் ஓடுவதை பருந்து, காகம் பார்த்துவிட்டால் உங்களுக்கு ஆபத்து. எனவே, கவனமாக இரை தேடுங்கள் என்றது. இதனைக் கேட்ட குஞ்சுகள், அம்மா நம்மை அடிக்கடி பயமுறுத்தித் தொல்லைகள் கொடுத்துவந்த பருந்துதான் இறந்துவிட்டதே. ஏதோ ஒரு பறவைக்கு வைக்கப்பட்ட குறி வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்தினையும், அதன் கீழே மரக்கிளையில் அமர்ந்திருந்த காகத்தினையும் வீழ்த்திவிட்டதே. அதனால்தான் நாங்கள் சுதந்திரமாக ஓடி ஓடி இரை தேடுகிறோம் என்றன.

தாய்க்கோழி, குஞ்சுகளின் அறியாமையினை நினைத்து வருத்தப்பட்டு அறிவுரை கூறத் தொடங்கியது. என் செல்லங்களா, இந்த உலகில் எத்தனையோ பருந்துகள், காகங்கள் உள்ளன. ஒரு பருந்தும் காகமும் இறந்து விட்டால் இனியுள்ள அந்த உயிரினங்களால் _ பிற உயிரினங்களால் உங்களுக்கு ஆபத்து வரலாம். எனவே, நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றது. தாயின் பேச்சினைக் குஞ்சுகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. நாங்கள் மகிழ்ச்சியில் ஓடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் இப்படிப் பயமுறுத்துகிறீர்கள் என்றன.

குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்ட தாய்க்கோழி, நான் ஏன் உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கப் போகிறேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. எனவே, நான் எது செய்தாலும் - சொன்னாலும் உங்கள் நன்மைக்குத்தான் செய்வேன் _ சொல்வேன். உலக இயல்பை, உங்களுக்கு வரும் ஆபத்தினை எச்சரிக்கை செய்கிறேன் என்றது. குஞ்சுகளோ தாயின் அறிவுரையைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. திறந்த வெளியில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் பருந்து ஒன்று மேலே வட்டமிட்டது. காகம் ஒன்று, குஞ்சுகளை ஓரக்கண்ணால் அருகிலிருந்த மரத்திலிருந்து பார்த்து, தனது கூட்டத்திற்கு கா கா என்று கரைந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது.

பயந்து நடுங்கிய கோழிக் குஞ்சுகள் தாயை நோக்கி ஓடின; தாயின் சிறகுகளுக்குள் ஒளிந்து கொண்டன. ஆராயாமல் தாங்கள் பேசிய பேச்சுக்கும், செய்த செயலுக்கும் மன்னிப்புக் கேட்டன. தாயின் அரவணைப்புக்குள் குஞ்சுகள் சென்றதைக் கண்ட பருந்தும் காகமும் ஏமாற்றத்துடன் திரும்பின.

அப்போது தாய்க்கோழி, தன் சிறகுகளுக்குள் இருக்கும் குஞ்சுகளிடம் வாஞ்சையுடன் கூறியது: தம் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் பெற்றோர்கள். எனவே, பெற்றோரின் - பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்றது. அதனைக் கேட்ட குஞ்சுகள், தினம் தினம் இப்படி பயந்து ஓடி ஒளிந்து கஷ்டப்பட்டுத்தான் வாழவேண்டுமா என்றன. அதற்குத் தாய்க்கோழி, இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் வரும்போது எப்படி மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம். அதேபோல, துன்பத்தை இன்பமாக மாற்ற முயல வேண்டுமே தவிர, துன்பத்தைக் கண்டு சோர்வடைந்துவிடக் கூடாது - துவண்டுவிடக் கூடாது. துன்பத்திலிருந்து விடுபடுவதற்குரிய வழிகளை ஆராய்ந்து சிந்தித்துச் செயல்பட்டு இன்பமாக மாற்ற வேண்டும் என்றது.

- செல்வா

Share