பாம்பின் நஞ்சு மாணிக்கமாகிறதா?
Print

 

மக்களிடையே இது சார்ந்த மடமை எண்ணங்கள் ஏராளம். நூறாண்டுகளுக்குமேல் வாழும் பாம்பு ஒரு சாண் அளவாகச் சுருங்கிவிடும்; அதன் உடலில் சிறகு முளைத்துவிடும். அதன் வாயிலுள்ள நஞ்சு சுண்டி மாணிக்கமாக மாறிவிடும். இரவு நேரத்தில் அப்பாம்பு தன் வாயிலுள்ள மாணிக்கத்தைக் கக்கிவைத்து, அந்த மாணிக்க ஒளியின் வெளிச்சத்தில் இரைதேடும். அந்த மாணிக்கத்தை யாராவது எடுத்தால் பறந்துவந்து கொத்தும். உடனே அவர் இறந்துபோவார். பதுங்கியிருந்து, ஒளிவிடும் மாணிக்கத்தின்மீது சாணி உருண்டையைப் போட்டு மூடினால், பாம்புக்குக் கண் தெரியாமல் போகும். உடனே சென்று மாணிக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் மாணிக்கம் எடுக்கப்படுகிறது என்று மாணிக்கம் உருவாவதுபற்றியும், எடுக்கப்படுவதுபற்றியும் கருத்துச் சொல்லப்படுகிறது. ஆனால், இதில் எதுவும் உண்மையல்ல. பாம்பின் நஞ்சு அதன் நச்சுப்பையில் திரவ வடிவத்தில் இருக்கும். நச்சுப்பை துளையுள்ள பல்லுடன் இணைந்திருக்கும். பாம்பு கடிக்கும்போது தன் தலையைத் திருப்பி நச்சுப்பையைச் சுருக்கி அமுக்கும்போது, அதிலுள்ள நஞ்சு பல்லில் உள்ள துளைவழியே வெளிவரும். பாம்பு கடிக்கும்போது அது கடிக்கும் உடலில் நஞ்சு ஏறிவிடும். அப்படியிருக்க, பாம்பு தன் நஞ்சைக் கக்கமுடியாது. 100 ஆண்டுகளுக்குமேல் வாழும் பாம்பின் நஞ்சு கெட்டியாகி மாணிக்கமாவது இல்லை. பாம்பு உயிருடன் இருக்கும்வரை பாம்பின் நச்சுப்பையில் உள்ள நஞ்சு திரவமாகவே இருக்கும். எப்போதும் கெட்டியாகாது. நஞ்சு கெட்டியானால், அது பல்லின் ஓட்டை வழியே வெளிவராது.

பாம்பு பெண்ணாக மாறும் என்ற கருத்தும் தவறானது. அப்படி வரும் திரைப்படங்கள் கற்பனையானவை. பாம்புக்கு சிறகும் முளைக்காது, பறந்தும் வராது. பறந்துவந்து கொத்தும்போது மனிதன் உடனே இறப்பான் என்பதும் தவறு-. காரணம், பாம்பின் விஷம் மாணிக்கமாகக் கக்கப்பட்டபின் பாம்பின் உடலில் நஞ்சு ஏது? பின் எப்படி மனிதன் சாவான். பிள்ளைகள் சிந்திக்க வேண்டும். மாணிக்கம் என்பது ஒருவகைக் கல். அது தீட்டத் தீட்ட ஒளிவிடும். மாறாக, பாம்பின் நஞ்சு அல்ல.

Share