Home 2011 பிப்ரவரி உலகநாடுகள் - சிலி
சனி, 31 அக்டோபர் 2020
உலகநாடுகள் - சிலி
Print E-mail

தென் அமெரிக்கக் கண்டத்தின் தென்பாகத்தில் மேற்குக் கரையிலுள்ள குடியரசு நாடு.

  • தலைநகர் - சாண்டியாகோ

  • ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிறது.

  • நாணயம் - பெஸோ (Peso)

  • குடியரசுத் தலைவராக செபஸ்டியன் பினெரா உள்ளார் (Sebestian Pinera)

  • 1818 பிப்ரவரி 12 இல் சுதந்திரம் பெற்றுள்ளது.

  • சிவப்பு நிறத்தில் மணி (bell) வடிவத்தில் உள்ள ரெட் கோபிகுயு (A Red Copihue) தேசிய மலராக உள்ளது.

  • ஆண்டியன் கோன்டோர் (Andean Condor) தேசியப் பறவையாக உள்ளது.

1535 இல் ஸ்பானியர், அலமாக்ரோ (Alamagro) என்பவரின் தலைமையில் சிலி நாட்டில் நுழைந்து குடியேற முனைந்தனர். முயற்சி வெற்றியைக் கொடுக்கவில்லை. மீண்டும் 1540 இல் வால்டீவியா (Valdivia) என்பவரின் தலைமையில் சிலியில் நுழைந்து சாண்டியாகோவில் குடியேற்றத்தை நிறுவினர். 1810 இல் சிலி மக்கள் விடுதலைப் போரினைத் தொடங்கினர். 1817 இல் நடைபெற்ற சகாபுகோ (Chcabuco) போரில் ஸ்பானியர் தோற்றனர். 1818 இல் நாடு சுதந்திரம் பெற்று குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது. ஓ ஹிக்கின்ஸ் (O’ Higgins) சிலகாலம் சர்வாதிகாரியாக ஆண்டார்.

1833 இல் அரசியலமைப்பு வகுக்கப்பட்டது. 1866 இல் ஸ்பெயினுடன் போர் மூண்டது. அமெரிக்கா குறுக்கிட்டுப் போரை நிறுத்தியது. 1879 - 84 இல் பெருவுடனும் பொலீவியாவுடனும் போர்புரிந்து பொலீவியாக் கடலோர நைட்ரேட் வெளியைப் பெற்றது. சிலிக்கும் அர்ஜென்டினாவுக்கும் நிலவிவந்த எல்லைத் தகராறு 1902 இல் தீர்க்கப்பட்டது. 1925 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

சிலி, 1919 - 38 இல் சர்வதேச சங்கத்தில் உறுப்பினராக இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் நடுநிலைமை வகித்தது. 1949 இல் அய்க்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகச் சேர்ந்தது. எல்லா நாடுகளுடனும் நட்புறவு கொண்ட நாடாகத் திகழ்கிறது.

புவியியல் அமைப்பு

வடக்கில் பெரு என்ற நாடும், கிழக்கில் பொலீவியாவும் அர்ஜென்டினாவும் உள்ளன. ஆண்டீஸ் மலைத் தொடருக்கும் பசுபிக் கடலுக்கும் இடையிலுள்ள மிகக் குறுகிய, ஆனால் மிக நீளமான நாடு.

பிரிவுகள்

சிலியை மூன்று இயற்கைப் பிரதேசங்களாகப் பிரிக்கலாம். வடக்கில் அடகாமா (Atacama) பாலைவனம். இது வறண்ட வெப்பமான வெளி. தாதுப்பொருள் வளம் மிகுதி. மத்திய சிலி நீர்வளமும் நிலவளமும் மிக்க பள்ளத்தாக்கு. இப்பகுதியில் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. தென்கோடிப் பகுதி மலைப்பாங்கானது. காடுகள் நிறைந்தது. எல்லாக் காலங்களிலும் மிகுந்த மழை பெய்யக்கூடியது.

தாதுவளம்

உலகிலேயே சிலியில்தான் நைட்ரேட் மிகுதியாகக் கிடைக்கிறது. இப்போது, செயற்கை நைட்ரேட் தயாரிக்கப்படுவதால் சிலி நாட்டு இயற்கை நைட்ரேட்டின் தேவை குறைந்துவிட்டது. உலகத்தின் தாமிர சேமிப்பில் மூன்றில் ஒரு பாகத்திற்குமேல் சிலியில்தான் உள்ளது. இவை தவிர, நிலக்கரி, இரும்பு, பொன், வெள்ளி, மாங்கனீஸ் போன்றவையும் கிடைக்கின்றன.

பொருளாதாரம்

அயல்நாட்டு வாணிபத்தை மய்யமிட்ட சந்தை சார்ந்த பொருளாதாரம். வனப்பொருள்கள், மீன், கனிம ஏற்றுமதி ஆகியன முக்கியப் பொருளாதார மூலங்களாக உள்ளன. உலகின் ஒயின் (wine) ஏற்றுமதியில் 5 ஆவது இடத்தையும், உற்பத்தியில் 8 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

வேளாண்மை

கைத்தொழில், விவசாயம், சுரங்கத் தொழில் ஆகிய மூன்றும் நடைபெறுகின்றன. மத்தியப் பள்ளத்தாக்கில் கோதுமை, பார்லி, ஓட்ஸ், நெல், ஆப்பிள், அத்தி, திராட்சை, பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியன விளைகின்றன.

கல்வி

இலவசக் கல்வி போதிக்கப்படுகிறது. 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி முறை உள்ளது. 53 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

முக்கிய ஆறுகள்

பியோ - பியோ (Bio - Bio) , மைப்போ(Maipo), இடாடா (Itata), மெளலே (maule) என்னும் பெரிய ஆறுகள் நீர்ப்பாசனத்திற்குப் பயன்பட்டு நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன. தென் சிலியில் ஏரிகள் பல இருக்கின்றன.

பருவ காலங்கள்

கோடைக் காலம்: டிசம்பர் - பிப்ரவரி
இலையுதிர்க் காலம்: மார்ச் - மே
பனிக் காலம்: ஜூன் - ஆகஸ்ட்
இளவேனிற் காலம் : செப்டம்பர் - நவம்பர்

சுற்றுலாத் தலங்கள்

ஈஸ்டர் அய்லேண்ட்ஸ் (Ester Islands)
புரிதமா ஹாட் ஸ்பிரிங்ஸ்(Puritama Hot Springs)
டோரிடெல் பைநெ நேசனல் பார்க் (Torre del Paine National Park)
ஈஅய் டேசியோ கெய்சர்ஸ் (EI Tatio Geysers)
பெட்ரோகுயு நீர் வீழ்ச்சி (Petrohue waterfalls)

Share