உலக நாத்திகர் மாநாட்டில் பிஞ்சுகள்
Print

உலக நாத்திகர் மாநாட்டில் பிஞ்சுகள்

பெரியார் தாத்தாவின் கொள்கைகள் உலமயமாகிறது என்று ஆசிரியர் தாத்தா சொல்வார் அல்லவா? அதற்கான சான்றாக நடைபெற்றது உலக நாத்திகர் மாநாடு! கடந்த ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் திருச்சியிலும், தஞ்சையிலும் பன்னாட்டவர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் கூடினர். பல்துறையிலும் சாதனை படைத்தவர்களாகத் திகழும் நாத்திகர்கள் தமிழ்நாட்டில் இருப்பதைக் கண்டு வியந்தனர். உங்களில் பலரையும் கூட அம்மாநாட்டில் காண முடிந்ததே!

வெற்றிகரமான இந்த மாநாட்டில் பிஞ்சுகளுக்கும், மாணவர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று கருதிய நமது ஆசிரியர் தாத்தா அதற்கென பல வாய்ப்புகளை வழங்கியிருந்தார். அவற்றில் மிக முக்கியமானவை அறிவியல் கண்காட்சியும், பிஞ்சுகளின் அரங்கும். காண்போர் வியக்கும் வண்ணம், எளிய அறிவியல் செய்திகள் முதல், மிக ஆழமான அறிவியல் உண்மைகள் வரை செயல் விளக்கத்தோடு அமைக்கப்பட்டிருந்தது அறிவியல் கண்காட்சி. பெரியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இதில் பெரும் பங்காற்றினர். மூடநம்பிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வண்ணம் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஆணிக் கால் செருப்பு அணிவது, தீச்சட்டி தூக்குவது, ஜோதிடம் போன்றவை தோலுரிக்கப்பட்டன. இவற்றை பிஞ்சுகள் விளக்கிய பாங்கைக் கண்டு அனைவரும் வியந்து நின்றார்கள்.

இது ஒருபுறம் என்றால் இன்னொரு அறிவார்ந்தோர் தங்கள் கருத்துகளைப் பகிரும் ஆய்வரங்கங்களில் ஒன்றாக நாத்திகக் கொள்கையைப் பரப்புவதில் பிஞ்சுகளின் பங்கு எனும் தலைப்பில் பிஞ்சுகள் அரங்கு நடைபெற்றது. பிஞ்சுகள் நாத்திகத்தைப் பற்றி என்ன பேசப் போகிறார்கள் என்று யாராவது நினைத்திருந்தால் அவர்கள் உண்மையில் வெட்கப்பட்டிருப்பார்கள். அந்தளவுக்கு இருந்தது பிஞ்சுகளின் கருத்தும் பேச்சும். இவ்வரங்கில் கோவை த.க. கவுதமன், காஞ்சி உ.க. அறிவரசி, காரைக்குடி ஜா.எ. டார்வின் தமிழ், கோவை த. தமிழ் ஓவியா ஆகிய பிஞ்சுகள் ஏனைய பெரியார் பிஞ்சுகள் அனைவரின் சார்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர். அப்பப்பா அவையோர் வியந்தனர். பன்னாட்டவர்கள் வாய்பிளந்தனர். அடடே... எவ்வளவு அடிப்படையான, ஆழமாக கருத்துகள் தெறித்து விழுந்தன? ஒவ்வொரு நாளும் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் தொடர்ந்து கேள்விகளையும், விவாதங்களையும் சந்திப்பவர்கள் நாத்திகப் பிஞ்சுகள் தானே! கடவுள் இல்லை என்று இந்த வயதிலேயே நீ என்ன சொல்வது என்ற மூடர்களின் கிண்டலை ஒவ்வொரு நாளும் எதிர் கொள்பவர்கள் அல்லவா?

இதோ நமது பிஞ்சுத் தோழர்களின் முதிர்ந்த கருத்துகள்:

* பிறக்கும்போது எல்லாக் குழந்தையும் நாத்திகக் குழந்தையே! பெற்றோர் குழந்தைகள் மீது மதத்தைத் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* அரசியலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதைப்போல தங்கள் விருப்பத்திற்கும், அறிவிற்கும் ஏற்ற வகையில், 18 வயதுக்குப்பிறகு மதத்தையோ, அல்லது மதம் சாராமல் நாத்திக நன்னெறியையோ தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு வேண்டும்.

* பள்ளிகளில், பாடத் திட்டங்களில் இருக்கும் அறிவியலுக்குப் புறம்பான புராணக் குப்பைகளை ஒழிக்க வேண்டும். நீதிக் கருத்துகள் என்ற பெயரில் மதச் சிந்தனைகள் புகுத்தப்படுவதை ஒழித்து, மனிதநேயக் கருத்துகள் வலியுறுத்தப்படவேண்டும்.

* குழந்தைகளுக்கான கதைகள் எல்லாம் இத்தகைய புராணக் குப்பைகளாக இருப்பதை மாற்றி, அறிவார்ந்த கருத்துகளுடன் கதைகளைப் பரப்ப வேண்டும்.

* விளையாட்டுகள், கணக்குப் புதிர்கள் போன்றவற்றில் பகுத்தறிவு, அறிவியல் கருத்துகளை உள்ளடக்கிப் பரப்ப வேண்டும்.

* தொலைக்காட்சி, ஊடகங்கள் எல்லாம் கார்ட்டூன்களில் ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணா, ஜெய் அனுமன், பைபிள் கதைகள் என்று மூடநம்பிக்கைகளைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தடைசெய்து மத நஞ்சை குழந்தைகள் மத்தியில் திணிப்பதைத் தடுக்க அரசு முயலவேண்டும்.

* மந்திரமா? தந்திரமா?, அறிவியல் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை பள்ளிகள்தோறும் நடத்த வேண்டும்.

* பெரியார் பிஞ்சு மாத இதழ், பழகு முகாம் போன்ற வாய்ப்புகளை உருவாக்கித் தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, நண்பர்களையும் உறவினர்களையும் இவற்றில் இணைத்து பகுத்தறிவூட்ட வேண்டும்.

இன்னும் அவர்கள் ஆற்றிய உரையைத் தனித்தனியே வெளியிடலாம்... அவ்வளவு சிறப்பு. இந்நிகழ்ச்சியை பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்து உரையாற்றினார். கடவுள் நம்பிக்கை குறித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதையை வடசென்னை பெரியார் பிஞ்சு வெற்றிச்செல்வன் படித்துக் காட்டினார். பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசினை பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் செந்தாமரை அவர்கள் வழங்கினார்.

இது மட்டுமா? கோலாட்டம், கலைநிகழ்ச்சி என பிஞ்சுகளின் பங்களிப்பைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். அடுத்தடுத்த தலைமுறையும் அறிவாசானின் வழி தொடரும் என்பதில் அய்யமென்ன?

- பிஞ்சண்ணா

Share