Home 2011 ஏப்ரல் உலகப் புகழ் பெற்ற மனிதர்கள்
வியாழன், 09 டிசம்பர் 2021
உலகப் புகழ் பெற்ற மனிதர்கள்
Print E-mail

விடுதலையின் விடிவெள்ளி

சைமன் பொலிவர் (1783 - 1830)

இளமைப் பருவம் இயற்கை வளம் குன்றா அமேசான் பாயும் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் (Caracas) ல் விடுதலையின் விடிவெள்ளி (THE LIBERATOR) சைமன் பொலிவர் ஜூலை 24 ஆம் நாள் 1783 ஆம் ஆண்டு தோன்றினார். இவர் தந்தை வெனிசுலாவில் கௌரவம் மிக்க, குடும்பத்தைச் சேர்ந்த பிரமுகர். ஆயினும், இவரது முன்னோர் ஸ்பெயின் நாட்டிலிருந்து, குடியேறியவர்கள். இவர் தந்தையார், டான் ஜோயின் வின்சென்ட் (Don Juan Vincente) பொலிவர். மூன்றாண்டு குழந்தையாக இருக்கும் போது, தந்தையை இழந்தார். அப்போது அவர் தாய் டோனா மரியா (Dona Maria) சைமன் பொலிவரை நன்முறையில் வளர்த்தார். சைமன், இளம் வயதினராக இருக்கும் போதே துடிப்புள்ளவராகவும் - தன்னொத்த வயதுடையவர்களைவிட மேன்மையும் - கொள்கைப் பிடிப்பும் உடையவராகவும் விளங்கினார். தனது 9 ஆம் வயதில் தாயையும், இழந்து தனியனான பொலிவர் தனது 16 ஆம் வயதில் ஸ்பெயின் நாட்டில் தன் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1801இல் மரியா தெரசா எனும் மங்கை நல்லாளை மணந்தார். எனினும், அவர் ஓராண்டிலேயே உயிருக்கு உயிராக நேசித்த இளம் மனைவியை இழந்தார். இல்லறத்தில் அவர் தெரசாவுடன் வாழ்ந்தது ஓராண்டுதான். அதன் பின்னர் முழு நேரமும் பொது வாழ்வில் மக்களுக்காக வாழ்வில் மன நிறைவு கண்டார்.

மனித இனத்தின் அடிமை விலங்கொடித்த அற்புத மனிதர்

எந்த ஒரு தலைவன் தன் வாழ்வில் உயர்வு பெற்றிருந்த போதிலும் - தன் இணை மக்கள் இனம் சுதந்திரம் பெறும் வரையிலும் ஓயாது போராடி வருகிறாரோ அத்தகு தலைவன் காட்டிய வழியில்தான் மக்கட் சமுதாயம் பயணம் செய்கிறது. அப்படி ஸ்பெயின் நாட்டினரால் அடிமைப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் அடங்கி ஒடுங்கி வாழ்ந்த தென் அமெரிக்க மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஒப்பற்ற வீரர்தான் சைமன் பொலிவர். இன்றைய உலகில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் பொலிவியா, கொலம்பியா, ஈக்குவேடார், பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் ஒட்டு மொத்த விடிவுக்காக, உழைத்த விடி வெள்ளி. அடுத்தவர் வாழத் தம்மையும், தம் வாழ்வையும் அர்ப்பணித்த அருட் கொடையாளர். பிறர் சுதந்திரத்திற்காகத் தமது சுதந்திரத்தைப் பணயம் வைத்த தியாகச் செம்மல். -ஏகாதிபத்தியத்தின் ஏக போக அடக்கு முறைகளையும் - எழில் மிகு வாழ்வு - எளிய வாழ்வு வாழ வேண்டியவர்களை யெல்லாம், தம் அதிகாரத்தாலும், ஆயுத பலத்தாலும் - அடிமைகளாகவும் - அகதிகளாகவும், ஆண்டிகளாகவும் நடத்திய ஸ்பெயின் நாட்டினரிடமிருந்து விடுவிக்கப் பல புரட்சிகளையும் - கொரில்லாப் போர் யுக்திகளையும் கையாண்ட செயல் வீரர். தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்ட இவர் - மிகச் சிறந்த அறிஞரும், மனித நேயம் கொண்டவரும் ஆகிய பிரான்சிஸ்கோ - டீ - மிராண்டா (Fancisco - de- Miranda) என்பவரைத் தமது வழிகாட்டியாக (Tutor) ஏற்றுக் கொண்டார். இவருடன் இணைந்து இவருக்கு உலகப் பண்பாட்டையும், நாகரிகத்தையும், வரலாற்றையும், மனித உரிமைகள் பற்றிய மேலான எண்ணங்களையும் ஆழமாக விதைத்தவர்கள், அர்ஜென்டினா நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த உன்னத மனிதர் ஜோஸ் டி சேன் மார்த்தினும், (JOSE DE SAN MARTIN), சிலி நாட்டின் தேசிய வீரராகப் போற்றப்படும் பெர்னார்டோ இக்கின்ஸ் - ம் (BERNARDO - O- HIGGINS) ஆவர்.

விடுதலை வேள்வியில் - சாதனைகள்

1813 ஆம் ஆண்டில் முதன் முறையாகப் படைத் தலைவராகப் பதவியேற்ற சைமன் பொலிவர் மொத்தம் ஆறு போர்களில் படைகளுக்குத் தலைமையேற்று நடத்தினார். சுமார் 1200 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று எதிரியின் அய்ந்து தரைப்படைகளைத் தகர்த்தார். வெனிசுலாவின் வட பகுதியைப் பெற்றார்.

விடுதலை வீரர் என்ற பெயரினையும் வெனிசுலாவின் முடிசூடா மன்னன் என்ற நிலையையும் அடைந்தார்.

தோல்வி கண்டும் கலங்கா நெஞ்சம்

1813 ஆம் ஆண்டு வெற்றி கண்டன இவர் படைகள்; ஆனால், 1814 இல் இவரது படைக்குத் தளபதியாக விளங்கிய மிராண்டா என்பவர் தலைமையில் ஸ்பெயின் நாட்டின் மீது படையெடுத்த இவர் படைகள் தோற்கடிக்கப்பட்டன. மிராண்டா சிறைப்பிடிக்கப்பட்டார். கொரில்லாப் போரில் முன்னணியில் நின்ற தலைமைத் தளபதி கைது செய்யப்பட்டார். ஆனால், சைமன் மட்டும் தப்பி ஜமைக்கா (JAMAICA) சென்றார். ஆனால், அங்கு அவருக்கு ஆதரவு அவ்வளவாக இல்லாததால் ஹைத்தீ (HAITI) துவில் அடைக்கலம் பெற்றார். அப்போது வெனிசுலாவில் இவரது பண்ணைகளும், சொத்துக்களும் முடக்கப்பட்டன; ஆனால், அவரது உள்ளத் தெழுந்த சுதந்திரக் கனலை அடக்கவோ - அணைக்கவோ யாராலும் இயலவில்லை. இவர் தோல்வி கண்டு துவண்டு விடவில்லை.

பொலிவர் காட்டிய நெறிகள்

21 ஆம் நூற்றாண்டில் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற விளையும் ஒவ்வொரு குடிமகனும், பொலிவர் தமது ஆசிரியர் சைமன் ரோட்ரிக் (SIMON RODRIGUEZ) அவர்களிடம் கூறிய உறுதிமொழிகளை உள்ளத்தில் பதிவு செய்தல் வேண்டும். பொலிவர் கூறிய உறுதிமொழிகள் வருமாறு: தென் அமெரிக்க மக்களின் கரங்களுக்கு ஸ்பெயின் நாட்டு ஆதிக்க வர்க்கத்தினரால் பூட்டப்பட்ட இரும்பு வளையங்களை ஒடிக்கும்வரை, அதாவது அடிமைப்பட்ட மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை எனது கரங்களும், ஆன்மாவும் ஓய்வு பெறாது என்று இவர் கூறிய இவ்வரிகள் வைர வரிகள். ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற துடிப்புள்ள அனைவர் உள்ளங்களிலும் இவ்வரிகள் ஆழப் பதிந்தன. உரிமை வேட்கை மேலெழுந்தது. இன்று தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் வழியில் நின்று சமூக நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு இளைஞனும் தனது செயல்பாடுகளை முடுக்கிவிடவும் தம் குறிக்கோளில் - கொள்கையில் முழு வெற்றி காணவும் துடிப்புடனும், விழிப்புடனும் இயங்கவும் இம்மாபெரும் தலைவரின் வாழ்வியல் நெறிகள் உதவும். சைமன் பொலிவர் காலத்தில் கருப்பு இனத்தை வெள்ளை இனம் அடிமைப் படுத்தியது. ஆனால், இங்கே நம் நாட்டில் மனு நீதியின் பெயரால் உயர் ஜாதி மக்கள் தாழ்ந்த ஜாதி மக்களை அடிமைப்படுத்தினர். அங்கு இன வேற்றுமை நீங்க சைமன் உழைத்தார். ஆனால், இங்கு சமூக இழிவு நீங்க பெரியார் அயராது உழைத்தார்.

தென் அமெரிக்காவில் உள்ள ஒட்டு மொத்த நாடுகளையும் ஒரு குடையின்கீழ் அமைத்து அய்க்கிய அமெரிக்க நாடுகளைக் காட்டிலும் மேலான ஆற்றல் மிகு நாடுகளாக மாற்ற பெரும் விருப்பம் கொண்டார் பொலிவர். இவரது இச்சிந்தனை இன்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு மங்கா உணர்வை ஊட்டிக் கொண்டிருக்கிறது. இவர், தென் அமெரிக்க நாடுகளின் வரலாற்றுச் சின்னம். இது வரை உலகில் எந்த ஒரு நாடும் தலைவன் பெயர் கொண்டு அழைக்கப்படவில்லை. ஆனால், தென் அமெரிக்காவில் பொலிவரால் சுதந்திரம் பெற்ற நாடு பொலிவியா என்றே அழைக்கப்படுகிறது. தம் தலைவன் பெயரினை நாட்டிற்குச் சூட்டி தமக்கும் - இன விடுதலையை மீட்டுத் தந்த தலைவனுக்கும் பெருமையைச் சேர்த்தனர் அந்நாட்டு மக்கள். தங்களைப் பொலிவியர் என்று அழைப்பதன் மூலம் தம் தலைவர் பெருமையைப் பன்மடங்கு உயர்த்தினர்.

Share