மதத்தை வெறுத்த கோலிரிட்ஜ்
Print

சாமுவேல் டெய்லர் கோலிரிட்ஜ் 1772 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் 10 ஆவது பிள்ளையாகப் பிறந்தவர். இவரது தந்தை பெயர் ஜான் கோலிரிட்ஜ். தனது பெயரினைச் சுருக்கி ஷி.ஜி.சி. என்று கையெழுத்திடுவார். 1777 இல் தந்தை இறந்துவிடவே 1779 இல் கிறிஸ்தவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

உடல் நலக் குறைவினால் அல்ல, கல்வி கற்பதற்காக. அன்றைய நாளில் லண்டனில் இலவசக் கல்வி கிடைத்த இடம். மட்டமான உணவு வழங்கப்பட்டாலும் கடுமையான ஒழுக்கவிதிகள் பின்பற்றப்பட்டன.

அங்கிருந்தவர்கள் கோலிரிட்ஜை மாதா கோயில் பாதிரியாக்க முயற்சி செய்தனர். ஆனால், அவரது ஆர்வம் பூட்சு தைக்கும் தொழில் கற்பதிலேயே இருந்தது. 13 வயதில் பூட்சு தைக்கும் தொழிலாளியிடம் சென்று உதவியாளராகச் சேர்த்துக் கொள்ளும்படிக் கேட்டார்.

அந்தத் தொழிலாளியோ, படிக்கும் வயதில் இப்படிக் கேட்கிறாரே என வருத்தப்பட்டு, தலைமையாசிரியரிடம் சென்று கூறினார். தலைமையாசிரியரோ, இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியம் செய்துள்ளாயே என்று சொல்லி, கோபத்தில் அடித்துக் கீழே தள்ளினார்.

அதற்குக் கோலிரிட்ஜ், நான் மாதா கோயில் பாதிரியாவதைவிட பூட்சு தயாரிக்கும் தொழிலாளியாகவே விரும்புகிறேன். பாதிரியாவதை வெறுக்கிறேன் என்று கூறினார். ஏன் இப்படியொரு முடிவிற்கு வந்தாய் என்று தலைமையாசிரியர் கேட்கவே, உண்மையைச் சொல்வதென்றால் நான் ஒரு நாத்திகன் அய்யா என்று பதில் சொன்னார். மேற்படி எந்தவொரு விளக்கத்தையும் கேட்க விரும்பாத தலைமையாசிரியர் சாட்டையை எடுத்துக் கசையடி கொடுத்தாராம்.

Share