Home 2011 ஜூன் உழைப்பே வெற்றி
வெள்ளி, 09 ஜூன் 2023
உழைப்பே வெற்றி
Print E-mail

ஆதித்யாவும் எழிலும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் - நண்பர்கள்.  ஆதித்யாவின் அப்பா தீரன் நல்ல உழைப்பாளி.  உணவகம் ஒன்றினை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.  உழைப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர்.  எதனையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து - பகுத்தறிந்து செயலாற்றுபவர்.  தன் மகன் ஆதித்யாவையும் பகுத்தறிந்து சிந்தித்துச் செயலாற்றுபவனாக வளர்த்து வந்தார்.

எழிலின் அப்பா ரவி துணிக்கடை வைத்திருந்தார்.  அதிர்ஷ்டத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மட்டுமே நம்பிக்கை கொண்டவர். கடையில் வியாபாரம் நல்லமுறையில் நடைபெற வேண்டும் என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குபவர்.  அதுமட்டுமல்ல, எலுமிச்சம்பழம் கட்டுவது, திருஷ்டிப் பொம்மைகளைக் கட்டுவது என்று வியாபார விருத்திக்காக யார் எதைச் செய்யச் சொன்னாலும் செய்து கொண்டே இருப்பவர்.

வியாபாரம் நன்றாக நடைபெற வேண்டும் என்று கோவிலுக்குச் சென்றபோது, பால்ய நண்பரைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.  நீங்க.....ரவிதானே?  நான்...உங்ககூடப் படிச்ச தாமரைச் செல்வன்.... நினைவிருக்கிறதா என்றார் எதிரில் வந்தவர்.

தாமரையா..... எப்படியிருக்க?  என்ன செய்துக்கிட்டிருக்க என்று பேசிக் கொண்டே நண்பர்கள் இருவரும் வெளியில்வந்து, அருகிலிருந்த உணவகத்திற்குள் சென்றனர்.  குடும்பத்தை _ குடும்பச் சூழ்நிலைகளைப்பற்றி நண்பர்கள் பேசினர்.  அப்போது ரவி, தனது வியாபாரம் சுமாராக நடக்கிறது என்ற தன் கவலையைச் சொன்னார்.

இதனைக் கேட்ட தாமரை, எனக்கும் குடும்பத்தில் பல பிரச்சினைகள் உள்ளன.  போன மாதம்தான் ஒரு ஜோசியரிடம் சென்று வந்தேன்.  எனக்கு நேரம் சரியில்லாததால்தான் இப்படி பிரச்சினைகளுக்குமேல் பிரச்சினைகளைச் சந்திக்க நேர்வதாகக் கூறினார்.  இதற்குப் பரிகாரமாக, நவரத்னக் கற்கள் பதித்த மோதிரத்தை அணிந்து கொண்டால் எல்லாப் பிரச்சினைகளும் விலகி ஓடிவிடும் என்றார்.  அதனால் கடன்வாங்கி, இந்த மோதிரத்தை ஜோசியருடன் சென்று வாங்கினேன்....

இப்போது உன் பிரச்சினைகள் சரியாகி நிம்மதியாக இருக்கிறாயா என்று கேட்டார் ரவி.  அதனைக் கேட்ட தாமரை, பிரச்சினைகள் குறைந்தபாடில்லை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்று சொல்லி அலுத்துக் கொண்டார்.  திரும்பவும் சென்று ஜோசியரிடம் கேட்க வேண்டியதுதானே என்று கேட்டார் ரவி.

கேட்டேனே, அதற்கு ஜோசியர் உங்கள் முன்ஜென்மப் பாவம்.  அதனை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று சொல்லிவிட்டார் என்றார் தாமரை.  இவர்களின் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த உணவக உரிமையாளர் தீரன், முன்ஜென்மம், பாவம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாதுங்க.

மண்ணினுள் விதைக்கப்பட்ட விதை எப்படி தன்மீது அழுத்தியிருக்கும் மண்ணையும் கல்லையும் தள்ளிக் கொண்டு முளைத்து வெளிஉலகிற்கு வருகிறது.  அதுபோல, முன்னேற்றம் நம்மை முடிவில்லாமல் தொடரவேண்டுமானால் நாமும் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிஉலகிற்கு நம்மை வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும்.

மேலும், மரங்கள் பூமியின் எந்தப் பகுதியில் வளர்ந்தாலும் தன்னை வித்திட்ட இடத்தில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்கின்றன.  மேல்நோக்கி மேலும் மேலும் வளர்கின்றன.  பள்ளத்தாக்கில் இருந்தாலும், பக்கவாட்டில் படர்ந்தாலும் உயர வளர்வதை முன்னிறுத்திக் கொண்டே செல்கின்றன.  வாடும்வரை வளர்ந்துகொண்டே இருக்கின்றன.  வாடிய பிறகுகூட, மண்ணோடு மண்ணாக மக்கி இன்னொரு தாவரத்திற்கு உணவாகின்றன.  மரங்களே இப்படி என்றால் மனிதர்களாகிய நாம் எப்படித் துடிப்புடன் மேலே மேலே வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்?

நமது மனதில் ஏற்படும் காயங்கள், வடுக்கள் அனைத்தும் வெற்றியின் அடையாளங்களே!  நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல; அது செயலின் ஊற்று.  எந்த வேலை செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்தால்தான் அதில் சுகம் இருக்கும்.  ஈடுபாடு இல்லையென்றால் சுமையாகத்தான் தெரியும்.

ஆசையோடு குழந்தையைத் தூக்கி நடக்கும்போது சுமை தெரியுமா?  குழந்தையின் சுமை, சுகமான சுமையாக _ இன்பமாகத்தானே தெரியும்.  வேண்டாவெறுப்போடு ஒரு பொருளைத் தூக்கிக்கொண்டு நடந்தால்தான் அதன் சுமை வலியாகத் தெரியும்.  ஆகையால், சுகமும் சுமையும் உழைப்பின் கடினத்தில் இல்லை; ஈடுபாட்டில் இருக்கிறது.  வாழ்க்கையில் வெற்றிபெற முடியாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  ஆனால், வெற்றிபெற நிச்சயமாக ஒரே ஒரு காரணம்தான் உண்டு.  அது உழைப்பு!  உழைப்பு!! உழைப்பு!!

முயற்சி என்பது தேவைக்கான ஒரு தேடலே.  அதனை வெளியில் சென்று எங்கும் தேடவேண்டியதில்லை.  முயற்சி நமக்குள்ளேதான் இருக்கிறது.  முயற்சி இல்லையென்றால் வளர்ச்சியில்லை.  நாம் விதைக்கும் எல்லா விதைகளும் முளைப்பதில்லை.  அதுபோல எல்லா முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை.  வெற்றியடைய பலமுறை முயற்சி செய்ய வேண்டும் - தொடர் முயற்சி செய்ய வேண்டும்.  இந்த விடாமுயற்சியை மன உறுதியுடன் செய்யும்போது நம்மிடமுள்ள பயம் நம்மைவிட்டுப் பறந்தோடிவிடுகிறது.

என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்பதைவிட, இந்தக் காரியம் வெற்றிபெறும்வரை முயற்சி செய்வேன் என்பதே சரியான அணுகுமுறையாகும் என்ற தீரனின் பேச்சு ரவியையும், தாமரைச் செல்வனையும் உண்மையை - பகுத்தறிவின் தன்மையை உணரவைத்து விடா முயற்சிக்கு - உழைப்பிற்கு - நம்பிக்கைக்கு வித்திட்டது.

 

- செல்வா

Share