Home 2011 ஜூலை சிந்திப்போம்...
வியாழன், 29 அக்டோபர் 2020
சிந்திப்போம்...
Print E-mail

தோல்வியைத் தோற்கடிப்போம்


வாழ்க்கையே போராட்டம்தான்.  எது நடந்தாலும் என்ன நடந்தாலும் எனக்குத் தோல்வியில் நம்பிக்கையில்லை.  தோல்வி என்பதே எனக்குக் கிடையாது.  தோல்வியை முழுவதுமாகத் தோற்கடிப்பேன் என்ற மன உறுதியுடன் ஒருவர் செயல்பட்டால் அவரை எதிர்த்து நிற்க எந்த ஆற்றலாலும் முடியாது.

நான் சாதிக்கப் பிறந்தவன் _ சாதித்தே தீருவேன்.  இடையில் வரும் பின்னடைவுகள் - சறுக்கல்கள் தற்காலிகமானவையே என்ற அசையாத மன உறுதியும் கொள்கைப் பிடிப்புமிருந்தால் மலைகளைக்கூட பொடிப்பொடியாக்கிவிடலாம்.  இப்படி, மன உறுதியில் - கொள்கைப் பிடிப்பில் தளராது நின்று வெற்றி வாகை சூடிக் கொண்டிருப்பவர்களுள் ஒருவரே 69 வயது ஆக்ஸ்போர்டு (இங்கிலாந்து) இளைஞர் வில்லியம் ஹாகிங்.

ஹாகிங்கிற்கு ஏற்பட்ட சோதனைகள், சோதனைகளை வென்று அவர் சாதனைகளைக் குவித்துக் கொண்டிருக்கும் விதம் வியந்து போற்றற்குரியது.  மலை போன்ற மன உறுதியுடன் அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சாதனைகள் படிப்போர் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி.

குழந்தையிலிருந்தே மெலிந்த உடல் தோற்றத்தினைக் கொண்டவர்.  தள்ளாடியபடியே நடப்பார்.  சில சமயங்களில் தரையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் கீழே விழுவார்.  இதுபோல அடிக்கடி துன்பப்பட்டதால் (வயது21) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  சோதனைகள் பல நடந்தன.  முடிவு அதிர்ச்சிதரக்கூடியதாக இருந்தது.

செலரோசிஸ் எனப்படும் தீர்க்க முடியாத நோய் என்றனர்.  இளமையிலேயே - விரைவிலேயே இறந்து விடுவார் என்றனர்.  எத்தனை நாள்கள் வியாதியின் நிலையை ஹாகிங்கிடம் சொல்லாமல் மறைக்க முடியும்?

நோயின் தன்மை அவருக்கும் தெரிய வந்தது.  முதலில் அதிர்ச்சியடைந்தார்.  பின், மரணம் வருகிறபோது வரட்டும்.  என்றாவது ஒரு நாள்  எல்லோரும் சாகத்தானே வேண்டும்.  அதற்காகப் பயந்துவிட முடியுமா?  நோய்க்கு அஞ்சி சோம்பித் துருப்பிடித்துச் சாவதைவிட, முடிந்தவரை உழைத்துத் தேய்ந்து சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று பேராசிரியர் பணியினையும் ஆராய்ச்சியினையும் தொடர்ந்தார்.  தமது உடல்நலன்பற்றியோ, விரைவில் மரணம் அடைந்து விடுவோம் என்பதுபற்றியோ எதுவும் சிந்திக்கவில்லை.  ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.  டாக்டர் பட்டம் பெறுவது ஒன்றையே தமது நோக்கமாக - லட்சியமாகக் கொண்டார்.  நிறையப் படித்தார்.

ஆராய்ச்சி! ஆராய்ச்சி!  இதுவே எந்நேரமும் அவரது உயிர்மூச்சில் நின்றது.  ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார்.  அறிவியல் உலகம் அவரது கட்டுரையைப் பாராட்டிப் போற்றியது. அவரது உடல்நலமோ குறைந்து கொண்டே வந்தது.  படுத்த படுக்கையானார்.

கை கால்களை அசைக்க முடியவில்லை.  சாப்பிட முடியவில்லை.  பிறர் உதவியின்றி எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்.  செவிலியர்கள் உதவிசெய்ய அமர்த்தப்பட்டனர்.  அவர்கள் பணியிலிருக்கும் போதே தம் பணிகளைச் சீர்ப்படுத்திக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  பின்பு, மூச்சு விடுவதிலும் பிரச்சினை ஏற்பட்டு, மூச்சுக் குழாயில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

குழறிக் குழறி, திணறித் திணறிப் பேசிய சில வார்த்தைகளையும் பேச முடியவில்லை.  செவிலியர் எப்போதும் உடன் இருந்தனர். பேச முடியாத சூழ்நிலையில் எப்படி தேவைகளை _ கருத்துகளை வெளியிட்டார் தெரியுமா?

ஆங்கில மொழியில் உள்ள அரிச்சுவடி எழுத்துகளைக் கொண்ட அட்டையொன்று அவரிடம் காட்டப்படும்.  இந்த எழுத்துகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து ஒருவர் படித்தால் ஒரு வார்த்தை உண்டாகுமல்லவா?  அப்போது, ஆமாம் என்பதை உணர்த்த தமது புருவங்களை உயர்த்திக் காட்டுவாராம்.

மேலும், கணினித் திரையில் தோன்றும் பல வார்த்தைகளில் தனக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்து தம்மிடம் உள்ள ஒரு விசையை அழுத்துவார்.  பிறகு, அந்த வார்த்தையை ஒலி சேர்ப்பு வெளியீடு என்ற கருவிக்கு அனுப்புவார்.  இந்தக் கருவியும் ஒரு கணினியும் இவரது சக்கர நாற்காலியில் பொருத்தப்பட்டன.  இதன் துணை கொண்டு பல விஞ்ஞானக் கருத்துகளும் ஆய்வுரைகளும் உலகிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஒருமுறை தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு, கணினி மூலம் பேட்டி அளித்தார். அப்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று தொகுப்பாளர் கேட்க,

முன்பைவிட மகிழ்ச்சியாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த உடல்நிலையில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா? என்றதும்,

எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதுதான் முக்கியம் என்று பதில் அளித்துள்ளார்.

இப்போதும் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.  தம் வாழ்நாளில் ஒரு நாளும் நல்ல நிலையில் உடல்நலத்தை அனுபவிக்காத இந்த அற்புதப் பேராசிரியர் தமது அயராத ஆய்வால் - உழைப்பால் உலகின் கவனத்தைக் கவர்ந்து 12 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கையில் துன்பங்கள் மனதளவில் - உடலளவில் வந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது.  மன உறுதிக்கு முன்பு மலைகள் மண்டியிடும் - மண்டியிட்டாக வேண்டும் என்பதைப் பார்த்தோமல்லவா?  உடல் ஊனமோ - வறுமையோ - உடல் நலப் பாதிப்போ வெற்றிக்குத் தடையல்ல.  சாதிக்கப் பிறந்தோம் - சாதித்தே தீரவேண்டும் என்பதே நமக்கு - இந்த உலகத்திற்கு பேராசிரியர் ஹாகிங் விடுக்கும் அறைகூவல்.

- செல்வா

Share