Home 2011 செப்டம்பர் சாதனைப் பிஞ்சு - வீணை சிறீநிதி
வியாழன், 03 டிசம்பர் 2020
சாதனைப் பிஞ்சு - வீணை சிறீநிதி
Print E-mail

தகுதி, திறமை என்றால் அவாள்தான் என்பது பார்ப்பனர்களின் வசதிக்காக, பார்ப்பனர்களாலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை. அதிலும், இசை என்றால் அவாள்தான் என்ற மாயையை அவ்வப்போது பலர் உடைத்து வருகிறார்கள். தமிழ்த் திரை என்று மட்டும் இல்லாமல், தமிழிசை, கர்நாடக இசை என்று சாஸ்திரிய சங்கீதத்திலும் கொடி கட்டிப் பறந்தது என்னவோ நம்மவர்கள்தான்.

கே.பி.சுந்தராம்பாளாக இருந்தாலும், வீணை தனம்மாளாக இருந்தாலும், பாகவதராக இருந்தாலும், கற்க வாய்ப்புக் கிடைத்த தமிழர்கள் தங்கள் திறனால் உலகு புகழ வளர்ந்தார்கள். எங்களவாவைக் கட்டிண்டதாலதான் எம்.எஸ். இப்படித் தேனா பாடுறா! என்ற இங்கிதம் இல்லாத இவர்களின் சங்கீத பீலாக்களை வரலாறு பதிந்துதான் வைத்திருக்கிறது.

இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக 17.7.2011 அன்று ஓர் இளம் பிஞ்சு, இசைப் பாரம்பரியம் என்றெல்லாம் இல்லாத ஒரு 13 வயது மாணவி 15 மணி நேரம் வீணை வாசித்துச் சாதித்திருக்கிறார்.

கரூரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் சிறீநிதி கார்த்திகேயன். கரூர் தமிழிசைச் சங்கமும், கரூர் திருக்குறள் பேரவையும் இணைந்து கரூர் நாரத கானசபாவில் நடத்திய இந்நிகழ்வில் சிறுமி சிறீநிதியின் இந்தச் சாதனையை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்திருக்கிறது.

காலை 8.10-க்குத் தொடங்கிய இந்த முயற்சியின் முதல் கட்டம் 3 மணிநேரம் நடந்து 11.10-க்கு முடிந்தது. ஒரு மணிநேரத்திற்கு 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம் என்ற விதியின்படி 3 மணிநேரத்திற்கு 30 நிமிடங்கள் ஓய்வுக்குப் பின் 11.40-க்கு மீண்டும் தொடங்கியது. அது 2.40 வரையிலும், பின்னர் 3.10 முதல் 6.10 வரையிலும், மீண்டும் 6.40 முதல் என பல்வேறு கட்டங்களாக நடந்து 12.10 மணிக்கு நிறைவடைந்தது. பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, கீபோர்டு என பல்வேறு இசைப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் சிறுமி சிறீநிதி.

இந்தச் சாதனை முயற்சியில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், பக்க வாத்தியங்களோடு அவர் வாசித்துக் கொண்டிருந்தாலும், பாடலின் இசை இடைவேளைகளிலும் (பல்லவி - சரணம் இடைவேளை, சரணம் - சரணம் இடைவேளை), ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடலுக்கிடையிலான இடைவேளைகளிலும் கூட ஒரு நொடிக்கு மேலாக வீணை வாசிக்காமல் இருக்கக்கூடாது. விரல்கள் வீணையை மீட்டியபடியே இருக்க வேண்டும்.

அதை மிகத் தெளிவாகவும், அனைவரும் ரசிக்கும்படியும், கர்நாடக சங்கீதப் பாடல்கள், பழைய, புதிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் என மாற்றி மாற்றி வழங்கி அரங்கிலிருந்த அனைவரையும் அசத்தினார் சிறுமி சிறீநிதி. அப்படிப்போடு, அப்படிப்போடுவும், காதல் வந்தாலேயும், அச்சம் என்பது மடமையடாவும், மலர்ந்தும் மலராதவும், பழமுதிர்ச்சோலை யிலேவும் இன்னும் பலவும் அந்த விரல்கள் மீட்டிய வீணையிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தன.

மேலும், கலைக் காவியம், யுவசிறீ, கலாபாரதி, கலை இளமணி போன்ற பட்டங்களையும், பல பரிசுகளையும் பெற்றுள்ளார். தொடர்ந்து 24 மணி நேரம் வீணை வாசித்து சாதனை புரிவதே தனது அடுத்த முயற்சி என்று கூறியுள்ளார்.

- தெ. அலெக்சாண்டர், கரூர்.

Share