Home 2011 அக்டோபர் செவ்விந்தியர் தளபதி ஜோசப் - CHIEF JOSEPH 1840 - 1904
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
செவ்விந்தியர் தளபதி ஜோசப் - CHIEF JOSEPH 1840 - 1904
Print E-mail

- சாரதாமணி ஆசான்

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் சிறுபான்மைச் சமுதாய மக்கள் - இனத்தின் பெயரால் - மதத்தின் பெயரால் - மொழியின் பெயரால் - நாகரிகப் பழக்கவழக்கங்களின் பெயரால் - கலாச்சார வேறுபாடுகள் காரணமாக பெரும்பான்மையராக வாழும் இன மக்களால் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், வஞ்சிக்கப் பட்டும், விரட்டப்பட்டும், முடியுமானால் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அந்த அவலம் துடைக்கப்பட வேண்டும் என்பதற்காக தம் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவரும் - எதிர்த்து அறப்போர் புரிந்தவரும்தான் தளபதி ஜோசப்.

மலை மீதிருந்து இடி கீழே உருண்டால் எத்தன்மைத்தோ அத்தன்மைத்து இவரது செயல் வீச்சு. எனவே இவர் “Thunder Rolling down the Mountain”  - என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

பிறப்பு:

இவர் 1840ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் நாள் வடமேற்கு ஓரிகன் [Oregan] பகுதியில் வால்லோவா பள்ளத்தாக்கில் [Wallowa Valley]  அமைந்துள்ள நெஸ் பெர்சீ [Nez perce] என்னும் இடத்தில் பிறந்தார். இவர் தந்தை காப்காபொனிமி [KHAPKA PONIMI] அமெரிக்காவில் வாழ்ந்த பழங்குடி மக்களின் அதாவது அமெரிக்க செவ்விந்தியரின் பாதுகாவலராகவும் - தலைவராகவும் விளங்கினார். செவ்விந்தியர் அமெரிக்காவில் பல நீண்ட ஆண்டுகளாக பெரும்பாலான நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தவர்கள் ஆவார்கள்.

வெள்ளையர் குடியேற்றம்:

அய்ரோப்பிய வெள்ளையர்கள் அமெரிக்காவில் குடியேறிய பொழுது அவர்களுடன் பழங்குடி மக்களாகிய செவ்விந்தியர் மனமுவந்து வாழ்ந்து வந்தனர். வெள்ளையர்கள் செல்வவளம் கொழிக்கும் நெஸ் பெர்சீ [Nez Perce] நோக்கிக் குடியேறத் துவங்கினர். வெள்ளையர்களின் ஒரே குறிக்கோள் வால்லோவா பள்ளத்தாக்கிலும் நெஸ் பெர்சியிலும் மிகுந்துள்ள கனிமவளத்தை, அதாவது தங்கத்தை வெட்டிச் செல்வது மட்டுமே. பேராசை கொண்ட வெள்ளையர் பழங்குடி மக்களின் இருப்பிடங்களை நோக்கித் தொடர்ந்து வந்து குடியேறியதால் செவ்விந்தியர் பெரும் தொல்லைகளுக்கு ஆட்பட்டனர்.

இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு வாழ்ந்து வந்த செவ்விந்தியர் அல்லல்பட்டனர்.

அமைதி இழந்தனர். 17 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பில் [69,000 சதுர கிலோ மீட்டர்] 70 நிலையான கிராமங்களில், 6,000 மக்களைத் தன்னகத்தே கொண்டு வாழ்ந்த இந்தத் தொல்குடியினரின் வாழ்நிலம் 7.7 மில்லியன் ஏக்கராகக் குறைக்கப்பட்டது. அதாவது, 1897ஆம் ஆண்டு தளபதி ஜோசப் ஜனாதிபதி ஹாயேஷ் [President Hayes]  என்பவரிடம் தம் இன மேம்பாட்டுக்காக வாதிட்டார். தளபதி ஜோசப் அவர்கள் போராடுவதற்கு முன்னரே அவரது தந்தையும், செவ்விந்தியரின் நலவாழ்வில் அக்கறை கொண்ட தலைவர்களும் இங்ஙனம் தங்கள் நிலங்களில் வெள்ளையர்கள் குடியேற்றம் பெறுவதை விரும்பவில்லை. அதற்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

செவ்விந்தியரைத் தம் வாழ்வாதாரங்களுடன் வாழவைக்க அறவழிப் போராட்டம் நிகழ்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் தளபதி ஜோசப்.

உரிமைப் போர்:

தொல்குடியினராகிய செவ்விந்தியர் எண்ணிக்கையில் 200 பேராக இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் 2,000 வெள்ளையர்களுடன் மூன்று மாதங்கள் தொடர்ந்து போராடினர். இந்தத் தொல்குடியினர் அறிவியல் நுட்பங்களையும் திறன்மிக்க போர் வியூகங்களையும் அறவழியில் அமைத்துப் போர் புரிந்த தரம் - எதிர் அணியினரின் குழந்தைகள், மகளிர் ஆகியோர் பாதுகாக்கப்பட்ட விதம் ஆகியன தற்காலத்தில் உரிமைக்காகப் போராடும் அனைத்து மக்களாலும் பின்பற்றவும் போற்றவும் தக்கதாய் அமைந்திருந்தன. இவ்வகைப் போர் புரிந்து புகழ் ஏணியின் உச்சியில் நின்ற தளபதி ஜோசப் “The Red Neopolean”   சிவப்பு நெப்போலியன் என்றே அன்றிலிருந்து அழைக்கப்படுகிறார்.

சிறுபான்மையர் உள்ள உணர்வு:

சிறுபான்மை இனமாகிய செவ்விந்தியரின் விடியலுக்காக இவர் பேசிய உரைகள் சிறுபான்மை இனத்தினர் உலகின் எக்கோடியில் இருப்பினும் அவர்களின் உள்ளத்து உணர்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடு எனலாம். அவர்தம் இன விடியலுக்காகப் பேசிய வரிகள் வருமாறு: இந்த உலகில் மனிதர்களாக எங்களை அறிமுகப்படுத்தவும் - சுதந்திரமாக வாழவும் - சுதந்திரமாகப் பிரயாணம் செய்யவும் - சுதந்திரமாக ஓய்வு கொள்ளவும், எங்களை ஆசிரியர்களைச் (வழிகாட்டிகளை) சுதந்திரமாகத் தேர்வு செய்யவும், எங்கள் பெற்றோர் பேணிய வழியைச் சுதந்திரமாகப் பின்பற்றிச் செல்லவும் - சுதந்திரமாகப் பேசிப் பழகவும் விரும்புகிறோம்.

இவ்வரிகள்தான் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகள். இவை உலகம் முழுதும் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். அப்போதுதான் போரற்ற அமைதியான ஆடம்பரமற்ற எளிமையான உலகை உருவாக்க முடியும்.

வெள்ளையரின் அடக்குமுறை:

இவரது உரிமைக் குரல் வெள்ளையர் உள்ளத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, வெள்ளை உள்ளம் படைத்த மக்களை ஏமாற்றி _ பட்டினியில் அவர்களைக் கிடத்தி - மோசடியான உடன்படிக்கைகளில் வலுக்கட்டாயமாகக் கையொப்பமிடச் செய்து - பழங்குடியினரை ஒடுக்கும் ஒப்பந் தங்களை நிறைவேற்றி பழங்குடியினர் (செவ்விந்தியர்) நிம்மதியாக வாழமுடியாத அளவுக்குப் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உலகமயமாதல் - தொழில் மயமாதல் - நகர் மயமாதல் என்ற பெயர்களில் மண்ணின் மைந்தர்கள் ஆகிய இவர்கள் தங்கள் நாட்டிலேயே பிச்சை எடுக்கும் இழிநிலைக்குத்  தள்ளப்பட்டு அருகி லுள்ள பகுதிகளுக்கு ஏதுமற்ற ஏதிலிகளாக சிதறுண்டு அழியவும் - தொற்று நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கவும் வழிவகுத் தனர்.

இவர்கள் தம் வாழ்விடத்திலிருந்து சுமார் 1,700 மைல்கள் விரட்டப்பட்டு, கனடா எல்லையில் ஆதரவற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இந்நிலையிலும் தளபதி ஜோசப் தன்னை எதிர்த்த எதிர் அணித் தளபதி கிப்பன் என்பவரையும் அவருக்குத் துணைநின்ற ஹோவர்டின் என்ற குதிரைப் படைத் தளபதியையும் எண்ணற்ற படைவீரர்களையும் விரட்டியடித்தார்.

இறுதிக்கட்டம்:

வஞ்சனையும் - தந்திரமும் - சுயநலமும் கொண்டு தீயவழியில் போராடும் வெள்ளையரிடம் அன்பும், நியாயமும், நேர்மையும் கொண்ட அறவழிப் போராட்டம் வெற்றி பெறுவது அரிது என்பதைத் தம் அனுபவ அறிவால் உணர்ந்தார் தளபதி ஜோசப்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கனிந்து சமவாய்ப்புக் கிட்டும்போது தம் இனம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதுவேகத்துடன் உயிர்த்தெழ வேண்டும் என்ற நம்பிக்கையில் 1877ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் நாள் தளபதி ஜோசப் வெள்ளையருக்கு அடிபணிந்தார்.

அப்போது அவர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அவ்வைர வரிகள் வருமாறு:

தளபதி ஹோவர்டின் உள்ளத்தை உள்ளபடி அறிவேன்

அவர் அளித்த உறுதிமொழிகள் வெற்றுக் காகிதங்களாகக் காற்றில் உலாவரக்                     காண்கிறேன்

நீண்ட நாள் போரிட்டுப் போரிட்டு ஓய்ந்தேன்!

நியாயம் வெல்லுமென்று நினைத்திருந்தேன்!

நீதி கிடைக்குமென்று நீண்ட நாள் காத்திருந்தேன்! ஆனால் இன்று

என் நன்நாட்டு மக்கள் நீடு துயில் கொண்டார்

பச்சிளம் குழந்தைகள் பனியில் உறைந்தன

மீதமுள்ள மக்கள் சிதறுண்டு ஓடினர் உண்ண உணவில்லை - உறையுமிடம் ஏதுமில்லை
பனியோடு பனியாக எம்மக்கள் எங்கே    உறைந்து போயினரோ!

வாழ வழியின்றி அவர்கள் எவ்வழி சென்றனரோ! ஆனால்! இங்கே நான் உடைந்த உள்ளத்துடன் கனத்த இதயமுடன் கலங்கி நிற்கிறேன்

கதிரவன் நிற்கும் நிலையிடத்தில் நானும் கதிகலங்கி நிற்கின்றேன்

எப்போதும் இனி நான் போர்தொடுக்கப் போவதில்லை   இந்த அடிபணிதல் உரை (The Surrender Speech) மூலமாக வீழ்வது தம் இனமாக இருந்தாலும் எதிர்கால வரலாற்றுத் தீர்வு அறவழிப் போராட்டத்திற்கு உரிய வெகுமதியை அளிக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே! எனவே இவ்வுரை அழியாப் புகழ் பெற்றது!!

Share