அறிவியல் சோதனை
Print

இரும்பைத் தாமிரமாக்க முலாம் பூசுவோமா?

தேவையான பொருள்கள் :

1. கண்ணாடிக் குவளை -1

2. இரும்புச்சாவி - (துருப்பிடிக்காதது) - 1

3. தாமிரத்தண்டு

4. காப்பிட்ட கம்பி

5.சுண்ணாம்பு

6. மயில்துத்தக் கரைசல்

7. மின்கலம் (பேட்டரி)

8. பென்சில் - 2

சிறிதளவு சுண்ணாம்பைக் குழைத்து கண்ணாடிக் குவளையில் தடவி காய வைத்து விடுங்கள். கண்ணாடிக் குவளையில் நீல நிற மயில்துத்தக் கரைசலை முக்கால் பாகம் ஊற்றுங்கள். மின்கலத்தின் இரு முன் வாய்களையும் காப்பிட்ட கம்பியால் இணை யுங்கள். ஒரு முனையில் தாமிரத்தகட்டை இணைத்து மயில்துத்தக் கரைசலுக்கு உள்ளே தொங்கவிடுங்கள். மின்கலத்திலிருந்து இணைக்கப்பட்ட அடுத்த கம்பியின் மறுமுனையை இரும்புச்சாவியைப் பொருத்தி மயில்துத்தக் கரைசலுக்குள் சமமாக இருக்கும்படியாகத்  தொங்கவிடுங்கள். குவளையிலிருந்து கீழே விழுந்துவிடாதபடி இருப்பதற்காக மட்டும் இரண்டு பென்சில்களைக் கிடையாக நிறுத்திக்கொள்ளுங்கள்.

ஆறு மணி நேரத்திற்குப் பின்பு இரும்புச் சாவியைப் பாருங்கள். அது தாமிரச்சாவியாக மாறி இருக்கும்.

ஏன்? எப்படி?

மயில்துத்தக் கரைசலை தாமிர சல்பேட் என்பார்கள். இதில் தாமிரம் இருக்கிறது. இதில் உள்ள தாமிர நுண் அணுக்கள் இரும்புச்சாவியை நோக்கிச் சென்று அதன்மேல் படிகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மயில்துத்தக் கரைசலில் உள்ள தாமிர சல்பேட் குறைந்துகொண்டே வரும்போது இந்தக் குறைவை நிறைவாக்கவே தாமிரத் தகடு தொங்கவிடப்பட்டிருக்கிறது. அது கரைந்து - சல்பேட்டுடன் கரைந்து உதவ தாமிரத்தகடு அளவில் குறைவதைக் காணலாம். இப்படியே இரும்புச்சாவி தாமிரச்சாவியாக மாறும்.

குறிப்பு: தாமிரத்திற்குப் பதிலாக வெள்ளி முலாம் பூசலாம். அதற்கு, வெள்ளி உப்பும் வெள்ளித் தகடும் வேண்டும்.

ஆக்கம் : அணு கலைமகள்

Share