சிந்திப்போம்
Print

சூழ்ச்சி வென்றதா?

அடர்ந்த புல்வெளியில் நான்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. வெள்ளை, கருப்பு, சிவந்த நிறம் என நிறங்களில் வேறுபட்டாலும் அவை மனதால் ஒற்றுமையுடன் இருந்தன. எங்கு சென்றாலும் நான்கும் சேர்ந்தே சென்று வந்தன.

சிங்கம் ஒன்று இந்த மாடுகளின் ஒற்றுமையைக் கண்காணித்து வந்தது. எப்போதாவது தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒரு மாடு என் கண்ணில் படாதா என ஏங்கியது. நன்கு சாப்பிட்டுக் கொழு கொழு என்று இருக்கின்றன. இவை உணவாகக் கிடைத்தால் நன்றாக இருக்குமே என எண்ணியது.

சிங்கம் இருக்கும் திசையில் வந்த நரி, சிங்க ராஜாவுக்கு என்ன சிந்தனையோ?

கவலையாக உள்ளதுபோல் தெரிகிறதே என்றது. இதனைக் கேட்ட சிங்கம், ஆம் நரியாரே, தினமும் கண்ணுக்கு அழகான நான்கு மாடுகளைப் பார்க்கத்தான் முடிகிறதே தவிர, வயிற்றுப்பசிக்கு உணவாக்கிக் கொள்ள முடியவில்லையே என்ற தனது மனக்குமுறலைப் புலம்பியது.

காட்டு விலங்குகளின் ராஜாவுக்கு இதுதான் கவலையா? கவலையை விடுங்கள். நான் என் தந்திரத்தால் - சூழ்ச்சியால் அந்த மாடுகளைப் பிரிக்கிறேன். அதன்பிறகு உங்கள் விருப்பம்போல் மாடுகளை வேட்டையாடிச் சாப்பிட்டு மகிழுங்கள்.

அதுசரி சிங்கராஜா, தாங்கள் விரும்பும் மாடுகளை உங்களுக்கு இரையாக்கப் போகும் எனக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டது நரி.
மாட்டின் மூளை, ஈரல், இருதயம் இதில் எதை விரும்புகிறாயோ அதனை உனக்குக் கொடுத்துவிடுகிறேன் என்றது சிங்கம்.

உற்சாகத்தில் துள்ளிய நரி மாடுகளைப் பிரிப்பதற்கான திட்டத்தை யோசித்தது. பின்பு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் புல்வெளியைத் தேடிச் சென்றது.

முதலில் வெள்ளை நிற எருதிடம் சென்று, எருதே நான் உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும். கொஞ்சம் தள்ளி நின்று பேசுவோம், வாயேன் என்றது.

நரியின் வஞ்சகத் தன்மையை அறியாத மாடு நரியின் பின்னால் சென்றது.

நரி பேசத் தொடங்கியது. எருதே எருதே, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? உன் வெள்ளை நிறம் உன் அழகுக்கு மேலும் மெருகூட்டி நிற்கிறது.

உன் அருமை பெருமை தெரியாமல் நீ ஏன் கருப்பு, சிவந்த நிறம் கொண்ட பிற எருதுகளுடன் நட்புக்கொண்டு உடனிருக்கிறாய். வேண்டாம், நீ அவர்களிடமிருந்து பிரிந்துவிடு. அதுதான் உனக்கு நல்லது; பெருமையும்கூட என்றது.

நரியாரே, நாங்கள் நிறத்தால் வேறுபட்டாலும் எருது என்ற ஒரே இனத்தைச்   சேர்ந்தவர்கள்தானே. அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் மற்ற எருதுகளிடம் நீ பேசினாலும் எருது என்றுதானே கூப்பிடுவாய். மனிதர்கள்தான் தங்களுக்குள் நிறத்தால், இனத்தால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், நாங்களும் சண்டை போடுவோம் என்று நீ எப்படி எதிர்பார்க்கலாம்? நாங்கள் ஒற்றுமையாக இருப்பதையே விரும்புகிறோம். அதுதானே வாழ்க்கை முறை என்றது மாடு.

எதிர்பாராத பதிலினைக் கேட்ட நரி சற்று திகைப்புற்றாலும், தன்னைச் சுதாரித்துக் கொண்டது. எருதே எருதே, உன் தோல் நிறத்தைப் போலவே உன் மனதும் வெள்ளையாக உள்ளது. வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கிறாயே என்றது.

என்ன சொல்ல வருகிறாய் என்றது எருது. ஆமாம் எருதே, உன்னை நினைத்து உன் நண்பன் நான் கவலைப்படாமல் யார் கவலைப்படுவது?  நீதான் அந்த எருதுகளை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாய். ஆனால் அவையோ, நல்ல செழிப்பான பசுமையான புல் உள்ள பகுதியைத் தங்களுக்குப் பிரித்துக் கொண்டு மேய்கின்றன. உனக்கோ செழிப்பற்ற சிறிது வாடிய - அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள பகுதியைக் கொடுக்கின்றன. அடர்ந்த செழிப்பான - பசுமையான புல்வெளியைத் தேர்ந்தெடுத்து நீ ஏன் தனியாகச் சாப்பிடக் கூடாது என்றது நரி.

நரியாரே இதற்கு மேல் என் கோபத்தைக்  கிளராதே. நீ என்ன சொன்னாலும் என் மனம் எதனையும் ஏற்காது. நான் தெளிவாக இருக்கிறேன். இங்கிருந்து ஓடிவிடு என்றது. தன் இனத்தாரிடம் சென்று நரியின் வஞ்சகச் செயலை கூறியது.

ஏமாற்றமடைந்த நரி, அடுத்த நாள் வந்து கருப்பு மாட்டிடம் சென்று தனியே பேச வேண்டும் என்றது. புரிந்த மற்ற எருதுகள் அனைத்தும் நரியைச் சுற்றி வளைத்தன.

நான்கு மாடுகளும் நரியை முறைத்துப் பார்த்தன. நாங்கள் இப்போது உன்னைத் தாக்கிக் கொல்லப் போகிறோம். உன்னால் தனியாக நின்று என்ன செய்ய முடியும்? என்றதும், நரி நடுங்கியது. இதுவே உன் இனத்தாருடன் வந்திருந்தால் இப்படிப் பயந்து நடுங்குவாயா? இப்போது புரிந்து கொண்டாயா ஒற்றுமைதான் பலம், ஒற்றுமைதான் உயர்வு என்பதை. இதனைக் கேட்ட நரி பதில் கூற முடியாமல் தலைகுனிந்து நின்றது.

நரியாரே, நாங்கள் உன்னை மன்னித்து விட்டுவிடுகிறோம். இனி, உனது தந்திரத்தால் யாரையும் பிரிக்க நினைக்காதே. உன் இனத்தாருடன் ஒற்றுமையாக வாழக் கற்றுக்கொள் என்று அறிவுரை சொல்லி நரிக்கு வழிவிட்டன.

- செல்வா

Share