Home 2011 டிசம்பர் அறிஞர்களின் வாழ்வில்...
சனி, 24 அக்டோபர் 2020
அறிஞர்களின் வாழ்வில்...
Print E-mail

உண்மைக்காக உயிரையே கொடுத்த ஜியார்டனோ புருனோ :

த்தாலி நாட்டில் படைவீரரின் மகனாக 1548இல் பிறந்தார் ஜியார்டனோ புருனோ.

பல புத்தகங்களைப் படித்து மாற்றுக் கருத்தால் கவரப்பட்டதால் 1572இல் கிறித்தவ மடத்திலிருந்து நீக்கப்பட்டார். 1575இல் நோமிலியன் மடத்தில் சேர்ந்து வேத சாஸ்திரம் படித்தார்.

கோப்பர்நிக்கசின் விண்மீன் சுழற்சியினாலும் வானியல் கொள்கைகளாலும் கவரப்பட்டதால் வேத நூல் அறிவுக்குப் பொருந்தாது என்று கூறி ஏற்றுக்கொள்ள மறுத்தார். தெய்வீகத் தன்மையைக் கெடுத்தார் என்று கூறிய பாதிரியார் இவரைக் கைது செய்யத் திட்டமிட்டார்.

அங்கிருந்து ரோம் சென்றார். அங்கும் இவரது கருத்துகளை வெறுத்த சிலர் கைது முயற்சியைத் தொடரவே 1578 -இல் ஜெனிவா சென்றார்.

பிழைதிருத்துநராக புரோட்டஸ்டண்ட் மதம் இவரைச் சேர்த்துக் கொண்டது. பின்பு, மூடக் கருத்துகளைப் பரப்புவதாகக் கூறி கைது செய்ய முயற்சி செய்தது. கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் மன்னிப்புக் கேட்கச் சொல்லியது. இவர் மறுக்கவே, எச்சரித்து இடம் மாறிக் குடியேற அனுமதித்தது.

டௌலிஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து டாக்டர் பட்டம் பெற்றார். வானியல் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இவரது கருத்துகளைப் பிடிக்காத சிலர் இவரை வெளியேற்றத் திட்டமிட்டனர்.

1581இல் பாரிஸ் வந்தார். பலரது எதிர்ப்பு இங்கும் இருந்தாலும், பிரெஞ்சு அரசர் மூன்றாம் ஹென்றியின் ஆதரவு இருந்தது. எண்ணங்களின் நிழல் என்ற நூலினை எழுதினார். பின்னர் இங்கிலாந்து செல்ல அனுமதி கேட்டார்.

1583இல் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கோப்பர்நிக்கசின் கோட்பாடுகளை விளக்கி, பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உரையினை நிகழ்த்தினார். அதில், அறிஞர்களும் டாக்டர்களும் தங்களைத் தெய்வீகப் பிறவி என்று நினைப்பதைக் கண்டித்தார். 1585வரை இங்கிருந்து 7 புத்தகங்களை எழுதினார்.

பின்பு, தமது கொள்கைகளைப் பரப்புவதற்காக வெனிஸ் நாடு சென்றார். ஜியாவன்னி அன்புடன் வரவேற்பதுபோல் வரவேற்றுக் கீழே தள்ளினார். பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி 1592ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 நாள்கள் இருட்டறையில் பூட்டி வைத்து மதவாதிகளின் கைக்கூலியாகச் செயல்பட்டனர்.

மத நீதிமன்றத்தில் மே மாதம் ஒப்படைக்கப்பட்டார் புருனோ. இந்தப் பிரபஞ்சம் எல்லையற்றது, ஆதி அந்தம் இல்லாதது என்றார். கிறித்துவ மதக் கோட்பாட்டை மதிக்கவில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வெனிஸ் சிறையில் அடைக்கப் பட்டார்.

ரோம் கேட்டதன் பேரில் 1592 பிப்ரவரி 27 அன்று ரோம் அனுப்பப்பட்டார். அங்கு, எந்தவித விசாரணையுமின்றி 6 ஆண்டுகள் இருட் டறையில் அடைக்கப் பட்டார். தனக்குக் கொடுக்கப் போகும் தண்டனை என்ன என்பதைத் தெரிந்தும் பிரபஞ்சக் கொள்கை யையும் கோப்பர்நிக்கசின் பூமி சுற்றும் கொள்கையையும் விளக்கி, தண்டனையை ஏற்கத் தயார் என்றார்.

பிரபஞ்சம் எல்லையற்றது என்ற கருத்து மதக் கோட்பாட்டுக்கு விரோதமானது. மத விரோதியை உயிருடன் கொளுத்த வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர்.

தம் கொள்கைகளை - கோப்பர்நிக்கசின் கொள்கைகளை - அறிவியல் கருத்துகளைப் பரப்புவதற்காக நாடு நாடாகச் சென்றவர்.

9 ஆண்டுகள் இருட்டுச் சிறையில் இருந்தவர். விண்மீன்களுள் ஒன்றே சூரியன் என்ற புருனோவை, 1600ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் சூரியன் உதிக்கும் முன்பே ரோம் நகர வீதியின் நடுப்பகுதியில் கட்டைகளை அடுக்கி வைத்துத் தீயிட்டு உயிருடன் எரித்தனர். உண்மையை அஞ்சாமல் எடுத்துக்கூறி கொண்ட கொள்கைக்காக உயிரை நீத்தார்.

இவரது கொள்கை, தத்துவம், அறிவியலின் மதிப்பினை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் உணரத் தொடங்கினர். 19ஆம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்களை ஏற்றுக் கொண்டது. பின்பு, புதிய சிந்தனையுடன் கூடிய விடுதலை இயக்கங்கள் ஆதரிக்கப்பட்டன. தொலைநோக்கியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு இவர் கூறிய கருத்துகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

280 ஆண்டுகள் கழித்து ரோம் நகரம் விழாக்கோலம் பூண்டது. 1880இல், இவரை எரித்த இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்பி 30,000 மக்கள் அஞ்சலி செலுத்தக் கூடினர்.

புருனோ வாழ்க என்ற கோஷத்தை எழுப்பி ரோம் மக்களால் அறிஞராக ஏற்றுக் கொள்ளப்பட்டவரே ஜியார்டனோ புருனோ.

- மேகா

Share