Home 2011 டிசம்பர் உலக நாடுகள்
சனி, 24 அக்டோபர் 2020
உலக நாடுகள்
Print E-mail

சியார்ரா லியோன் - Republic of Sierra Leone

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு

தலைநகரம்:ஃப்ரீடவுன்

அலுவலக மொழியாக ஆங்கிலம் உள்ளது.

குடியரசுத் தலைவர்: எர்நெஸ்ட் பாய்    கோரோமா (Ernest Bai Koroma)

தலைமை நீதிபதி: காஜா உமு ஹாஸ் தேஜன்    ஜோலோக் (Haja Umu Haws Tejan Jolloh)

நாணயம்: லியோன் (Leone)

பிரிட்டனிடமிருந்து 1961 ஏப்ரல் 17 அன்று    சுதந்திரம் அடைந்துள்ளது.

2,500 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த இடமாக உள்ளது என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறியுள்ளனர். கடற்கரைப் பழங்குடியினர் கி.பி.9, 10ஆம் நூற்றாண்டுகளில் விவசாயம் செய்து வந்துள்ளனர். பேரரசர் மாலி இசுலாமியர்களின் செல்வாக்குடன் 18ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்துள்ளார்.

சியார்ரா லியோன் என்ற பெயர் இத்தாலியர்களால் வைக்கப்பட்டது. துறைமுகத்தில் வியாபார ஸ்தலம் 1495இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. போர்த்துகீசியர்களுடன் டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் சேர்ந்து அடிமைகள் விற்குமிடமாக மாற்றினர்.

சர்.ஜான் ஹாக்கின்ஸ் என்ற அமெரிக்கர் 1562இல் பிரிட்டனுடன் சேர்ந்து புதிய காலனி அமைக்க 300 அடிமைகளை வாங்கினார். ‘Black Poor’ என்ற அமைப்பைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 1787 மே 15 அன்று கடற்கரையில் கூடினர். அமெரிக்கப் புரட்சியின்போது இந்த அமைப்பிற்கு பிரிட்டிஷ் இராணுவம் மறுவாழ்வு அளித்தது.

1,196 கருப்பு அமெரிக்க அடிமைகள் ஆங்கில இராணுவத்திடம் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு ‘Nova Scotia’ என்ற இடம் கொடுக்கப்பட்டது. இவர்கள் வாழ்ந்த பகுதி நிரந்தரமான இரண்டாவது காலனியானது.

பிரிட்டிசாரை எதிர்த்துப் போர் புரிந்து பலமுறை தோல்வியையே சந்தித்தனர். அவற்றுள் 1898இல் நடைபெற்ற Hut Tax Warபுகழ்பெற்றது. 1762ஆம் ஆண்டு மே மாதம் முதல் மக்களைவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது.

1999ஆம் ஆண்டுவரை இருந்த ஒற்றையாட்சி முறை ஒழிந்து பல கட்சி ஆட்சிமுறையாக மாறியது. ஊழல், தவறான நிருவாகம் நடைபெற்றதுடன் நாட்டிலிருந்த வைர வளங்கள் சுரண்டப்பட்டன.

1991 முதல் 2002 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நாட்டின் உள்கட்டமைப்பும் சீர்குலைந்தது. கினியா, லைபீரியாவில் பலர் அகதிகளாகக் குடியேறினர். பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் சபையில் உறுப்பினராக அங்கம் வகிக்கிறது.

புவியியல் அமைப்பு:

பெரும்பாலான பகுதிகள் கடற்கரைச் சமவெளிகளால் ஆனது. மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் வடக்கிலும் வடகிழக்கிலும் கினியாவும், தெற்கிலும் தென்கிழக்கிலும் லைபீரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. ரகேல், மாவோ என்னும் ஆறுகள் நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன.

கிழக்கு சியார்ரா லியோனில் உள்ள பீடபூமியில் உயர்ந்த மலைத்தொடர் (1,948மீ, 6.39 அடி) (Bintumani) உள்ளது. 400 கி.மீ. நீளமுடைய அழகிய கவர்ச்சிகரமான அட்லாண்டிக் கடற்கரையைப் பெற்றுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய துறைமுகமான Coastal Peninsula
அருகில் சியார்ரோ லியோனின் பிரீடவுன் துறைமுகம் உள்ளது.

கல்வி

அரசுப் பள்ளிகளில் கட்டாயத் தொடக்கக் கல்வி (Primary Education) முறை நடைமுறையில் உள்ளது. தொடக்கக் கல்வி 6 வருடங்களும், மேல்நிலைக் கல்வி 3 வருடங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

உள் நாட்டுப் போர் நடைபெற்றபோது 1,270 பள்ளிகள் அழிந்தன. போர் முடிந்ததும் பெரும்பாலான பள்ளிகளை மறுசீரமைப்பு செய்தனர். வயது வந்தோரில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் படிக்காதவர்களாக உள்ளனர்.

3 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 1827ஆம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் நிறுவப்பட்ட பழைமை வாய்ந்த பல்கலைக்கழகம் (Fourah Bay College) உள்ளது.

வேளாண்மை:

பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்கின்றனர். நெல், பருத்தி, கோகோ, புகையிலை, இஞ்சி, ஆரஞ்சு, பனைவகைப் பொருள்கள், பருப்பு வகைகள் முக்கிய விளைபொருள்களாக உள்ளன.

ஏற்றுமதிப் பொருள்கள்:

வைரம், இரும்புத் தாது, பனை, பருப்பு வகைகள், கோகோ, காபி.

இறக்குமதிப் பொருள்கள்:

தேவையான உணவுப் பொருள்கள், பெட்ரோலியப் பொருள்கள், எந்திரங்கள், இரசாயனப் பொருள்கள்

கனிம வளம்:

பிளாட்டினம், தங்கம், வைரம், பாக்சைட், இரும்புத்தாது

சுற்றுலாத் தலங்கள்

ஃபிரீடவுன் நகரம், புன்சி தீவு (Bunce Island), வாழைத் தீவு, லக்கா டவுன், புரே கடற்கரைகள், சிம்பன்சிகள் சரணாலயம்.

- மலர்

Share