பிஞ்சுகளின் கேள்விகள்; ஆசிரியர் தாத்தாவின் பதில்கள்
Print

ஆணும் பென்ணும் சமம் என்பது சாத்தியமா?

பெரியாரின் கொள்கைகளில் இந்தக் காலத்துக்குப் பொருந்துவது எது?

பெரியாரிடம் பிடித்தது எது?

கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் நம்முடைய  ஆசிரியர் தாத்தா கலந்து கொண்டார்.அங்கு வந்திருந்த சிங்கப்பூர் இளையதலைமுறை பிஞ்சுகள், தங்களின் மனத் தில் தோன்றிய கேள்விகளைத் தயங்காமல் கேட்டனர். நம்முடைய ஆசிரியர் தாத்தாவும் சளைக்காமல் பதில் சொன்னார்.அவற்றில் சில சுவையான கேள்விகளும் பதில்களும் இங்கே பிஞ்சு வாசகர்களுக்காக...   செல்வி வைத்தீஸ்வரி: பெரியார் சொல்கிறார் ஆணும், பெண்ணும் சமமாக இருக்க வேண்டும் என்று. அது சாத்தியம் தானா?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி : அது நடைமுறை சாத்தியம் ஆகி இருக்கிறது. வலது கால், இடது கால் இதில் எது முக்கியமானது. இரண்டும்தான். மூளையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை.  பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தபோதே பிறவி பேதம் கூடாது- பிறப்பினால் ஒருவர் உயர்ந்தவர், மற்றொருவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இருக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளார். ஆணும் பெண்ணும் சமம். உலகளவில் அனைத்துத் துறைகளிலும் இது நடைமுறைக்கு வந்துவிட்டது.

கேள்வி: பெரியார் கட்சியில் உள்ளவர்கள் ஏன் கருப்புடை அணிகிறார்கள்?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி: சிங்கப்பூரில் ஜாதி இல்லை. நீங்கள் எல்லோரும் மனிதர்களாக இருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. மனிதர்கள் ஜாதியோடு பிறந்து, ஜாதியோடு வாழ்ந்து, ஜாதியோடு இறக்கிறார்கள். மனிதன் செத்துப் போனாலும் ஜாதி சாவதில்லை, ஜாதிக்கொரு சுடுகாடு இருந்த நிலையையெல்லாம் பெரியார் போராடி மாற்றியுள்ளார். சூத்திரன் என்றால் இழி குலத்தவர்கள் அதாவது தாசி புத்திரன் என்கிற பெயர் மனுதர்மத்தில் உள்ளது. 8ஆவது அத்தியாயத்தில் 416 ஆவது சுலோகத்தில் இது எழுதப்பட்டிருக்கிறது. அந்த இழிவைக் காட்டுவதற்காக அதிலிருந்து வெளிவர வேண்டுமென்று நினைவூட்டவும் ஒரு அடையாளமாக சமூகப் புரட்சியாளராக இருந்த பெரியார் அவர்கள் கருப்புச்சட்டை  அணிய வைத்தார்கள்.

கேள்வி: பெரியாருக்கு முன்மாதிரி யார்?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி: பெரியாருக்கு முன்மாதிரி பெரியார்தான். பெரியார் ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாளர்.  தன்னுடைய வாழ்நாள் அனுபவங்களிலிருந்தும் மக்களோடு மக்களாகப் பழகியதாலும் ஏற்பட்ட ஒரு நடைமுறை அனுபவக்காரர். பெரியார் திரைப்படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

செல்வி: இன்றைய கணினி, அறிவியல் காலத்தில் பெரியாரின் கொள்கைகள்  எவ்வாறு பொருந்தும்?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி : தற்போதைய அறிவியல் காலத்திலும் கம்ப்யூட்டருக்கு ஆயுத பூசை கொண்டாடி கம்ப்யூட்டருக்குப் பொட்டு வைத்து தீப ஆராதனை காட்டுகிறார்கள். அதனால் கம்ப்யூட்டர் வந்தால் மட்டும் போதாது. பெரியாருடைய பகுத்தறிவும் தேவை. முன்பு அறிவியல் பரவாத காலத்தில் மூட நம்பிக்கை குறைவாக இருந்தது. ஆனால், அறிவியல் பரவியுள்ள இக்காலத்தில்  அறிவியல் கருவிகளைக் கொண்டே அறிவியலுக்கு விரோதமான கருத்தைப் பரப்புகிறார்கள். அதனால் பெரியார் இன்றும் தேவைப்படுகிறார், என்றும் தேவைப்படுவார். அறிவியல் காலத்தில் மனிதர்கள் இன்று செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் வருகிறார்கள். ஆனால், அதே மனிதர்கள் கோவில் கர்ப்பகிரகத்துக்குள் போக முடியவில்லை. ஆதலால், செவ்வாய்க் கிரகத்துக்குப் போக விஞ்ஞானம் தேவை. கர்ப்பகிரகத்துக்குப் போக பெரியார் தேவை. அவசியம் பெரியார் என்றும் தேவைப்படுகிறார். செல்வி நிஷா: பெரியார் சொன்ன அறிவுரைகளுள் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எது பொருந்தும்?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி: யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பாதே! உன் அறிவு என்ன சொல்கிறதோ அதை நம்பு! என்று பெரியார் சொன்னார். பெரியார் சொன்ன அறிவுரைகளிலேயே பகுத்தறிந்து முன்னேறு என்பதுதான் சிறப்பானது.

செல்வி சர்வன்ஷா: பாரம்பரியக் கலாச்சாரங்களில் பெரியார் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி: பெரியார் ஒரே பற்றுதான். அது அறிவுப் பற்று _ -வளர்ச்சிப் பற்று. பெரியார் தன் அறிவுக்குச் சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டிருக்கிறார். உதாரணமாக, தமிழ் வருடப்பிறப்பென்று 60 வருசங்களைச் சொல்றாங்க, அந்த 60இல் ஒரு சொல்கூட தமிழ்ச் சொல் கிடையாது. ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்று நினைத்து தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாட வேண்டும் என்றார். அறிவுக்குப் பொருந்தாத பழைய ஆபாசக் கதையைப் புறக்கணிக்கச் சொன்னார். இன்னும் எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.

செல்வி சரண்யா: பெரியாருக்கு ஏன் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி: 1938இல் சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டுனாங்க, அதில் மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரும் பலரும் சேர்ந்து இதுவரை தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேற்றத்துக்கு யாரும் செய்யாத தொண்டைச் செய்ததற்காகவும், ஜாதி ஒழிப்புக்காகவும், மூடநம்பிக்கை ஒழிப்புக்காகவும் தன் வாழ்நாளையே ஒப்படைத்த ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்குகிறோம் என்று பெண்கள் அறிவித்தார்கள். ஏனெனில், பெண்கள்தான் எதையும் விரைவில் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அந்தச் சிறப்பு பெண்களுக்குத்தான் உண்டு.

செல்வி குந்தவி: பெரியாருடன் நீண்ட காலம் நீங்கள் இருந்துள்ளீர்கள். அதில் அவரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக எதைக் கருதுகிறீர்கள்?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி : பெரியாரிடம் பிடித்தவைகள் பல்வேறு இருந்தாலும், அவருடைய கடும் உழைப்பு, சிக்கனம், அவரின் பெருந்தன்மை, சிறுவர்களிடமும்கூட அதிக மரியாதை செலுத்துவது ஆகியவை மிகவும் பிடித்தவை. இவைகளை வேறு எந்தத் தலைவரிடத்திலும் பார்க்க முடியாது.

பொறியாளர் சிவகாமி: பெரியார் சொன்ன சீர்திருத்தங்கள். இன்றைய காலகட்டத்தில் எந்த அளவுக்கு அவர்கள் கருத்து மக்களிடம் சேர்ந்து அதைப் பின்பற்றுகிறார்கள்?

அதனால், மக்கள் முன்னேறி இருக்கிறார்களா?

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி : சமூக நீதியைப் பொறுத்தவரையில் பெரியார் காலத்திலேயே 50 சதவிகிதம் பார்ப்பனர் அல்லாத மக்கள் பெறுவதைக் கண்டார். பின்னர், மண்டல் கமிஷன் வந்த பிறகு, சாதாரண எளிய பிள்ளைகள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் என்று எல்லா நிலைகளிலும் பெண்கள் மற்றவர்கள் என்று வரக்கூடிய வாய்ப்புகள் வந்தது. இதற்காக பெரியார் காலத்திலேயே முதல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

பிறகு 69 சதவிகிதம் பாதுகாப்பு சட்டம் பெரியார் தொண்டர்களால் ஏற்பட்டது. இன்றைக்கு இந்தியா முழுவதும் சமூகநீதி பின்பற்றப்படுகிறது. இதனால் மக்கள் நல்ல பலன் பெற்றிருக்கிறார்கள். முன்னேறி இருக்கிறார்கள். இது எங்கள் நாட்டு அனுபவம்.

Share