Home 2012 பிப்ரவரி வானத்தில் மிதக்கும் ஆகாயக் கப்பல்
வெள்ளி, 23 ஏப்ரல் 2021
வானத்தில் மிதக்கும் ஆகாயக் கப்பல்
Print E-mail

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

(தந்தை செல்வம், தாய் பூங்கொடி, மகள் பொன்மணி)

தந்தை செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறார். மகள் பொன்மணி தந்தையிடம் வந்து...

பொன்மணி: அப்பா! ஆகாய விமானம் என்பது போல் ஆகாயக் கப்பல் என்பது இருக்கிறதாமே

செல்வம்: பொன், நான் செய்தித்தாள் படித்து முடிக்கிறவரை தொல்லை தராதே.

பூங்கொடி: ஏங்க, நம்ம பெண் ஆசை, ஆசையாய் அறிவியல் சம்பந்தமாய்த்தானே கேள்வி கேட்கிறாள். பத்துத் தலை ராவணன், பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் பற்றிக் கூறுங்கள் என்றா கேட்கிறாள்?

செல்வம்: பூங்கொடி, நீயும் எம்.எஸ்சி படித்தவள்தானே? நீ சொல்வதுதானே. செய்தித்தாள் படிக்கிற நேரத்தில் தொந்தரவு வேண்டாம் என்றுதான் சொன்னேன்.

பூங்கொடி: நீங்க சொல்ற மாதிரி, எங்க அப்பா, பெண்கள் எல்லாம் படிக்கணும், நல்லாப் படிக்கணும்னு பெரியார் அய்யா சொல்றதைக் கேட்டுப் படிக்கவைச்சது வாஸ்தவம்தான். ஆனால், இதைப் பத்தியெல்லாம் எனக்கு அவ்வளவாத் தெரியாதே. அதனாலேதான் உங்களைச் சொல்லச் சொன்னா, என்னமோ பிகு பண்றீங்களே.

செல்வம்: நானும் உன்னைப் போலத்தான். விண்வெளி சமாச்சாரம் எல்லாம் அவ்வளவு விளக்கமாச் சொல்லிக் கொடுக்கிற அளவுக்கு எனக்கும் தெரியாதே.  (கதவைத் தட்டும் ஓசை)

பூங்கொடி: இருங்க! யாரோ கதவைத் தட்டுற மாதிரி இருக்கு. யாருன்னு பார்க்கிறேன். அடேடே உங்க மைத்துனர். என் அண்ணன் அன்புச் செல்வன். வாங்க! அண்ணே!

பொன்: ஆகா! வாங்க மாமா! வணக்கம் மாமா! வாங்க!

செல்வம்: வாங்க மாப்பிள்ளே! வாங்க!

அன்பு: எனக்கு மூன்று நாட்கள் விடுமுறை. தங்கை, மருமகள் உங்களைப் பார்த்துட்டுப் போகலாமென்றுதான் வந்தேன்.

பூங்கொடி: என் அண்ணன் ஏதோ ஏரோனாட்டிக் எஞ்சினியர் என்றுதான் பேரு. எட்டிப் பார்க்கிறதே அபூர்வம். சரி! உங்க அத்தானிடம் மருமகளிடம் பேசிக்கொண்டு இருங்க. முதலில் காபி, அப்புறம் சூடா இட்லி, தக்காளிக் கொத்சு.

செல்வம்: நல்லா மாட்டிக்கிட்டீங்க. மூன்று நாளைக்கு உங்க தங்கை சமையல் மட்டுமில்லே. உங்க மருமகள் ஆகாயக் கப்பல், ராக்கெட்டு அது இதுன்னு தொலைத்து எடுத்திடுவா. அப்பாடா! ஒரு வழியாய் நான் தப்பித்தேன்.

பூங்கொடி: (உள்ளிருந்தவாறே) நானும் தப்பித்தேன். ஆனால் ஒன்னு, நம்ம பொன்மணி மிகவும் கொடுத்து வைத்தவள். எங்க அண்ணன் பார்த்தீங்களா ஏரோனாட்டிக் எஞ்சினியர்.

பொன்: மாமா, எனக்கு நிறையச் சந்தேகங்கள். இந்த ஆகாயக் கப்பல், விண்வெளி ஓடம் இதைப்பற்றியெல்லாம், உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இல்லையே.

பெர்டினாண்ட் வான் ஜெப்ளின்

அன்பு: என்னம்மா நீ இப்படிக் கேட்டுட்டே. ஆண்கள் மட்டும்தான் அறிவு பெறணுமா? பெண்களும் சமமானவர்கள்னு தந்தை பெரியார் சொல்ல வந்ததைக் கடைப்பிடிக்க விரும்பும் நான் அப்படி நினைப்பேனா? இன்று மட்டுமல்ல. மூன்று நாளும் எவ்வளவு சந்தேகம் வேண்டுமானாலும் கேளு. நான் இருக்கிறேன். கவலையே வேண்டாம்.

பொன்: அய்யா.. தங்க மாமா! எங்க மாமா! மாமா, விமானக் கப்பல்கள் எனப்படும்    Air Ships என்று இருந்தனவாமே. அவையும் ஏரோப்ளேன் மாதிரித்தானே.

அன்பு: ஏரோப்ளேன் - விமானம் வேறு ஆகாயக் கப்பல் வேறு. ஆகாயக் கப்பல் வாயு நிரப்பிய பலூன் எனலாம். காஸ் அடைத்த பலூனைக் கட்டியுள்ள நூலை விட்டுவிட்டால் அது உயரே போய்விடும். ஏன்?

பொன்: பலூனில் உள்ள காஸ் அதாவது வாயு, சாதாரணக் காற்றைவிட லேசானது என்று படித்திருக்கிறேனே.

அன்பு: ஆகாயக் கப்பல் பல நூறடி நீளம் கொண்டது. வெள்ளரிக்காய் வடிவம் கொண்டது. அதில் காற்றைவிட இலேசான வாயு நிரப்பப்பட்டு இருக்கும். எனவே, அது வானில் எழும்பும். அதை முன்னே செலுத்த அதில் எஞ்சின் இருக்கும். ஆனால், இறக்கை கிடையாது.

பொன்: அதில் பிரயாணம் செய்ய முடியுமா?

அன்பு: ஏன் முடியாது. அதன் அடிப்புறத்தில் பிரயாணிகளுக்கான பகுதி இருக்கும். அப்பகுதி மிகவும் விஸ்தாரமாக இருக்கும். எனவே, பிரயாணிகளுக்குத் தனித்தனிப் படுக்கை அறைகள், சாப்பாட்டுக் கூடம், நடன அறை ஆகியன இருக்கும்.

பொன்: விமானத்தில் பயணம் செய்தால் உட்கார்ந்து, சாய்ந்துதான் பயணம் செய்ய வேண்டும். ஆகாயக் கப்பலில் தனித்தனிப் படுக்கை அறைகள் கேட்கவே வியப்பாக இருக்கிறதே, விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள். இந்த ஆகாயக் கப்பலைக் கண்டுபிடித்தவர்கள் யார்?

அன்பு: 1851 அல்லது 1852ஆம் ஆண்டில் ஹென்றி கிப்பர்டு என்பவர்தான் முதன்முதலாக ஆகாயக் கப்பலை உருவாக்கினார். ஆனால், அது மணிக்கு 5 மைல் வேகத்தில்தான் பறப்பதாக இருந்தது.

பொன்: ஆகாயக் கப்பல்களுக்கு ஜெப்ளின் என்று பெயர் இருக்கிறதாமே.

அன்பு: பரவாயில்லையே, நீயும் தெரிந்து வைத்திருக்கிறாய் போலிருக்குதே. ஜெர்மன் நாட்டவரான கௌண்ட் பெர்டினாண்ட் வான் ஜெப்ளின் என்பவரால் 1870ஆம் ஆண்டில் ஆகாயக் கப்பல் உருவாக்கப்பட்டு 1900ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி பறக்கவிடப்பட்டது. இவ்வித ஆகாயக் கப்பல்கள் அவர் பெயராலேயே ஜெப்ளின் என அழைக்கப்பட்டன.

செல்வம்: முதல் உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் பிரிட்டன் மீது ஜெப்ளின்களைப் பயன்படுத்தினர் என்று கேள்விப்பட்டோம். அதுதானா இது?

அன்பு: ஆகாயக் கப்பலில் சில சாதகங்கள் இருந்தன. விமானங்களைவிட நிறைய எடையை ஏற்றவும், எந்த இடத்திலும் இறங்கவும் முடிந்தது, ஓரிடத்தில் நிலையாக இருக்க முடிந்தது.

பொன்: அப்படியானால் ஆகாயக் கப்பல் வேகமாகப் போகாது அப்படித்தானே.

அன்பு: ஆம்! மெதுவாகச் செல்பவைதான். 1918ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆர்-_14 எனும் ஆகாயக் கப்பல் பிரிட்டனிலிருந்து 3,200 மைல் தூரத்தைக் கடந்து அமெரிக்கா செல்ல 102 மணி நேரமாயிற்று.

பொன்: ஒரு பத்து இருபது மணி நேரம் எங்கே! 108 மணி நேரமா?

அன்பு: ஜெர்மானியரின் கிராப் ஜெப்ளின் 1928இல் அமெரிக்கா சென்று திரும்பியது. உலகை ஒருமுறை சுற்றி வந்தது. 1937 வரை பயன்பாட்டில் இருந்தது. இதனைத் தொடர்ந்து மணிக்கு 180 மைல் செல்லும் ஹிண்டன்பர்க் எனும் 800 அடி நீள ஆகாயக் கப்பல் கட்டப்பட்டது.

பொன்: இன்றும் இருக்கிறதா மாமா, அந்த ஆகாயக் கப்பல்.

அன்பு: 1937இல் ஹிண்டன்பர்க் விழுந்து  நொறுங்கியதுடன் ஆகாயக் கப்பலின் சகாப்தம் முடிந்தது. அதற்குமுன் 1933இல் அமெரிக்காவின் அக்ரான் 76 பேருடன் விழுந்து நொறுங்கியது. அதற்குமுன் பிரிட்டனின் ஆர்-101 பிரான்சில் விழுந்து நொறுங்கி 48 பேர் இறந்தனர்.

பொன்: கேட்கவே பயமாக இருக்கிறதே. ஏன் இந்த விபத்துகள்?

அன்பு: அந்நாட்களில் ஆகாயக் கப்பல்களில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டது. நைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. எனவேதான் ஆகாயக் கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள் ளாயின. எனவே விமானக் கப்பல்கள் மவுசு இழந்தன.

பொன்: இதற்கு வேறு வழி கண்டு பிடிக்கவில்லையா?

அன்பு: ஏன் இல்லை. ஹீலியம் வாயுவை நிரப்பினால் தீப்பிடிக்காது. எனவே, ஹீலியம் நிரப்பப்பட்ட ஆகாயக் கப்பலை உருவாக்க விஞ்ஞானிகள் யோசனை கூறுகின்றனர்.

பொன்: ஆகாயக் கப்பல்களே இன்று இல்லையா?

அன்பு: அமெரிக்காவில் கரையை அடுத்த கடற்பகுதிகளில் ரோந்துப் பணிக்கு இப்போதும் பயன்படுத்துகின்றனர். இன்றைய நவீன அதிவேக விமானங்களுக்கு மத்தியில் ஆகாயக் கப்பல்கள் போட்டி போடமுடியாது. ஏனெனில் வேகக் குறைவுதான் எனினும் கார்கள், விமானங்கள், தொழிற்சாலை இயந்திரங்களை ஏற்றிச் செல்ல ஆகாயக் கப்பலைப் பயன்படுத்தலாம், செலவும் குறைவு என்கின்றனர்.

பூங்கொடி: வாருங்கள்! நம் வீட்டு மல்லிகைப்பூ இட்லிக் கப்பல் சட்னிக் கடலில் மிதக்கிறது, சேர்ந்து சுவைக்கலாம்.

Share