Home 2012 மார்ச் கண்ணில் தெரியும் வானம்
சனி, 19 செப்டம்பர் 2020
கண்ணில் தெரியும் வானம்
Print E-mail

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

அன்பு: பொன்மணி சமீபத்தில் விழாக்காலங்களில் ராக்கெட் வாணம் வெடித்தாயல்லவா? வானில் இராட்சத இராக்கெட் செலுத்துகிறார்கள் அல்லவா? இரண்டுக்கும் ஓர் ஓற்றுமை உண்டு தெரியுமா?

பொன்மணி: ஓ! தெரியுமே! திரியில் நெருப்பை வைத்ததும் இராக்கெட் வாணம் நெருப்புப் பொறியைக் கக்கியபடி உயரே பாய்கிறது. அதேபோல் இராட்சத இராக்கெட் உள்ளே இருக்கும் எரிபொருள் எரிந்து வேகமாகப் பீச்சப்படுவதன் எதிர் விளைவாக இராக்கெட் முன்னே செல்கிறது. இராக்கெட் பற்றி எனக்குத் தெரிந்தது எல்லாம் இவ்வளவுதான்.

பூங்கொடி: இந்த வெடிகளுக்கும் சீனாவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறதே. அதுபோல் இராக்கெட்டிற்கும்....

அன்பு: நீ சரியாகத்தான் யோசித்து இருக்கிறாய். முதன்முதலில் இராக்கெட்டைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்தான் என்கிறது வரலாறு. மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் சண்டையிட்டபோது இராக்கெட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறான்.

பொன்மணி: அதெல்லாம் பழைய செய்தி. இராக்கெட் பற்றி இன்றைய புதிய செய்திகளைக் கூறுங்கள்.

கே.இ.சியால்கோவ்ஸ்கி

அன்பு: இருந்தாலும் இன்றைய நாளில் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யாதான் முன்னோடி. ரஷ்யாவைச் சேர்ந்த கே.இ.சியால்கோவ்ஸ்கி இராக்கெட் இயக்கம் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து, விண்வெளியில் பயணிக்க இராக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று முதன்முதலாகக் கூறியவர்.

திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் இராக்கெட்டை வடிவமைத்தவரும் இவரே. விண்வெளி இயலின் தந்தை இவர் ஆயினும் விண்ணில் இராக்கெட் விடுவதில் முந்திக்கொண்டவர் அமெரிக்கர்தாம்.

பொன்: ஆச்சரியமாயிருக்கிறதே! அது எப்படி?

ராபர்ட் ஹட்சின்ஸ் கொடார்ட்

அன்பு: அமெரிக்காவில் ராபர்ட் ஹட்சின்ஸ் கொடார்ட் என்பவர் இராக்கெட்டுகள் பற்றி ஆராய்ச்சி நடத்தினார். 1926ஆம் ஆண்டில் முதலாவது திரவ எரிபொருள் இராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

பொன்: மற்ற நாட்டுக்காரர்கள் யாரும் ராக்கெட் குறித்து முயற்சி ஏதும் செய்யவில்லையா?

அன்பு: 1923இல் ருமேனியாவின் கணிதப் பேராசிரியர் ஹெர்மான் ஓபர்த் நூல் ஒன்றை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர் இராக்கெட்டைப் போர் ஆயுதமாகப் பயன்படுத்த ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஹிட்லரின் படை வி-2 என்னும் இராக்கெட் குண்டுகளை ஏவியது. தரையிலிருந்து கிளம்பி 50 மைல் உயரம் சென்று ஒரு டன் வெடிமருந்துடன் மணிக்கு 3,500 மைல் வேகத்தில் இலக்குகளின் மீது விழுந்த குண்டுகள் உலகைத் திகைக்கச் செய்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ரஷ்யாவும், அமெரிக்காவும் இராக்கெட் துறையில் போட்டி போட்டு முனைப்புக் காட்டின. இதில் ஓர் உண்மை தெரியுமா? ஜெர்மனியிலிருந்து குடிபெயர்ந்த விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும் உதவினர்.

பொன்: இராக்கெட்டின் பின்புறத்திலிருந்து எரிபொருள் பயங்கர வேகத்தில் பீச்சிடும்போது மிகுந்த வெப்பம் ஏற்படாதா?

அன்பு: சரியான கேள்வி கேட்டாய். மிகுந்த வெப்பம் ஏற்படத்தான் செய்யும். இராக்கெட் எஞ்சின் உருகிப்போய் விடாதபடி இருக்க கலப்பு உலோகங்கள் பயன்படுத்துகின்றனர்.

பொன்: என்னென்ன கலப்பு உலோகங்கள் பயன்படுத்துகிறார்கள்.

அன்பு: அதுதான் இரகசியமாக இருக்கிறது. இவ்வகையான கலப்பு உலோகங்களை எப்படித் தயாரிப்பது என்பது போன்ற தொழில்நுட்பங்களை இராக்கெட் துறையில் முன்னேறியுள்ள நாடுகள் மிகவும் இரகசியமாக வைத்துள்ளன.

பொன்: காற்றே இல்லாத இடத்தில் இராக்கெட்டுகள் செயல்படுமா?

அன்பு: எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்குக் காற்று அதாவது ஆக்சிஜன் தேவை என்பதால் இராக்கெட் எஞ்சினில் எரிபொருள் எரிவதற்கு அதன் உள்ளேயே ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு உள்ளது.

பொன்: திட எரிபொருளைப் பயன்படுத்துகிறார்களா? திரவ எரிபொருளைப் பயன்படுத்துகிறார்களா?

அன்பு: பரவாயில்லையே. உன் ஆர்வம் பாராட்டத்தக்கதாய் இருக்கிறது. பெண்களும் இத்துறையில் ஆர்வம் செலுத்துவது பெரியார் கண்ட கனவை நிலைநாட்டுகிறது.

பொன்: என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? விண்ணில் பறந்து இந்தியப் பெண்மணி சாதித்துக் காட்டவில்லையா? ஆணும், பெண்ணும் சமம்தான்.

அன்பு: பூங்கொடி, என் மருமகள் என்ன போடு போடுறா பார்த்தியா, பெருமையா இருக்கு. இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் அறிவியல் சிந்தனையோடு வளரணும். அதுதான் வளர்ச்சி.

பொன்: மாமா, இந்த இராக்கெட்டுகளில் சில இரண்டடுக்கு மூன்றடுக்குகளாக இருக்கின்றனவே. அதைப் பற்றியும் சொல்லுங்கள்.

அன்பு: என் மருமகள் காரியத்திலேயே கண்ணாக இருக்கிறாள். சில மைல் உயரம் செல்லும் வான மண்டல ஆராய்ச்சி இராக்கெட்டுகள் பொதுவாக ஓர் அடுக்கு இராக்கெட்டுகளாக இருக்கும். செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான இராக்கெட்டுகள் ஒன்றன்மீது ஒன்று பொருத்தப்பட்டு மூன்றடுக்குகளாக இருக்கின்றன. இந்த மூன்றடுக்கு இராக்கெட்டில் அடிப்புறப் பகுதி எரிந்து தீர்ந்ததும் இராக்கெட் கூடு கழன்று விழுந்துவிடும். எனவே, அடிப்பகுதியில் இருந்த திரவம், கூடு ஆகியவற்றின் எடை போய்விடுவதால் இராக்கெட் வேகம் அடையும். இரண்டாவது அடுக்கு கழன்று விழும்போது கடைசிக் கட்ட இராக்கெட் பயங்கர வேகம் பெறும்.

பொன்: அது சரி! நாம் இராக்கெட் வாணம் விடும்போது நேரே உயரே போகாமல், சர் என்று பக்கத்தில் திரும்பி விடுகிறதே, அதுபோல் இராக்கெட் உயரே போகாமல் பக்கத்தில் பாய்ந்துவிட்டால்.

அன்பு: நல்ல கேள்வி கேட்டாய்... விண்வெளி இராக்கெட்டுகளில், அவை வழியறிந்து செல்வதற்கான கருவிகளும் இதன் இயக்கம் பற்றித் தகவல் அளிக்க நுட்பக் கருவிகளும், வேறு பல கருவிகளும் இருக்கும்.

பொன்: இராக்கெட்டில் போய் இலக்கை அடைந்துவிட்டு அதே இராக்கெட் திரும்ப முடியுமா?

அன்பு: அதுதான் முடியாது. இராக்கெட் மற்ற வாகனங்களிலிருந்து வேறுபட்டது. காரில் ஓர் ஊருக்குப் போகிறோம். ஊர் போய்ச் சேரும்போது காரின் எல்லாப் பகுதிகளும் கழன்று விழுந்து ஸ்டியரிங் வீலும், டிரைவர் சீட்டும் மிஞ்சினால் எப்படியோ அப்படித்தான் இராக்கெட் வாகனம் ஆகிறது.

செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தை வானுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் ஒரு வழிப் பயணத்திற்குத்தான் இராக்கெட் பயன்படுகிறது. எனவே, இவ்வகையில் செலவு அதிகம். இதனால்தான் அமெரிக்க நிபுணர்கள் ஷட்டில் கலத்தை உருவாக்கியிருக்கின்றனர். இதனைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்த முடியும்.

பொன்: அப்படியானால் ஏவுகணை என்று சொல்கிறார்களே அவையும் இராக்கெட்டும் ஒன்றுதானா?

அன்பு: ஓரிடத்தில் இருந்தபடி செலுத்தி எதிரியின் போர் விமானம், போர்க்கப்பல்கள், இராணுவ டாங்கி முதலிய போர்ச் சாதனங்களை அல்லது எதிரி நாட்டின் படைத் தலங்களை அல்லது நகரங்களைப் போய்த் தாக்கி அழிக்கிற போர் ஆயுதத்தை ஏவுகணை எனலாம்.

பொன்: இராக்கெட் தகவல்போலவே ஏவுகணைத் தகவல்களும் சுவையாக இருக்கும் போலிருக்கிறதே.

பூங்கொடி: சுவையாக இருப்பது இருக்கட்டும். சுவையாகச் சமைத்து இருக்கிறேன். முதலில் சாப்பிட்டு அப்புறம் பேசலாமே!

அன்பு: மாப்பிள்ளையும் வந்துவிடட்டும். அதற்குள் இந்த ஏவுகணை பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

பூங்கொடி: சரி, சரி, சீக்கிரம் முடியுங்கள். சூடு ஆறினால் சுவையிருக்காது.

அன்பு: தாக்க வேண்டிய இலக்கைப் பொறுத்து ஏவுகணைகள் வடிவிலும், அளவிலும், திறனிலும் வேறுபடுகின்றன. சிறிய ஏவுகணைகள் விமானம், கப்பல், டாங்கி முதலியவற்றைச் சில மைல் தூரமே பறந்து தாக்குபவை. இவை விமான, கப்பல், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள். இவை தரையிலிருந்து செலுத்தப்படுபவை.
பொன்: எதிரியின் விமானம், போர்க்கப்பல், அல்லது டாங்கிகள் ஓரிடத்தில் நிற்காமல் வேகமாகச் செல்பவை ஆயிற்றே. இவைகளை இலக்காக வைத்து ஏவுகணை எப்படித் தாக்கும்?

அன்பு: பயங்கரமான ஆளாயிருக்கியே. போற போக்கைப் பார்த்தால் என் மருமகள் ஏவுகணை விஞ்ஞானியாக மாறுவாள் போல இருக்கே. குறைந்த அளவு எதிரியின் போர் விமானம் மணிக்கு 1,000 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடும். எஞ்சின் இல்லாமல் விமானம் இயங்க முடியாது.  எஞ்சின் இயங்குவதால் விமானத்தின் பின்புறம் சூடான புகை வெளிப்படும். வெப்பத்தை மோப்பம் பிடித்துச் செல்ல விமான எதிர்ப்பு ஏவுகணையில் விசேஷ சாதனம் உள்ளது. வானில் பாயும் ஏவுகணை எதிரி விமானத்தின் சூடான புகை வெளிப்படும் பாதையைப் பற்றிக் கொண்டு எதிரி விமானத்தைவிட அதிக வேகத்தில் பறந்து சென்று அதாவது எதிரி விமானத்தைத் துரத்திச் சென்று தாக்குகிறது.

இதனால்தான் தரையிலிருந்து தாக்கும் ஏவுகணைகள், விமானத்திலிருந்து கிளம்பி எதிர் விமானத்தைத் தாக்குகிற ஏவுகணைகள் என இருவகைகள் உள்ளன. சில ஆயிரம் மைல் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் ஆங்கிலத்தில் அய்.ஆர்.பி.எம். (Intermediate Range Ballistic Missile) என்றும், கண்டம் விட்டுக் கண்டம் சுமார் 6,000 மைல் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆங்கிலத்தில் சுருக்கமாக அய்.சி.பி.எம். (Inter-Continental Ballistic Missile) எனப்படும் இவை குறைந்தபட்சம் 50 அடி நீளம் உடையவை.

பொன்: நீங்கள் சொல்வதன்படிப் பார்த்தால் இராக்கெட் என்பது இராக்கெட் இயக்கத் தத்துவ அடிப்படையில் இயங்குகிற ஒரு வாகனம். ஆனால், ஏவுகணை என்பது ஓர் ஆயுதம்.

அன்பு: மிகச் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டாய். இன்னும் தாமதித்தோமானால் என் தங்கை பூங்கொடி கோபித்துக் கொள்வாள். இதோ உன் தந்தையும் வந்துவிட்டார். சாப்பிடப் போவோமா?

பொன்: மாமா! அப்பா உடைமாற்றிக் கொள்வதற்குள் ஒரே ஒரு கேள்வி. செயற்கைக்கோளைச் செலுத்தும் திறன் கொண்ட இராக்கெட்டை அய்.ஆர்.பி.எம். அல்லது அய்.சி.பி.எம். போன்ற ஏவுகணைகளாக உருவாக்க முடியுமா?

அன்பு: முடியும். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இராட்சத ஏவுகணைகளை உருவாக்கும் போட்டியின் துணை விளைவாகத்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இராக்கெட்டுகள் உருவாயின. அய்.சி.பி.எம். ஏவுகணை உயரே கொண்டு செல்லும் அணு ஆயுதம் நாம் உயரே தூக்கி எறிந்த கல் கீழே விழுவதைப் போல் கீழ் நோக்கி விழுகிறது. ஏவுகணையிலிருந்து பிரியும் குண்டு மணிக்குச் சுமார் 16 ஆயிரம் மைல் வேகத்தில் தரை இலக்கை நோக்கிப் பாயும்.

பொன்: மாமா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை. ராக்கெட், ஏவுகணை பற்றி புத்தகத்தில் படித்தால்கூட விளங்கிக் கொள்ள முடியாத விஷயங்களை விளக்கிச் சொன்ன மாமாவுக்கு நன்றி. அம்மா! மாமாவுக்கு இன்றைக்கு இரட்டை இனிப்புப் போடும்மா!

அன்பு: உன் அன்பே இரட்டை இனிப்பு. ஏற்கெனவே சுகரில் மிதக்கும் எனக்கு இனிப்பு அதிகமாக வேண்டாம்.

Share