Home 2012 மார்ச் சின்னச் சின்ன செய்திகள்
திங்கள், 26 அக்டோபர் 2020
சின்னச் சின்ன செய்திகள்
Print E-mail

வெள்ளுடை வேந்தர்

சென்னை மாநகராட்சியின் தலைவராக நீதிக்கட்சி முன்னோடி சர். பி.டி.தியாகராயர் இருந்தபோது வேல்ஸ் நாட்டின் இளவரசர் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் லார்டு வெல்லிங்டன்.

தியாகராயரிடம், சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் வேல்ஸ் நாட்டு இளவரசரை நீங்கள்தான் வரவேற்க வேண்டும். வரவேற்பின்போது நாங்கள் குறிப்பிடும் முறையில் ஆடை அணிந்து வரவேண்டும் என்று சொன்னார் ஆளுநர்.

இதனைக் கேட்ட தியாகராயர், எனது வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டுடன் இளவரசர் என்னைப் பார்க்க விரும்பினால் அவரை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இந்த ஆடையோடு நான் அவரைப் பார்க்க முடியாது என நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என நினைத்து அமைதி கொள்வேன். இளவரசரை வரவேற்பதற்காக எனது வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை என்று குறிப்பிட்டு ஆளுநருக்குக் கடிதம் எழுதினார்.

தியாகராயரின் மன உறுதியைப் பார்த்து வியந்த ஆங்கில அரசு, அவர் வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி கொடுத்தது.

பதவியின் மதிப்பு

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, ஒருநாள் சாதிக் பாட்ஷாவுடன் திருச்சிக்கு காரில் சென்றார். வழியில் பொதுப்பணித் துறையினைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். எனவே, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாகியும் செல்ல அனுமதி கிடைக்காததால், உடனிருந்த சாதிக் பாட்ஷா பொறியாளர்களை அழைத்துக் கண்டித்தார்.

அண்ணா, அவர் கண்டிப்பதைப் பார்த்துச் சிரித்தார். இதனைப் பார்த்த சாதிக் பாட்ஷா, ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அண்ணா,

அந்தப் பொறியாளர்கள் நினைத்தால் அடுத்த தேர்தலில் நின்று மந்திரியாகலாம். ஆனால், நம்மால் இனிமேல் பொறியாளர்கள் ஆக முடியுமா? நம் பதவிக்கு உள்ள மதிப்பை நினைத்தேன். சிரிப்பு வந்துவிட்டது என்றாராம்.

கேலிக்குரியது

பெஞ்சமின் பிராங்ளின் சென்றிருந்த இலக்கியக் கூட்டம் ஒன்றில் பேசியவர்கள் அனைவரும் பிரெஞ்சு மொழியிலேயே பேசினர். பிராங்ளினுக்குப் பிரெஞ்சு மொழி தெரியாததால் ஒன்றுமே புரியவில்லை. எனினும், அதனை அவர் வெளிப்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை. அவருக்குத் தெரிந்த பௌலர் என்ற பிரெஞ்சுப் பெண், கூட்டத்தில் அமர்ந்திருந்தார். பௌலர் கைதட்டும் போதெல்லாம் இவரும் கை தட்டினார்.

கூட்டம் முடிந்ததும் பிரெஞ்சு மொழி தெரிந்த அவரது பேரன் அவரிடம் வந்து, என்ன தாத்தா, உங்களைப் பாராட்டிப் பேசிய போதெல்லாம் மற்றவர்களைவிட நீங்கதான் அதிகமா கை தட்டினிங்க என்று கூறினான்.

பிராங்ளின், தன் தவற்றினை நினைத்ததோடு, தெரியாத விசயத்தைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்வது கேலிக்குரியதாகிவிடும் என்பதையும் உணர்ந்தார்.


வெற்றியின் ரகசியம்

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் படைத்தளபதியாக ரோமல் என்பவர் இருந்தார். அனைத்துப் போர்களிலும் வெற்றியைக் குவித்தவர். ரோமலின் வெற்றியின் ரகசியத்தை அறிய விரும்பினர் நிருபர்கள். ரோமலின் இருப்பிடம் தேடிச் சென்றனர்.

நிருபர்கள் சென்ற வழியில் உடைந்த நிலையில் டாங்கி ஒன்று இருந்தது. டாங்கியின் அடியில் படுத்துக்கொண்டு உற்சாகமாக டாங்கியைச் சரி செய்யும் வேலையினை ஒருவர் செய்து கொண்டிருந்தார். அவர் முகம் முழுவதும் கரியுடனும், உடை முழுவதும் எண்ணெயுடனும், தூசி படிந்தும் காணப்பட்டார்.

நிருபர்கள் அவரது அருகில் சென்று நாங்கள் ரோமலைப் பார்க்க வேண்டும். எங்களுக்கு வழிகாட்ட முடியுமா? என்றனர். உற்சாகத்துடன் எழுந்த அவர், நான்தான் ரோமல் என்றதும், பேட்டி எதுவும் எடுக்காமலேயே நிருபர்கள் திரும்பினர்.

அதிகாரமும் அபராதமும்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமியார் ஒருமுறை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் வேலை காரணமாகத் தங்கிவிட்டு சென்னை திரும்பினார்.

அடுத்த நாள் காலையில், அவரது கார் ஓட்டுநர் ஒரு பெரிய பலாப்பழத்தை நறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே ஓமந்தூரார், பலாப்பழம் எப்படிக் கிடைத்தது என விசாரித்தார். திண்டிவனம் விருந்தினர் மாளிகைத் தோட்டத்திலிருந்து பறித்து வந்ததாக ஓட்டுநர் கூறினார்.

அதைக் கேட்ட முதலமைச்சர் ஓமந்தூரார் 2 ரூபாயை எடுத்துக் கொடுத்து, உடனே திண்டிவனம் போய் பலாப்பழத்தைக் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறினார்.  மேலும், ஓட்டுநரின் ஊதியத்தில் தான் கொடுத்த 2 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று சொன்னார்.

இதனைக் கேட்ட ஓட்டுநர், அந்தப் பழத்தின் விலையே 1 ரூபாய்தான். அதைக் கொடுக்க 2 ரூபாய் செலவு செய்ய வேண்டுமா அய்யா என்றதும், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியமைக்கான அபராதம் என்று கூறினார் அன்றைய முதலமைச்சர் ஓமந்தூரார்.

Share