தகவல் களஞ்சியம்
Print

ரூ.1,500க்கு மடிக்கணினி

வருங்கால இந்தியாவின் தூண்களாகிய இன்றைய மாணவர்களும் மடிக்கணியைப் (Laptop) பயன்படுத்தி தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள மத்திய அரசு ஆகாஷ் என்ற பெயரில் குறைந்த விலை மடிக்கணினியினை விற்பனை செய்து வருகிறது. ரூ.2,276 என்ற விலையில் 1 லட்சம் மடிக்கணினிகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகாஷ் 2 என்னும் பெயரில் ஆகாஷ் மடிக்கணினியைவிட கூடுதல் செயல்திறன்களை உள்ளடக்கி ரூ.1,500 என்ற விலையில் 10 லட்சம் மடிக்கணினிகள் வாங்க விண்ணப்பிக்கப்பட உள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் மடிக்கணினிகள் வழங்கப்பட இருப்பதால், கல்வி நிறுவனங்கள் ரூ.750 கட்டினால் மாணவர்களுக்கு இலவசமாகவே  கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார்.

7 கிலோ குழந்தை

சீனாவின் கெனான் (Henan) மாகாணத்தில்  7 கிலோ எடையுள்ள குழந்தை சீனப் புத்தாண்டு தினத்தன்று பிறந்துள்ளது. இந்தக் குழந்தையின் பெயர் சுன் சுன் (Chun Chun) என்பதாகும்.

சாதாரணமாகப் பிறக்கும் குழந்தையின் எடையைவிட இந்தக் குழந்தையின் எடை 2 மடங்கு அதிகமாகும். ஏற்கெனவே உள்ள கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது இந்தப் பிஞ்சு. றீ

மூங்கில் செல்பேசி

பிரிட்டனின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மாணவர் கிரான்ஸ்காட் உட்ஹவுஸ் (வயது 23) மூங்கிலால் செல்பேசி தயாரித்து சாதனை படைத்துள்ளார். மற்ற செல்பேசிகளில் உள்ள புகைப்படம் எடுக்கும் வசதி உள்பட பிற தொழில்நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைத்துள்ளார்.

வளவளப்புத் தன்மையுடனும் உடையாத நிலையிலும் இருப்பதற்காக 4 வருடங்கள் வளர்ச்சியடைந்த இளம் மூங்கில்களைப் பயன்படுத்தியுள்ளார். செல்பேசி தயாரிக்கும் படிப்புப் படித்துவரும் இவர், அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்வதற்காக இந்தச் சாதனையைச் செய்ததாகக் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மூங்கில் செல்பேசிகள் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. றீ

மாபெரும் மரகதம்


நவரத்தினங்களில் ஒன்று மரகதம். இங்கிலீஷில் இதன் பெயர் emarald. பொதுவாக சிறிய அளவுகளிலேயே நவரத்தினக் கற்கள் இருக்கும். மோதிரங்களில், சங்கிலிகளில் பதித்து அணிந்து கொள்வார்கள். ஆனால், இந்த மரகதக் கல் உலகின் மிகப் பெரியதாம். 5.2 கிலோ எடை கொண்ட இந்தக் கல் 57,500 காரட் மதிப்புடையது. இதன் உரிமையாளர்கள் ஏலம் விட முடிவு செய்துள்ளனர். தொடக்க விலை எவ்வளவு தெரியுமா? ஒரு மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்தியப் பண மதிப்பில் ரூ.4.94 கோடி.ஏலம் விடப்படும் போது இதன் மதிப்பு தொடக்க மதிப்பிலிருந்து பல மடங்கு அதிகமாகக் கேட்கப்படும் என்கிறார்கள். இத்தனை தகவல்களைவிட இன்னொரு முக்கியத் தகவல் என்ன தெரியுமா? இந்தக் கல்லை விற்றவர் ஒரு இந்திய வியாபாரியாம். அவர் யார் என்பது ரகசியம் என்கிறார்கள் இதன் உரிமையாளர்கள். றீ

Share