Home 2012 ஏப்ரல் உலகப் புகழ் பெற்றவர்கள்
திங்கள், 03 ஆகஸ்ட் 2020
உலகப் புகழ் பெற்றவர்கள்
Print E-mail

எளிமை வாழ்விற்கு வித்திட்ட ஹென்றி டேவிட் தோரோ

HENRY DAVID THOREAU 12-07-1817 to 06-05-1862

- சாரதாமணி ஆசான்

மனித குலம் பேராசையில் சிக்குண்டு சிதறாமல் எளிய வாழ்வு வாழ விழைந்த செம்மல் ஹென்றி டேவிட் தோரோ. இயற்கை என்றாலே எளிமை. அதனால் பெறுவது இனிமை. எளிமையும் இனிமையும் இணைந்த வாழ்வு பெருமைக்குரியது. இந்த வாழ்க்கைத் தத்துவத்தை வாழ்ந்து காட்டியவர் தோரோ. அமெரிக்க எழுத்தாளரும், கவிஞரும், மெய்யியலாளரும் - இயற்கை நோக்கரும் ஆகிய தோரோ மக்களிடம் சொல்லவந்த கருத்துக்கள் அவரது நுண்ணிய நூல் அறிவை - மதிநுட்பத்தை உயர்த்துவதாக மட்டும் அமையவில்லை. அவை எளிய வாழ்வை - சரித்திர வாழ்வை - நம்பிக்கைக்கு உகந்த வாழ்வை வகைப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன. வாழ்வு இயற்கையுடன் ஒன்றியிருத்தல் வேண்டும் என்பதைக் குறிப்பிடும் இவர்: இடையீடில்லா வியப்பையூட்டும் இயற்கையின் அரவணைப்பில் இரண்டறக் கலத்தல் வேண்டும் - எண்ணற்ற அலைகளை உடைய கடல்கள் - அந்த அலைகளில் சிக்கிச் சிதறுண்ட பொருட்கள் - இடியுடன் கூடிய மேகக் கூட்டங்கள் - வாரக் கணக்கில் தொடர்ந்து கொட்டும் மழைநீர் - அந்நீரிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் சுத்தமான நீரோடைகள் (ஆறுகள்) ஆகியவை நமக்கு சீரிய வாழ்க்கை முறைகளைக் கற்றுத் தரும் என்கிறார். மனிதன் தன் சகமனிதர்களிடமிருந்து அன்பையோ, பணத்தையோ, புகழையோ பெற விரும்புவதை விடுத்து எது உண்மையானதோ அதைப் பெறுவதே சிறப்பு என்று குறிப்பிடுகிறார்.

பிறப்பும் இளமையும்:

இவர் 1817ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 12ஆம் நாள் அமெரிக்க நாட்டின் மாசாசுட்சு பகுதியில் கன்கார்டு (Concord) எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜான் தோரோ சிறந்த தொழில்நுட்ப வல்லுநர். தாயார் சிந்தியா குடும்பத்தைப் பேணிக் காக்கும் கடமையுள்ள பெண்மணி. இவருடன் பிறந்தவர்கள் மூவர், இவரது மூத்த சகோதரர் ஜானும் - சகோதரி ஹெலனும் ஆசிரியர்களாகப் பணியாற்றி இவரை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முறையாகக் கல்வி பயில வாய்ப்பளித்தனர். 1833லிருந்து 1837 வரை இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இலத்தீன் - கிரேக்கம் ஆகிய மொழிகளுடன் இலக்கணப் பயிற்சியும் கட்டுரைகள் எழுதும் வகையும் கற்றார். 1837ஆம் ஆண்டு பல்கலையில் பட்டம் பெற்ற இவர் கணிதம் - ஆங்கிலம், வரலாறு, தத்துவம் ஆகிய பாடங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தரும் திறமை பெற்றிருந்தார். 1838லிருந்து 1841 முடிய இவர் தனது தமையன் ஜானுடன் சேர்ந்து ஓர் உயர்கல்வி மய்யத்தைத் துவங்கினார். அங்கு தம் தமையனுடன் இணைந்து கல்விப் பணியில் முழு ஆர்வத்துடன் செயலாற்றினார். கற்றலையும் கற்பித்தலையும் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தாலும் தோரோ 1940லிருந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் “The Dial”என்ற பிரசித்தி பெற்ற இதழில் எழுதிவந்தார். அப்படி அவர் எழுதிய எழுத்துக்கள் இன்றைய சமுதாய இளைஞர்களுக்கும் பெரும் துணையாகவும் - இயற்கையைப் பேணும் அரணாகவும் விளங்குகின்றன. இவர் எழுத்தாற்றலை வளர்த்த பெருமை இவரது ஆலோசகர் மற்றும் உயிர் நண்பர் ரால்ஃப் வால்டோ எமர்சன் அவர்களையே சாரும்.

படைப்புகளும் -_ பயனும்:

1839ஆம் ஆண்டு இவர் கன்கார்டில் (Concord) படகுப்பயணம் சென்றார். அன்றிலிரந்து இவர் இயற்கையைச் சார்ந்து வாழவும், இயற்கைப் படைப்புகளை ஆராயவும் துவங்கினார். 1845லிருந்து 1847 வரை இவர் கன்கார்டுக்கு அருகில் வால்டன் குளக்கரையில் ஒரு சிறுகுடில் அமைத்து அங்கு மொத்தம் 2 ஆண்டுகள், 2 மாதங்கள் தங்கி இயற்கைச் சூழலில் பல நூல்களை இயற்றினார். வால்டன் குளம் இயற்கையின் இருப்பிடம், 31 மீட்டர் ஆழமும் 61 ஏக்கர் பரப்பளவும் கொண்ட ஓர் அரிய குளம்; ஏனெனில் தோரோ ‘Walden’ வால்டன் அல்லது ‘Life in the Woods’ காட்டுக்குள் வாழ்க்கை என்ற நூலை இங்கிருந்து எழுதினார்;

இந்நூல் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, உலக வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளது. 1842ஆம் ஆண்டு‘Natural History of Massachusetts’ என்ற நூலையும் 1843இல் ‘A Winter Walk’ என்ற நூலையும் வெளியிட்ட 1846இல் மிகப்பிரசித்தி பெற்ற மெய்னிகாடுகள் (Maine Woods) நோக்கிப் பிரயாணம் செய்தார். அப்போது தனிப்பட்ட முறையில் அவருக்கென அப்போது தனிப்பட்ட முறையில் அவருக்கென விதிக்கப்பட்ட (Poll Tax) வரியைக் கட்ட மறுத்ததால் ஒரு நாள் கன்கார்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்த மறுத்ததற்குக் காரணம் மெக்சிகோ நாட்டின் மீது அமெரிக்கர் தொடுத்த போருக்கும் - அப்போர் வாயிலாக மேலும் பலரை அடிமைகளாகப் பணி அமர்த்துவதற்கும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவேயாகும். இந்த அனுபவம் அவரது பிரசித்தி பெற்ற சட்ட மறுப்பு ‘Civil dis-obedience’ என்ற கட்டுரையாக வடிவம் பெற்றது. பிற்காலத்தில்  காந்தியடிகள், மார்டின் லூதர்கிங் ஆகியோருக்கும் பெரும் உந்தாற்றலாகவும் - தகுந்த முடிவுகளை எடுப்பதற்கு ஏந்ததாகவும் அமைந்தது. காந்தியடிகள் ‘Civil dis-obedient movement’ என்ற சட்ட மறுப்பு இயக்கம் துவங்குவதற்கும் அதன் காரணமாக ஆங்கில அடிமைத்தளையிலிருந்து நம் நாட்டை விடுவிப்பதற்கும் வழிகாட்டியது. இத்துடன் நின்றுவிடாமல் இரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஊட்டியதும் இவரது இந்தக் கட்டுரையில் காணப்பட்ட கருத்துக்களே! காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற போராட்டத்தை துவங்கியதற்கு அடித்தளம் இட்டவர் தோரோ. மக்கள் தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமான சட்டங்களை எப்போதும் மறுக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்து. அமெரிக்க நாட்டில் 20ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிப்பிட விழைகிறேன். மார்லன் பிரேண்டோ (MARLON BRANDO) என்பவர் அமெரிக்க நாட்டின் பிரசித்தி பெற்ற திரைப்பட இயக்குநர். அவரது திறமையைப் பாராட்ட நினைத்த அமெரிக்க அரசு அவருக்கு உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் (Oscar) விருது வழங்கிப் பெருமைப்படுத்த விரும்பி அழைப்பை விடுத்தது. ஆனால், பிரசித்தி பெற்ற இயக்குநர் மார்லன் பிரேண்டோ அவ்விருதை ஏற்க மறுத்தார்; அப்படி அவர் மறுத்தமைக்கான காரணத்தை வெளியிட்டார். அமெரிக்க நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் செவ்விந்தியர்கள்.

ஆங்கில நாட்டிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறிய மக்கள், பின்னர் அமெரிக்காவைத் தம் சொந்த நாடாக ஆக்கிக் கொண்டனர். அப்படி அவர்கள் அமெரிக்காவைத் தம் சொந்த நிலமாக மாற்றிய காலத்தில் மண்ணின் மைந்தர்களும் - பூர்வீகக் குடிமக்களும் ஆகிய செவ்விந்தியர்க்குப் பல சலுகைகளைத் தருவதாக வாக்களித்திருந்தனர். ஆனால், அவர்கள் வாக்களித்தபடி பூர்வீகக் குடிமக்களுக்கு உரிய நியாயங்களை வழங்கவில்லை. அவர்கள் அரசின் அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் வரையில் அவ்வரசு தரும் பரிசு எதுவாயினும் அதை நான் ஏற்க விரும்பவில்லை. இந்நாட்டின் இறையாண்மை கருதி இந்தச் செய்திகளை வெளியிடுகிறேன் என்பதே அவர்கூறிச் சென்ற செய்தி. இச்செய்தி இன்றைய உலகில் உள்ள அனைத்து மக்கள் நலம் நாடும் அரசுகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். தோரோ எழுதிய நூல் ‘CIVIL DIS-OBEDIENCE’ இங்ஙனம் பல்லாற்றானும் மக்கள் உரிமைகளை உணர்த்துவதற்கு ஏற்ற ஒரு கருத்துக் கருவூலமாகவும், முன்னுதாரணமாகவும் விளங்குகிறது. வெறுமனே நல்லவர்களாக இருப்பதில் பெரும் பயன் விளையாது என்பதும் உயர்ந்த ஒரு குறிக்கோளை அடைவதற்காகவே நாம் நல்லவர்களாக அதாவது வல்லவர்களாக வாழ வேண்டும் என்பதும் இவரது நோக்கம். உலகில் வாழும் அனைவரும் ஒரு தாய் பெற்ற குழந்தைகளே! இதை நினைத்து ஒவ்வொரு நாளும் நாம் விழித்தெழ வேண்டும். அதே எண்ணத்துடன் ஒவ்வொரு நாளும் உறங்க வேண்டும்.

தோரோவின் கருத்துக்கள்: நாம் வாழும் நாட்கள் மிகக் குறைவு. ஆகையால் சிறந்த - உன்னதமான நூல்களையே தேர்ந்து கற்றல் வேண்டும். ஏனெனில் ஒருவரது வாழ்நாள் என்பது அவர் உயிருடன் இருக்கும் ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடப் படுவதன்று; ஒருவர் எத்தனை நூல்களைக் கற்கிறாரோ அதைக் கொண்டுதான் ஒருவரது வாழ்நாள் கணக்கிடப்படும்.

ஒருவன் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியைப் புத்தகங்களைப் படிப்பதிலும் _ எழுதுவதிலுமே செலவிட வேண்டும் என்று உறுதியாக நம்பினார். அதனால்தான் அவர் புத்தகங்கள் மட்டுமே நாகரிகத்தைப் பரப்பும் தன்மையின; புத்தகங்கள் இல்லையேல் வரலாற்று உண்மைகள் உறைந்து போகும், இலக்கிய இன்பம் கிட்டாமல் போகும், அறிவியல் முடமாக்கப்பட்டு நம் சிந்தனை வளம் செயலற்றுப் போகும் என்பதாகச் சொல்லிச் சென்றுள்ளார்.

தோராவின் மறைவுக்குப் பின்னர் தான் 1906ஆம் ஆண்டு 2 மில்லியன் வார்த்தைகளை உள்ளடக்கிய அவரது எழுத்துக்கள் 20 பிரிவுகளாக (Volumes) பிரித்து வெளியிடப்பட்டன. அந்த வெளியீடுகள் பதிப்பக உரிமையாளர் Houghton Mifflin ஹாடன் மிஃப்லின் என்பவரால் அங்கீகரிக்கப் பெற்றன. இன்றும் உலகில் பல அறிஞர் பெருமக்களால் பெரிதும் பாராட்டுதலுக்கு உரியதாக விளங்குகின்றன. தோரோவின் மறைவு குறித்து அவரது நண்பர் எமர்சன் குறிப்பிடும்போது எங்கெல்லாம் அறிவு இருக்கிறதோ எங்கெல்லாம் பண்பு உள்ளதோ - எவ்விடத்தில் அழகு நிறைந்துள்ளதோ அங்கெல்லாம் தோரோவின் அடையாளம் இடம் பெற்றுள்ளது. தோரோ இவ்வுலகில் உள்ள உன்னதமான சமுதாயத்தின் உயிர்நாடியாவார்.

இவரது தாரக மந்திரம் ‘Simplicity’ அதாவது எளிமை. எந்த ஒரு சமுதாயம் எளிமையைப் பின்பற்றுகிறதோ அந்த சமுதாயத்தில் ஆண்டான், அடிமை இல்லை. எனவே, ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அதிகார வர்க்கத்தின் சுரண்டல்கள் இல்லை. தேவையில்லாத போர் மேகங்கள் சூழ்வதில்லை. இயற்கையின் எழிலைச் சுவைத்த வண்ணம் ஒவ்வொருவரும் தாம் எண்ணியவாறு ஏற்றமுடன் வாழ வேண்டும் என்பதே இந்த மாமேதையின் விருப்பம். அவர் விருப்பத்தை அவர் வழியில் நின்று நிறைவு செய்வோம்.

Share