Home 2012 ஏப்ரல் மாமனிதர்கள் வாழ்வில்...
வெள்ளி, 23 அக்டோபர் 2020
மாமனிதர்கள் வாழ்வில்...
Print E-mail

மனமாற்றம்

இந்தியப் பிரதமர் நேருவும், ரஷ்யத் தலைவர் குருஷேவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, உலகிலேயே அதிக வலிமை வாய்ந்தது ரஷ்யப் படைதான். இப்போதுகூட கியூபா நாட்டுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற பெரிய கப்பற்படை போய்க் கொண்டிருக்கிறது என்றார் குருஷேவ்.

இதனைக் கேட்ட நேரு, கலிங்கப் போரைப் பற்றியும் அதன் விளைவாக அசோகர் மனம் மாறிய விவரத்தையும் விளக்கிக் கூறினார். நேரு கூறிய நிகழ்ச்சியும் எடுத்துக் கூறிய விதமும் குருஷேவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. உடனே, கியூபா நோக்கிச் சென்ற கப்பற் படைகைள ரஷ்யா திரும்ப உத்தரவிட்டுள்ளார் குருஷேவ்.

லிங்கனின் பதில்

அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனின் தந்தை செருப்புத் தைக்கும் தொழிலாளி. லிங்கனின் தந்தையின் தொழிலைக் கூறி அவரை அவமானப்படுத்த ஒருவர் நினைத்தார். தான் காலில் போட்டிருந்த செருப்பை எடுத்துக் காட்டி, உங்கள் அப்பா தைத்த செருப்பைத்தான் நான் உபயோகிக்கிறேன் என்று கூறினார். இதனைக் கேட்ட லிங்கன், இவ்வளவு நாள்கள் அது உழைப்பதிலிருந்தே என் தந்தை ஒரு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது. ஒருவேளை, அந்தச் செருப்பு பழுதடைந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள். எனக்குச் செருப்புத் தைக்கவும் தெரியும், நாட்டை ஆளவும் தெரியும் என்று பதில் கூறினார்.

உதவியின் பயன்


பிளெமிங் என்ற விவசாயி காட்டு வழியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது, சதுப்பு நிலத்தின் புதைகுழியில் பணக்காரச் சிறுவன் ஒருவன் மாட்டிக்கெண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாத பிளெமிங் மிகவும் சிரமப்பட்டு புதைகுழியில் சிக்கியிருந்த சிறுவனைக் காப்பாற்றினார். இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம் ஓடி வந்தார். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என வற்புறுத்தினார்.

பணத்தினை வாங்க மறுத்தார் பிளெமிங். பணக்காரர் வற்புறுத்தியதால், தன் மகனைப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

பணக்காரரின் உதவியால் படித்து, பின்னாளில் மருத்துவராகப் புகழ்பெற்ற விவசாயின் மகன், மருத்துவத் துறையில் பென்சிலின் என்ற மருந்தைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் ஆவார். பிளெமிங், புதைகுழியிலிருந்து காப்பாற்றிய சிறுவன் சில ஆண்டுகளுக்குப் பின்னர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, பென்சிலின் மருந்தே அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டுமுறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் ஆவார்.

நேரம் விலைக்குக் கிடைக்குமா?

பைண்டிங் வேலை செய்துகொண்டு தமது ஓய்வு நேரத்தை ஆராய்ச்சிக்காக செலவு செய்தவர் அறிவியல் அறிஞர் மைக்கேல் ஃபாரடே.

நண்பர் ஒருவரிடம் பேசிய ஃபாரடே, எனக்கு இப்போது வேண்டியதெல்லாம் நேரம்தான். ஆனால், போதுமான நேரம் கிடைப்பதில்லை. நாகரிகத்தில் மூழ்கிய நம்முடைய மக்களோ, அளவுக்கு அதிகமாக ஓய்வு நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார்கள். அந்த ஓய்வு நேரத்தை நான் குறைந்த விலைக்கு வாங்க முடியுமானால் என் ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.


இரண்டு அடிமைகள்

பணக்காரர் ஒருவர் பேரறிஞர் பிளாட்டோவிடம் வந்து, தன் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும்படிக் கேட்டார். சரி என்று ஒத்துக் கொண்டார் பிளாட்டோ. எவ்வுளவு பணம் தரவேண்டும் என்று பணக்காரர் கேட்டதும், 500 வெள்ளிகள் என்று கூறினார் பிளாட்டோ.
உடனே பணக்காரர், இந்தப் பணத்துக்கு ஓர் அடிமையையே நான் விலைக்கு வாங்கி விடுவேனே, அவ்வளவு பணம் கொடுத்து என் மகனுக்குக் கல்வி தேவையா? என்று கூறினார்.

இதனைக் கேட்ட பிளாட்டோ நீங்கள் சொன்னபடியே ஓர் அடிமையை வாங்கி விடுங்கள். அப்போது, உங்கள் மகனையும் சேர்த்து 2 அடிமைகள் இருப்பார்கள் என்றாராம்.

- தொகுப்பு : மேகா

Share