Home 2012 ஏப்ரல் இராக்கெட் எனும் வாகனம்
திங்கள், 03 ஆகஸ்ட் 2020
இராக்கெட் எனும் வாகனம்
Print E-mail

- பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

பொன்மனி: அக்கா, விண்வெளியில் இந்தியாவும் இராக்கெட் செலுத்தியது என்று செய்தி வாசித்தேன். நாம்தான் தீபாவளி முதலிய பண்டிகைகளின்போது இராக்கெட் விடுகிறோமே? இதில் என்ன புதுமை இருக்கிறது?

செல்வி: உண்மையைச் சொல்லட்டுமா? தீபாவளி கொண்டாடுவதே மூடத்தனம். அதிலும் தீபாவளி என்று சொல்லிப் பட்டாசு வெடிப்பதும், ராக்கெட் செலுத்துவதும் காசைக் கரியாக்கும் செயல். ஆனாலும், உனக்கு இந்த அறிவியல் தத்துவத்தை...

பொன்மணி: அறிவியல் தத்துவமா? பொழுதுபோக்கு என்றல்லவா நினைத்தேன்.

செல்வி: திரியில் நெருப்பை வைத்ததும் ராக்கெட் என்ன செய்கிறது?

பொன்மணி: பின்புறத்தில் நெருப்புப் பொறியைக் கக்கியபடி உயரப் பாய்கிறது?

செல்வி: பரவாயில்லையே சரியாகச் சொல்லிட்டியே. இந்த இராக்கெட் வாணத்துக்கும், செயற்கைக்கோளை வானில் செலுத்துகிற இராட்சத இராக்கெட்டுக்கும் அடிப்படையாக உள்ள தத்துவம் ஒன்றுதான். உள்ளேயிருக்கும் எரிபொருள் எரிந்து வேகமாகப் பின்புறம் பீச்சப்படுவதன் எதிர்விளைவாகவே இராக்கெட் முன்னே செல்கிறது.

பொன்மணி: அப்படியானால் இராக்கெட்டை முதன்முதலில் கண்டுபிடித்தது நம் நாட்டவர்களா?

செல்வி: அதுதான் இல்லை. முதன்முதலில் இராக்கெட்டைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். ஆனால், 1799இல் ஆங்கிலேயருடன் சண்டையிட்டபோது இராக்கெட்டுகளைப் பயன்படுத்தினார் திப்புசுல்தான் என்கிறது வரலாறு.

பொன்மணி: அப்படியானால் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியவர்கள் _ ராக்கெட் வழி முதன்முதலில் சீனர்களாகத்தானே இருக்க வேண்டும். என் யூகம் சரிதானே.

செல்வி: உன் சிந்தனையும், எண்ணமும் தவறு. இராக்கெட் இயக்கம்பற்றி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து இராக்கெட்டு களை விண்வெளிப் பயணத் துக்குப் பயன்படுத்தலாம் என்று கூறியவர் 1857-1935 வரை வாழ்ந்த ரஷ்யாவைச் சேர்ந்த கே.சியால் கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky) என்பவர்தான். இவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் இராக்கெட்டை முதலில் வடிவமைத்தவரும் இவரே.

பொன்மணி: அப்படியானால் இவரை விண்வெளி இயலின் தந்தை எனலாமா? வேறு யாரும் இராக்கெட் ஆராய்ச்சியாளர் இருக்கிறாரா?

செல்வி: அமெரிக்காவில் ராபர்ட் ஹட்கின்ஸ் கொடார்ட் என்பவர் இராக்கெட்டுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தினார். அவரால் உருவாக்கப்பட்ட திரவ எரிபொருள் இராக்கெட் 1926ஆம் ஆண்டு வானில் செலுத்தப்பட்டது.

பொன்மணி: இந்த இராக்கெட் பற்றி நூல் ஏதும் உள்ளதா? யாரேனும் எழுதியிருக்க வேண்டுமே?

செல்வி: இருக்கிறது. ருமேனியாவைச் சேர்ந்த கணிதப் பேராசிரியர் ஹெர்மால் ஓபர்த் என்பவர் 1923இல் விரிவான நூல் ஒன்றை வெளியிட்டு, அதில் விண்வெளிப் பயணத்தில் உள்ள சிக்கல்களை மட்டுமல்லாது, பொறியியல் கூறுகள் பற்றியும் ஆராய்ந்து எழுதினார்.

பொன்மணி: இது 1923 என்றால் இரண்டாம் உலகப் போர் 1939இல் தொடங்கியபோது போரில் பயன்பட்டதா?

செல்வி: நுட்பமான கேள்வியெல்லாம் பள்ளி மாணவி கேட்பது வியப்பாயிருக்கிறது. மணி இரண்டாகப் போகிறது.

பொன்மணி: வாங்க அக்கா சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம். செல்வி: இரண்டாம் உலகப்போர் பற்றிக் கேட்டாயல்லவா? அதைப்பற்றிச் சொல்றேன். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஜெர்மனியில் இராக்கெட்டைப் போர் ஆயுதமாகப் பயன்படுத்த ஜெர்மானியர் ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டதன் பயனாய் ஹிட்லரின் இராணுவம் வி_2 என்னும் இராக்கெட் குண்டுகளைப் பிரிட்டனை நோக்கி ஏவியது. தரையிலிருந்து கிளம்பி 50 மைல் உயரத்திற்குச் சென்று 36 டன் வெடி மருந்துடன் மணிக்கு 3,500 மைல் வேகத்தில் இலக்குகளின் மீது விழுந்த இக்குண்டுகள் உலகைத் திகைக்க வைத்தன.

பொன்மணி: அப்பாடியோ! மணிக்கு 3,500 மைல் வேகமா? பயங்கரமான வேகம்தான். இட்லரின் இராணுவம் பொல்லாத இராணுவம்தான். இரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் என்ன செய்தன?

செல்வி: அமெரிக்காவும், இரஷ்யாவும் சும்மா இருக்குமா? இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிட்டத்தட்ட போட்டி போட்டுக் கொண்டு இராக்கெட் துறையில் முனைப்புக் காட்டின. ஜெர்மனியிலிருந்து குடிபெயர்ந்த ஜெர்மன் அறிவியல் நிபுணர்களும் பொறியியல் நிபுணர்களும் இதற்கு உதவியாக அமைந்தனர்.

பொன்மணி: அக்கா! அக்கா! இந்த இராக்கெட் பற்றிக் கேட்கக் கேட்கப் புதுமையாயும் சுவையாயும் இருக்கிறது. வழக்கமாக ராமாயணம், பாரதம் என்று கற்பதைவிட இதுபோல் அறிவியல் செய்திகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும். சாப்பாடு உள்ளே போனதே தெரியவில்லை.

செல்வி: சரி, நீ இவ்வளவு ஆர்வமாகக் கேட்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இராக்கெட் என்பது சில அடி நீளமுடையதாகவும் இருக்கலாம் அல்லது அமெரிக்க விண்வெளி வீரர்களின் சந்திரமண்டலத்துக்கு உதவிய சாடர்ன்5 இராக்கெட் போல 364 அடி உயரமும் 2,700 டன் எடையும் கொண்ட இராட்சத இராக்கெட்டாகவும் இருக்கலாம். காற்றே இல்லாத இடத்திலும் இராக்கெட் செயல்படக் கூடியது. எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்குக் காற்று அதாவது ஆக்சிஜன் தேவை. ஜெட் எஞ்சின்கள் காற்று மண்டலத்திலுள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இராக்கெட் எஞ்சினில் எரிபொருள் எரிவதற்கு அதன் உள்ளேயே ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு உள்ளது.

பொன்மணி: இராக்கெட் எரிவதற்குத் திரவ எரிபொருள்தான் பயன்படுத்துகிறார்களா?

செல்வி: அப்படியெல்லாம் கட்டுப்பாடு ஏதுமில்லை. திட எரிபொருளையும் பயன்படுத்தலாம், திரவ எரிபொருளையும் பயன்படுத்தலாம். திட நிலையில் எரிபொருளைப் பயன்படுத்துவதில் சில சாதகங்கள் உள்ளன. திரவ எரிபொருள் பயன்படுத்துவதில் சில சாதகங்கள் உள்ளன. திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் ஆகியவற்றைத் திரவ எரிபொருளாகப் பயன்படுத்துவது உண்டு. வாயுக்களான ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் மிகுந்துள்ள அறை குளிர்விக்கப்பட்டால்தான் இவை திரவமாக மாறும். மண் எண்ணெய், பெட்ரோல் ஆகிய திரவங்களைப் பயன்படுத்துவது உண்டு.

பொன்மணி: இராக்கெட்டுகள் ஒரே அடுக்கு என்றால் குறைந்த தூரம்தானே செல்லும்?

செல்வி: இதையெல்லாம் அறிவியல் அறிஞர்கள் யோசிக்காமல் இருப்பார்களா? சில கிலோ மீட்டர் உயரம் மட்டுமே செல்லும் வான்வெளி ஆய்வு இராக்கெட்டுகள்தாம் ஓர் அடுக்கு இராக்கெட்டுகள். செயற்கைக் கோள்களைச் செலுத்தும் இராக்கெட்டுகள் ஒன்றன்மீது ஒன்று பொருத்தப்பட்ட மூன்றடுக்குகளாக உள்ளன.

பொன்மணி: மூன்றடுக்குகளா? அற்புதமான தகவலாய் இருக்கிறதே. அக்கா நீங்ககூட இராக்கெட் விஞ்ஞானி ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே.

செல்வி: ஏன் ஆகக்கூடாது? நீ கூடப் படித்து இராக்கெட் விஞ்ஞானியாகலாம். ஆண்கள்தான் விண்ணியல் துறையில் முன்னுக்கு வரவேண்டுமா? கல்பனா சாவ்லா போலப் பொன்மணியும் வரவேண்டும்.

பொன்மணி: அக்கா! இந்த இராக்கெட் செயல்படுவது பற்றிச் சொல்லுங்கள். உங்களைப் படிக்க விடாமல் தொல்லை கொடுத்து விட்டேன்.

செல்வி: தொல்லையா? ஊஹும்! அதெல்லாம் இல்லை. இதுபோல் ஆர்வத்தோடு கேட்பது எனக்கு மகிழ்ச்சியே. விண்வெளிப் பயணத்துக்கு இராக்கெட் ஒரு வாகனம். காரில் ஓர் ஊருக்குப் போகிறோம். ஊர் போய்ச் சேரும்போது காரில் எல்லாப் பகுதிகளும் கதவை விடுத்து ஸ்டீயரிங் வீலும், டிரைவர் இருக்கையும் மிஞ்சினால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் இராக்கெட்டும் ஆகிறது.  மூன்றடுக்கு இராக்கெட்டில் அடிப்பகுதி எரிந்து தீர்ந்ததும் இராக்கெட் கூடு கழன்று விழுந்துவிடும். எனவே, அடிப்பகுதியில் இருந்த திரவம், கூடு ஆகியன கழன்று எடை போய் விடுவதால் இராக்கெட் வேகம் பெறும். இரண்டாவது அடுக்கு கழன்றுவிடும்போது கடைசிக்கட்ட இராக்கெட் பயங்கர வேகமுறும். விண்வெளி இராக்கெட்டுகளில் அந்த இராக்கெட் வழியறிந்து செல்வதற்கான கருவிகளும், இராக்கெட்டின் இயக்கத்தைப் பற்றித் தகவல் அளிப்பதற்கான கருவிகளும் வேறுபல கருவிகளும் இருக்கும்.

பொன்மணி: அக்கா நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இராக்கெட் எஞ்சின் வெப்பத்தில் உருகிப் போய்விடாதா?

செல்வி: சரியான கேள்வி. அர்த்தமுள்ள கேள்வி. இராக்கெட்டின் எரிபொருள் பயங்கர வேகத்தில் பீச்சிடும்போது மிகுந்த வெப்பம் ஏற்படும். இராக்கெட் எஞ்சின் உருகிப் போய்விடாதபடி இருக்க நவீனக் கலப்பு உலோகங்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு இரகசியம் இருக்கிறது. இவ்வகையான கலப்பு உலோகங்களை எப்படி உருவாக்குவது என்னும் தொழில்நுட்பத்தை இராக்கெட் துறையில் முன்னேறியுள்ள நாடுகள் மிகவும் இரகசியமாக வைத்துள்ளன.

பொன்மணி: அப்படியானால் இராக்கெட் பயணம் என்பது ஒருவழிப் பயணம்தான். இல்லையா?

செல்வி: ஆம்! ஒருவழிப் பயணம்தான். அதனால் அமெரிக்க நிபுணர்கள் கொலம்பியா ஷட்டில் கலத்தை உருவாக்கி இருக்கின்றனர். இதனைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

பொன்மணி: அக்கா, எனக்கு நீண்ட நாட்களாக இந்த இராக்கெட் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் சந்தேகங்கள் இன்றுதான் தீர்ந்தன. நன்றி அக்கா! அது மட்டுமில்லை, இனிமேல் ஓட்டல்களில் இராக்கெட் தோசை சாப்பிடும் போதெல்லாம் உங்களையும் இராக்கெட்டோடு சேர்த்து நினைத்துக் கொள்வேன்.

Share