Home 2012 மே மாமனிதர்கள் வாழ்வில்
வியாழன், 22 அக்டோபர் 2020
மாமனிதர்கள் வாழ்வில்
Print E-mail

மூளை வேண்டும்

கொலம்பசைப் பாராட்டி நடைபெற்ற விருந்து ஒன்றில் அவர்மீது பொறாமை கொண்ட சிலரும் கலந்து கொண்டனர். அவர்களுள் ஒருவர், கொலம்பஸ் மட்டுமல்ல, வேறு யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திருந்தாலும் புதிய நாடுகளைக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று கூறினார்.

இதனைக் கேட்ட கொலம்பஸ், விருந்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றினை எடுத்தார். சொன்னவரிடம் கொடுத்து, இதைச் செங்குத்தாக மேசையின்மேல் நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம் என்றார். நிறுத்தி வைத்துப் பார்த்து முடியாமல், உங்களால் செங்குத்தாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று  கொலம்பசைக் கேட்டார்.

முட்டையை வாங்கிய கொலம்பஸ் குறுகலான பகுதியை மேசையின்மீது மெதுவாகத் தட்டினார். முட்டையில் சிறிய பள்ளம் விழ, முட்டை மேசையின்மீது செங்குத்தாக நின்றது. எதிரில் இருந்தவர், இப்படிச் செய்வது என்றால் நானும் செய்திருப்பேனே என்றதும்,

எந்தக் காரியத்தையும் ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். முதல்முறையாக அதைச் செய்வதற்குத்தான் மூளை வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் கொலம்பஸ்.

பிரெஞ்சுப் புரட்சி நூல்

தாமஸ் கார்லைல் என்ற ஆங்கில எழுத்தாளர் பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி விரிவான புத்தகம் எழுதினார். தான் எழுதிய கையெழுத்துப் பிரதியை நண்பர் ஒருவரிடம் படித்துப் பார்க்கச் சொல்லிக் கொடுத்தார்.

மாதங்கள் பல ஆகியும், கையெழுத்துப் பிரதியை வாங்கிச் சென்ற நண்பர் கொண்டுவந்து கொடுக்கவில்லை. பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கியதாயிற்றே என நினைத்த கார்லைல், நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.

நண்பரிடம், தங்களுக்குக் கொடுத்த பிரதியை வாங்க வந்தேன். என்னிடம் வேறு படிகளும் இல்லை. எனவே, உடனே திருப்பிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். நண்பரோ, சிறிதும் வருத்தமின்றி, தாங்கள் கொடுத்த பிரதியை எங்கோ தொலைத்துவிட்டேன் என்றார்.

கேட்ட சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்தார் தாமஸ் கார்லைல் . உடனே மனதைத் தேற்றிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். எந்தச் சலனமுமின்றி பொறுமையோடு எழுத ஆரம்பித்தார். எழுதியும் முடித்தார். கார்லைல் இரண்டாவதாக எழுதியதுதான் இன்று ஆங்கில இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நூலாகக் கருதப்படும் பிரெஞ்சுப் புரட்சி  என்னும் நூல் ஆகும்.

கொள்கையில் உறுதி

ஆங்கில இலக்கியத்தில் புரட்சிக் கவிஞன் என அழைக்கப்பட்டவர் ஷெல்லி. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஷெல்லி படித்துக் கொண்டிருந்தபோது, மதத்தையும் கடவுள் நம்பிக்கைகளையும் தாக்கிக் கவிதைகளை எழுதினார். அப்போது பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த ரெக்டரின் கவனத்திற்கு இது வந்தது. அவர் ஷெல்லியை அழைத்து, நாத்திகக் கவிதைகளை எழுதினால் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பிவிடுவேன் என எச்சரித்தார்.

இதனைக் கேட்ட ஷெல்லி, என் மனதுக்குப் பிடித்த கவிதைகளை எழுதுவதை என்னால் விடமுடியாது. கல்லூரியை விட்டுவிடுவது எனக்குச் சுலபம் என்றார். ரெக்டர் மீண்டும் எடுத்துச் சொல்லியும் கேட்காததால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

காலப்போக்கில் பிரபலமடைந்த ஷெல்லியின் கவிதைகள் ஆங்கில இலக்கியத்தில் அவருக்கு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தன. சந்தக் கவிதைகள் எழுதுவதில் தனிச்சிறப்புப் பெற்றார். ஷெல்லி இறந்து 2 நூற்றாண்டுகளாகியும் அவரது கவிதைகள் ஆங்கில இலக்கியத்தில் அழியாத இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

நாத்திகக் கவிதைகள் எழுதினார் என்பதற்காக வெளியேற்றிய கல்லூரி, தன்னிடம் படித்த புகழ்மிக்க மாணவர் ஷெல்லி என்பதற்காக அண்மையில் ஷெல்லிக்குச் சிலை எடுத்து விழா கொண்டாடி ஷெல்லியைக் கௌரவித்துள்ளது.

விதி விலக்கானவர்

அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராக தொடர்ந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். அவருடன் போட்டியிட்டுத் தோற்றவர்களுள் ஒரே உலகம் என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய வெண்டல் வில்க்கி குறிப்பிடத்தக்கவர்.

ரூஸ்வெல்ட்டின் நம்பிக்கைக்குரிய செயலாளர் ஹேரி ஹாப்கின்ஸ். விவாதத்திற்குரிய மனிதராக இருந்து நாணயமானவராகவும் திகழ்ந்தவர். ஹாப்கின்சால் ரூஸ்வெல்ட்டுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதாக நினைத்தவர்களுள் வெண்டல் வில்க்கியும் ஒருவர்.

வில்க்கி ரூஸ்வெல்ட்டைச் சந்தித்தபோது, ஹாப்கின்ஸ் போன்ற விவாதத்துக்குரிய மனிதரை ஏன் உங்களுடன் நெருக்கமாக வைத்துள் ளீர்கள்? உங்களுக்கு இதனால் என்ன லாபம்? எனக் கேட்டார்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் பொறுப்பு மகத்தானது. அதிகாரமுள்ள தலைவருக்கு உண்மையான நண்பர்கள் இருப்பது கஷ்டம். எத்தனையோ பேர் என்னிடம் வருகின்றனர், பேசுகின்றனர். வருகின்ற ஒவ்வொருவரும் எதையோ எதிர்பார்த்துத்தான் வருகின்றார்கள். என்னால் அவர்களிடம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை. ஆனால், ஹாப்கின்ஸ் அவர்களிலிருந்து விதிவிலக்காக இருக்கிறார். எனக்கு வேண்டியவராக, என்னிடம் எதையும் எதிர்பார்க்காதவராக இருக்கிறார். நீங்களும் ஒரு காலத்தில் குடியரசுத் தலைவராக ஆகலாம். அப்போதுதான் ஹாப்கின்ஸ் போன்றோரின் தேவையை உங்களால் உணரமுடியும் என்றார் ரூஸ்வெல்ட்.

Share