Home 2012 மே முயலின் முயற்சி
வியாழன், 22 அக்டோபர் 2020
முயலின் முயற்சி
Print E-mail

கர்ஜித்தபடியே சிங்கம் ஒன்று குகையை விட்டு வேட்டைக்குக் கிளம்பியது. கர்ஜனையைக் கேட்ட காட்டு விலங்குகள் அஞ்சி நடுங்கின. இதற்கு முன்பு உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்த விலங்குகள், தங்கள் திட்டப்படி சிங்கத்தின் முன் அணிவகுத்து நின்றன.

சிங்க ராஜாவே, தினமும் ஒருவர் உங்கள் முன் வந்து உங்கள் பசியை ஆற்றுகிறோம். யார் வருவது என்பதை எங்களுக்குள் பேசித் தீர்மானித்துள்ளோம். எனவே, தாங்கள் இனி கர்ஜித்து ஒலி எழுப்பி எங்களைப் பயமுறுத்த வேண்டாம் என்றன.

இதனைக் கேட்ட சிங்கம், நீங்கள் சொல்வதை எப்படி நான் நம்புவது? என்ற வினா எழுப்பியது. நம்புங்கள் சிங்க ராஜா, நாங்கள் கொடுத்த வாக்கின்படி நிச்சயமாக உங்கள் பசியினைத் தணிப்போம் என்றன.

நம்பிய சிங்கமும் சென்றது. தினமும் ஒவ்வொரு விலங்காகச் சென்று சிங்கத்திற்கு இரையாகி வந்தன. அடுத்த நாள் முயல் செல்ல வேண்டிய முறை வந்தது. குட்டி முயல் மூளைக்கு வேலை கொடுத்தது. தினமும் ஒவ்வொருவராக வலியச் சென்று பலியாகும் இத்திட்டத்திற்குத் தீர்வு காண வேண்டும். முந்தைய நாள் முழுவதும் சிந்தித்துக் கொண்டே இரை தேடியது.

சிறிது நேரம் தாமதமாகச் சென்றால் சிங்கத்திற்குக் கோபம் வரும். அப்போது, நான் சிறிய உருவமாக இருப்பதால் உங்கள் வயிறு நிரம்பாதே என்று வருத்தமாக இருந்தது சிங்க ராஜா.

அதனால் என்னுடன் தங்களுக்கு இரையாகச் சம்மதித்த 4 முயல்களை அழைத்து வந்தேன். வரும் வழியில் தங்களைவிட உருவத்தில் பெரியதாகவும் அதிக வலிமை உடையதாகவும் இருந்த ஒரு சிங்கத்திடம் மாட்டிக் கொண்டோம். உங்களைப் பற்றியும், உங்கள் வலிமையைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். ஆனால், அந்தச் சிங்கம் எதையும் கேட்கத் தயாராக இல்லை என்றதும், அப்படியா? யார் என்று காட்டு, என்ன செய்கிறேன் பார் எனக் கோபத்தில் கொக்கரிக்கும்.

உடனே, அது மட்டுமா, நான்தான் இந்தக் காட்டுக்கே ராஜா. ஒருகை பார்த்து விடுகிறேன் என்று ஆத்திரம் கண்களில் கொப்பளிக்க எங்களைப் பயமுறுத்திப் பார்த்தது. எனக்கு மட்டும்தான் அந்தச் சிங்கத்தைத் தெரியும் என்றேன். உடன்வந்த என் நண்பர்கள் மீது பாய்ந்தது. அந்த நேரத்தை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களிடம் ஓடி வந்துவிட்டேன் என்று சொல்ல வேண்டும்.

உடனே சிங்கம், எனக்குச் சரிசமமாக யாரையும் வளரவிட மாட்டேன். அந்தச் சிங்கத்தைக் காட்டு என்று கேட்கும். அப்போது, இந்தக் கிணற்றினுள் உள்ளது என்று கூறவேண்டும். சிங்கம் கிணற்றினுள் எட்டிப் பார்க்கும்போது அதன் நிழல் உள்ளே தெரியும். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதால், உள்ளே பாய்ந்து தத்தளித்து இறக்கும் என்ற திட்டம முயலின் மனதில் தோன்றியது.

நாளையே இந்த யோசனையைத் திறமையாகச் செய்ய வேண்டும் என நினைத்தபோதே, இந்தச் சிங்கத்தைக் கொன்றுவிட்டால் இன்னொரு சிங்கம் மிரட்டும் வாய்ப்பு உள்ளதே என்ன செய்யலாம். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நினைத்து மீண்டும் சிந்தித்தது. காட்டு விலங்குகள் அனைத்தையும் அழைத்துப் பேசியது.

நண்பர்களே, நாமே வலியச் சென்று பயந்து கோழையாக சிங்கத்தின் வாயினுள் இரையாவதைவிடக் கேவலம் எதுவுமில்லை. இந்தச் சிங்கத்தைச் சூழ்ச்சி செய்து கொன்றுவிடலாம் என்றால்... நாளை இன்னொரு சிங்கம் வந்து நம்மை மிரட்டிப் பணிய வைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, முடிந்தவரை முன்னேற்பாட்டின்படி நாம் கவனத்துடன் இருந்து தப்பிப்போம். இறப்பு என்பது என்றிருந்தாலும் ஒரு நாள் எல்லோருக்கும் உண்டுதான். அதற்காக நாமே நமது இறப்பு இன்று என முடிவு செய்யலாமா? பயந்து இரையாவதைவிட, துணிந்து நின்று நடப்பது நடக்கட்டும் என்ற தைரியத்தில் எதிர்த்துப் போராடி வாழ்வோம். நம்பிக்கையுடன் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் நம்மால் தப்ப முடியும்.

அல்லது, அனைவரும் சேர்ந்து சிங்கத்தை எதிர்ப்போம். ஒருவேளை சிங்கமும் துணிந்து எதிர்த்தால் பலியாவது ஒரு சிலராக மட்டுமே இருப்போம். நமது வருங்கால பாதுகாப்புக்காக _ நிம்மதிக்காக ஒரு சிலர் உயிர்த்தியாகம் செய்வது தவறல்ல. நீங்கள் அனைவரும் என்ன சொல்கிறீர்கள் என்று முயல் கேட்டதும் அனைத்து மிருகங்களும் ஆமோதித்தன.

இதனைக் கேட்ட விலங்குகள், முயலே நீ சொல்வது சரிதான். நீ முதலில் கூறிய யோசனை எங்களுக்குள் தன்னம்பிகையையும் ஒரு புதுவிதமான உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. இரண்டாவது கூறியது, துணிந்து செயலில் ஈடுபட்டு நமது ஒற்றுமையைக் காட்டி அந்தச் சிங்கத்தை அடிபணிய வைப்போம் என்ற எண்ணத்தை உண்டாக்கியுள்ளது.

எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இன்று சிங்கத்தை எதிர்ப்போம். பின்பு, நீ சொன்னதுபோல நடப்பது நடக்கட்டும் என்ற தைரியத்தில் - நம்பிக்கையில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு போராடி வாழ்வோம். போராட்டம்தானே வாழ்க்கை. வாழ்க்கையில் எதிர்வரும் பிரச்சினைகளை - எதிரிகளைச் சமாளித்து வெற்றி பெறுவோம் என்ற தீர்மானத்தைப் பின்பற்றுவோம் என்ற உறுதியுடன் செயலில் இறங்கின.

Share