Home 2012 மே உலகப் புகழ் பெற்றவர்கள்
திங்கள், 25 ஜனவரி 2021
உலகப் புகழ் பெற்றவர்கள்
Print E-mail

தடுப்பூசியின் தந்தை  - எட்வர்ட் ஜென்னர் (Edward - Jenner)

-  சாரதாமணி

முன்னுரை: விண்ணை முட்டும் மாடங்கள், காற்றைவிடக் கடிது செல்லும் வானுர்திகள், நீரினைக் கிழித்துச் செல்லும் அதிவிரைவுக் கப்பல்கள். காடுகளை எல்லாம் அழித்து வண்ணங்களைக் கொண்டு வடிவமைக்க இயலுமோ அத்தனை தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைத்த கட்டிடங்கள் இவைதான் நாகரிக சின்னங்கள் என்று நம்பி மனிதன் கண்மூடித்தனமான வாழ்வு வாழ்கிறான். ஆனால் நலவாழ்வு என்பது பிணியற்றது - பகையற்றது - பசியற்றது - குணநலம் மிக்கது - மாந்த நேயம் கொண்டது என்ற எளிய செய்தியை மக்களிடையே தமது வாழ்நாளில் உணர வைத்தவர் ஜென்னர் என்ற ஆங்கில மருத்துவர். வருமுன் காப்பதே வாழ்வு - அதிலும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை முதன்முதலில் தடுப்பூசிமூலம் (Inoculation) பெரியம்மை நோயை விரட்டியடித்தவர் - மனித குலம் என்றென்றும் இவரது கண்டுபிடிப்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.

இளமையும் கல்வியும்

எட்வர்டு ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள பெர்க்கிலி (Berkley) எனும் சிறிய நகரில் பிறந்தார். இவர் இளம் வயதில் பள்ளிப் படிப்பை தமது ஊரில் உள்ள துவக்கப் பள்ளியில் துவங்கினார். அப்போதே இவருக்கு மருத்துவத் துறையில் பேரார்வம் இருந்தது. அக்காலத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வது மிகவும் கடினம். பெரும் முயற்சியும் _ உழைப்பும் இடையீடில்லா ஊக்கமும், உள்ளத்து உறுதியும் உடையவர் மட்டுமே அப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற முடியும். ஜென்னரிடம் மேலே சொன்ன தன்மைகள் அனைத்தும் ஒருசேர அமைந்திருந்தமையால் தம் 14ஆம் வயதில் தமது ஊருக்கு அருகில் உள்ள செட்பரி (Sedbury) என்ற கிராமத்தில் திறமைமிக்க அறுவைசிகிச்சை மருத்துவரிடம் ஆரம்பகட்டப் பயிற்சியை மேற்கொண்டார். 21ஆம் வயதில் இலண்டனில் தூய ஜார்ஜ் (St. George) மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றியவாறே புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

ஜென்னரின் மருத்துவப் பயணம்:

டாக்டர் எட்வர்ட் ஜென்னர் 1776ஆம் ஆண்டு தமது சொந்த ஊருக்குச் சென்று மருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தபோது சாரா நெல்ம்ஸ் (Sarah Nelmes) என்ற இடையர் குலப்பெண் பசு அம்மை (Cow-Pox) நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக இவரிடம் வந்தார். கிராமப்புரத்தில் மாடு மேய்க்கும் பெண்களைப் பசு அம்மை நோய் எளிதில் தாக்கும். அப்படிப் பசு அம்மை நோய் தாக்கப்பட்டவர்களைப் பெரியம்மை நோய் (Small Pox) தாக்குவதில்லை என்ற கருத்து குடியானவர்கள் மத்தியில் பரவி இருந்தது. இக்கருத்தை அரசாங்கமோ, அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை. இக்காலத்திலும் சரி, அக்காலத்திலும் சரி ஏழையின் பேச்சு அம்பலமேறாது; ஆனால் ஜென்னர் இயல்பாகவே குடியானவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். கிராம மக்களின் நீண்டகால நம்பிக்கையை உறுதிப்படுத்த தமது கடினமான ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார். பசு அம்மை (Cow-Pox) நோயால் தாக்கப்பட்ட சாராநெல்ம்ஸ் என்ற பெண்ணின் விரலிலிருந்து பசு அம்மைக் கிருமியை எடுத்து 8 வயதுச் சிறுவன் ஜிம்மி பிப்ஸ் (Jimmy Phipps) உடலில் செலுத்தப்பட்டது. பசு அம்மை நோய் அவனைத் தாக்கியது.

சுமார் 7 வாரங்கள் கழித்து பெரியம்மை (Small Pox) நோயால் தாக்கப்பட்டவர் உடலிலிருந்து பெரியம்மைக் கிருமியை எடுத்த ஜிம்மி பிப்ஸ் உடம்பில் செலுத்தினார். இதற்குப் பெரும் துணிச்சல் தேவைப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் சிறுவன் இறக்க நேரிட்டால் இவர் ஒர் இளம் குழந்தையைக் கொண்றவராக உலகம் இவரை தண்டித்திருக்கும். அதேசமயம் இவரது எல்லையற்ற துணிச்சலால் குழந்தை பெரியம்மை நோயிலிருந்து காப்பாற்றப் படுவானாயின் அது இவ்வுலக சமதாயத்திற்குக் கிடைத்த ஈடு இணையற்ற பரிசாகும். பாஸ்ச்சர்   என்னும் ஆய்வாளர் ஜென்னரின் ஆய்வு மிகவும் சரியானது என்று உறுதி செய்தார். இவர் முயற்சி இங்ஙனம் வெற்றி கண்டது. இவரது மருத்துவப் பயணம் மாபெரும் சாதனைக்கு வித்திட்டது.

பெரியம்மை நோய்பற்றிய குருட்டு நம்பிக்கையும் அதற்குச் சாவு மணியடித்த ஜென்னரின் ஆராய்ச்சி முடிவும்

ஒரு காலகட்டத்தில் பெரியம்மை நோய் மாரியத்தாளின் கோபம் காரணமாகப் பரவுகிறது என்று நம் நாட்டு மக்கள் எண்ணியிருந்தனர். மாரியத்தாளின் கோபம் தணிய தங்கள் வீட்டின்முன் வேப்பிலையை வைத்து வணங்கினர் - மாரியம்மன் கோவிலில் கூழ்காய்ச்சி வந்தவர்க்கெல்லாம் வழங்கி வழிபட்டனர். இந்த மூடநம்பிக்கை நம் நாட்டில் மட்டுமல்லாது மேலை நாடுகளில் கல்வி அறிவு பெற்றவர்களிடம் கூடப் பரவலாகக் காணப்பட்டது. அதாவது மதகுருமார்கள் மூடநம்பிக்கைக்கு முதன்மை அளித்து - வளர்ந்து வந்த மருத்துவ அறிவியல் கருத்துகளுக்குப் பெரும் தடை விதித்து வந்தனர். இச்சூழலில் ஜென்னரின் அரிய கண்டுபிடிப்பு மக்களிடம் செல்வாக்குப் பெற 30 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட வேண்டி வந்தது. அதாவது தமது சோதனையை 27 பேரிடம் தொடர்ந்து ஓயாது நடத்தினார்; அதன்மூலம் பசு அம்மைக் கிருமிகளை மென்மைப்படுத்தி அதனை ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவருக்குப் பெரியம்மை நோய்த் தாக்குதல் இல்லை என்பதைத் திட்டவட்டமாக நிரூபித்தார். ஜென்னர் தமது ஆராய்ச்சி முடிவுகளை அம்மை நோயின் காரணங்களும் விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற சிறு நூலில் 1778ஆம் ஆண்டு வெளியிட்டார்.

அது தவிர அம்மை குத்தல் குறித்து அய்ந்து கட்டுரைகள் எழுதினார். மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டத்தானே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். தாம் கண்டுபிடித்த இந்த முறையை இலவசமாகவே உலகுக்கு வழங்கினார். தமது உழைப்புக்கு - ஆராய்ச்சிக்கு ஆதாயம் தேட இவர் ஒருபோதும் விரும்பவில்லை. இவரது இந்த அரிய கண்டுபிடிப்பு உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இராணுவத்தினர் - கடற்படை வீரர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி முறை கட்டாயமாக்கப்பட்டது. இங்கிலாந் திலிருந்து இந்த வாக்ஸினேஷன் (Vaccination) முறை உலகின் எல்லா நாடுகளிலும் அதிவிரைவாகப் பரவியது. அமெரிக்க நாட்டு ஜனாதிபதியே ஜென்னர் அனுப்பிய தடுப்புஊசியை ஏற்றுக் கொண்டார். அவரது குடும்பத்தார்க்கும் அதைப் போடச் செய்தார்.

இதனால் அம்மை நோய் என்பது மக்கள் செய்த தவற்றிற்கு இறைவன் அளித்த தண்டனை என்ற மூடநம்பிக்கை முடமாக்கப்பட்டது. அம்மை நோயிலிருந்து விடுபட வேண்டுமாயின் பிரார்த்தனையும் - பரிகாரமும்தான் சரியான வழி என்ற மதத் தலைவர்களின் வேதவாக்கு மாமேதை ஜென்னரின் கண்டுபிடிப்புக்கு முன் தலைதாழ்ந்தது. சுருங்கச் சொன்னால் மதம் மாமேதையின் அறிவியலுக்கு முன்னர் மண்டியிட்டது.  20ஆம் நூற்றாண்டில் மட்டும் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உயிர் இழந்தனர். சிலர் தங்கள் பார்வையிழந்தனர். வேறு சிலர் தங்கள் அழகிய தோற்றத்தை இழந்தனர். இப்படிப் பல கோடிக்கணக்கான மக்களை எல்லையற்ற தொல்லைகளுக்கு ஆளாக்கிய பெரியம்மை நோய் (Small pox) இன்று ஜென்னர்தம் அயராத உழைப்பால் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பெரியம்மை நோயின் அறிகுறிகள் உலகில் முற்றிலும் இல்லாமல் செய்த பெருமை இவரையே சாரும். இவரது மருத்துவக் கண்டுபிடிப்பால் பெரியம்மை நோய் இல்லாத உலகை இன்று காணமுடிகிறது.

ஜென்னர் பெற்ற பரிசுகளும் பாராட்டுதல்களும்

ஜென்னரின் திறமையை வியந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் அறித்துச் சிறப்பித்தது. இரஷ்ய நாட்டு ஜார் மன்னர் இவருக்கு மோதிரம் அணிவித்து தமது பாராட்டுதலைத் தெரிவித்தார். பிரான்ஸ், ஹாலந்து, சுவிட்ஜர்லாந்து ஆகிய நாட்டினர் தாமாகவே முன்வந்து அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டு இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் அளித்தனர். 1802ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றம் 10,000 பவுன் பரிசு வழங்கி இவரது ஆராய்ச்சியை மேலும் விரிவுபடுத்த ஊக்குவித்த. அடுத்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து பாராளுமன்றத்தினர் மேலும் 20,000 பவுன்களை வழங்கி இவரது பெருமைக்குப் பெருமை சேர்த்தது. உலகம் முழுவதிலுமிருந்து இவருக்குப் பரிசுகளும் - பாராட்டுதல்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஏனெனில் ஆரம்பத்தில் இவர் கண்ட இந்தத் தடுப்பூசி முறை (Vaccination)  பின்னர் இளம்பிள்ளை வாதம் (Polio myclitics), காலரா, மஞ்சள் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் (டைபாயிடு) ஆகிய ஆபத்தான நோய்களிலிருந்து மனித குலத்தைக் காப்பதுடன் - அந்நோய்களைக் கட்டுப்படுத்தும்  நிலையைப் பெற்று நோயற்ற வாழ்வு வாழ வழிவகுத்துள்ளது. எதிர்காலத்தில் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளுக்கும் இவரது ஆராய்ச்சியே முன்னோடி. ஜென்னர் வாழ்ந்த வீடு இன்று பெரியம்மை நோய்த் தடுப்புக்கு வித்திட்ட அருங்காட்சியகமாக விளங்குகிறது. இவரது சிலை இன்று கென்சிங்டன் தோட்டத்தை அலங்கரிக்கிறது. அமெரிக்க அய்க்கிய நாட்டில் பென்சில்வேனியாவில் பல தொகுப்புக் கிராமங்கள் இவரது பெயரைக் கொண்டுள்ளன. இவர் பிறந்த பெர்க்கிலி நகரம் அமைந்திருக்கும் கிளசெஸ்டாஷயரில் (Gloucestershire) உள்ள ராயல் மருத்துவமனையில் இவர் பெயரில் ஒரு பகுதி (Ward) செயல்பட்டு வருகிறது.

முடிவுரை:

தன்னலம் கடந்த அன்பால் இவ்வுலகை ஒன்றாக இணைக்க விழைந்தார் புத்தர். பண்புடையார் பட்டுண்டு உலகு என்று பண்பால் இவ்வுலகை உயர்த்த நினைத்தார் வள்ளுவர் - சமனிய தத்துவத்தால் -  ஜாதி மதங்களற்ற சமுதாய அமைப்பால் நம் நாட்டில் உயர்வை அடைய அவாக் கொண்டார் பெரியார். மேலே சொன்ன மாண்புடைத் தலைவர் காண விழைந்த சமுதாயம் சிறக்கவும் அங்கு நோயின் தாக்கம் சிறிதும் இல்லாமல் மக்கள் விழிப்புற்று எழவும் எதிர்கால சந்ததியினர் - நோயற்ற பெருவாழ்வு வாழவும் வித்திட்ட விவேகம் மிக்க மருத்துவ மாமேதை ஜென்னரின் புகழ் என்றும் நிலைக்க நாம் அரண் அமைப்போம்

Share