Home 2012 ஜூன் சூழல் காப்போம்-1
வியாழன், 22 அக்டோபர் 2020
சூழல் காப்போம்-1
Print E-mail

- பிஞ்சண்ணா

வணக்கம் பிஞ்சுகளே!

நலமா? கோடை விடுமுறையைக் குதூகலமாகக் கழித்தீர்களா? சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று வந்தீர்களா? பாட்டி, தாத்தா இருக்கும் சொந்த ஊர்களுக்குப் போய் மகிழ்ந்தீர்களா? மகிழ்ச்சி... நானும் பிஞ்சுகளோடு இந்த விடுமுறையைக் கொண்டாடினேன்.

என்ன தான் மகிழ்ச்சி என்று சொன்னாலும், வெயிலில் சென்று விளையாடாதீர்கள் என்று வீட்டில் பெரியவர்கள் பல முறை தடுத்திருப்பார்களே! என்னா வெயில் கொளுத்துது... கழுதை கூட இந்த வெய்யில்ல பொதி சுமக்காது. ஆனா நீங்க விளையாடு றேன்னு ஓடுறீங்க... உட்காருங்க... என்று அவர்கள் சொல்லும்போதெல்லாம் கொஞ்சம் கடுப்பு வரத் தானே செய்யும். நீங்களும் இப்படித்தானே வெளியில போய் விளையாடி இருப்பீங்க... எங்களை மட்டும் அனுப்ப மாட்டேங்குறீங்க என்று கேட்கத் தோன்றும். நம்மில் துடுக்கான சிலர் கேட்டும் இருப்பீர்கள்! அப்போது என்ன சொல்வார்கள் தெரியுமா? எங்க காலத்தில இப்படியா வெயில் அடிச்சது. இப்போ கொளுத்து.. வெளியில நடமாடவே முடியல என்பார்கள். அவர்கள் காலத்தில் என்ன நம் நாடு சுவிட்சர்லாந்து மாதிரியா இருந்தது? என்று அடுத்த கேள்வி மனதில் தோன்றும்.

நியாயம் தான்! அவர்கள் காலத்தில் மட்டும் நம்நாடு குளிர்ச்சிப் பிரதேசமாக இருந்து விடவில்லை. ஆனாலும் ஏன் இப்போது வெயில் கொளுத்துவதாகத் தோன்றுகிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. வீட்டுக்குள் குளிர் சாதனமும், குறைந்தபட்சம் மின்விசிறியும் இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கப் பழகிவிட்டோம். இடையில் மின்தடை ஏற்பட்டு இவை இயங்காத பொழுது, கொஞ்சம் வெயிலில் நின்றாலும் கொடுமையாகத் தெரிகிறது. அப்படியெனில், இவையெல்லாம் இல்லாத அவர்களின் காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள் அவர்கள்? மேற்கொண்டு என்னமோ அப்போது வெயில் தாக்காதது போல் அல்லவா பேசுகிறார்கள்? சென்னையில் 2 மணி நேரம், தமிழகத்தின் பிற பகுதிகளில் 12 மணி நேரம் என மின் தடை ஏற்படும்போதே இந்த நிலைமை என்றால் மின்சாரம் இல்லாத காலத்தில் என்ன செய்திருப்பார்கள்?

சரி, இது ஒருபுறம் என்றால் இன்னொரு பக்கம் புவி வெப்பமயமாதல்,   என்றெல்லாம் செய்திகளில் நிறையச் சொல்கிறார்கள். பள்ளிகளில் கூட ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியெல்லாம் வைக்கிறார்கள். பூமி வெப்பமாகிக் கொண்டே வருவதாகவும், அதனால் பனிப்பாறைகள் எல்லாம் உருகி வருவதாகவும், கடல் மட்டம் கூடுகிறது என்றும் சொல்கிறார்கள். ஓசோனில் ஓட்டை என்கிறார்கள். அப்படியானால் அதைத் தைப்பதற்காக ஒரு ராக்கெட் அனுப்ப வேண்டியதுதானே! சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். நான்கு பாதுகாவலர்களை அனுப்பி எங்கும் போகாமல் பாதுகாத்துவிட வேண்டியதுதானே! என்று கிண்டலடித்துவிட்டு போய்விட முடியுமா? கிண்டலடிக்கலாம்.. ஆனால் விட்டு விட்டுப் போய்விட முடியாது! நமது புவியையும் இயற்கையையும் நம்மை விட்டால் வேறு யார் காப்பது? நாம் காப்பாற்றாவிட்டால் அவை எப்படி நம்மைக் காக்கும்? சரி, நாம் என்றால் அனைவரும் வருவார்களா? நான் மட்டும் எப்படி தனியாக இப்பணியைச் செய்ய முடியும்? என்று தானே கேட்கிறீர்கள். நிச்சயமாகச் செய்ய முடியும். சிறுதுளி தான் பெருவெள்ளம் ஆகிறது. அவ்வெள்ளத்தை தடுக்கும் அணையும், சிறிய சிறிய கற்களின் துணையோடு தான் கட்டப்படுகிறது. ஆக, தொடங்குதல் தான் முக்கியம். நாமே முன்னெடுப்போம். சூழல் காக்கும் பணியில் ரொம்ப பெரிய வேலைகளைத் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவற்றையும் நாம் செய்யலாம். ஆனால், அதைவிட வெகு எளிதாக நாமும் சூழல் காக்கும் பணியில் இணையலாம். அதையே வாழ்க்கை முறையாகவும் பழகிக் கொள்ளலாம். நம் நண்பர்களுக்கும் அவற்றப் பழக்கப்படுத்தலாம். குடும்பத்தில் அனைவரும் கடைபிடிக்கலாம். அப்படியே விரிவானால் நான் மட்டும் என்பது நாம் அனைவரும் என்று ஆகிவிடும் அல்லவா? சூழல் காக்கத் தயாராவோமா?

இந்தப் படம் சொல்லும் செய்தி என்ன? தெரிகிறதா உங்களுக்கு?

 

(காப்போம்)

சூழல் காப்போம்-2

Share