Home 2012 ஆகஸ்ட் சூழல் காப்போம்-4
திங்கள், 18 ஜனவரி 2021
சூழல் காப்போம்-4
Print E-mail

தண்ணீர் தண்ணீர்......!

- பிஞ்சண்ணா

அண்மையில் இணையத்தில் அருமை யான தொரு விளம்பரம் கண்டேன். சின்னஞ் சிறு குழந்தையொன்று தவழ்ந்து கொண்டிருந்த நிலையிலிருந்து முதல் முறையாக நடக்கத் தொடங்குகிறது. தாயும் தந்தையும் எட்டு அடி எடுத்து வைக்கும் குழந்தையை நோக்கி கைகளை நீட்டி தங்களை நோக்கி அழைக்கின்றனர். குழந்தை தத்தித் தத்தி நடக்கிறது. நீட்டிய கைகளுடன் நிற்கும் தாயின் திசையைவிட்டு விலகி நடக்கிறது. பெற்றோர் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் குழந்தையை! அறையின் ஓரத்தில் தண்ணீர்க் குழாயிலிருந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீரை நோக்கிச் செல்கிறது குழந்தை. குழாயை அடைத்து, அதை மூடி தண்ணீர் சொட்டுவதை நிறுத்துகிறது.

 

 

தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி அந்த முப்பது நொடி விளம்பரம் நிறைவுபெறுகிறது. அடுத்த தலைமுறைக்கு இருக்க வேண்டிய சூழலியல் உணர்வை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?

டீசல் சிக்கனம் தேவை இக்கணம் என்ற வாசகத்தை சாலையோரங்களில், அரசு அழகான விளம்பரப்பலகையாக வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். இன்று அதைவிட அவசியமானதாகிவிட்டது தண்ணீர் சிக்கனம் குறித்த விளம்பரம். ஏனெனில் நமக்கு தண்ணீர் சிக்கனம் பற்றிய தெளிவான எந்தப் பார்வையும் இல்லை. ஊதாரித்தனமாக செய்யப்படும் செலவுகளைப் பற்றிச் சொல்லும்போதுதான் தண்ணியா செலவழிக்கிறான் காசை என்று எடுத்துக்காட்டு சொல்வார்கள். அப்படியெல்லாம் இனி தண்ணீரையும் தண்ணியாக செலவழிக்க முடியாது; கூடாது.

உலகின் 71% தண்ணீரால் நிரம்பியதுதானே. மீதம் 29% இருக்கும் நான் அதைப் பயன்படுத்துவதால் நீர் எப்படி குறைந்துபோகும்? என்று உங்களுக்குத் தோன்றலாம். 71% தண்ணீர் என்று சொல்லும்போதே நமக்கொரு செய்தி புலப்படும்.

அந்த அளவு, பெருமளவில் கடல் நீரைக் குறிக்கும் என்பதுதான் அது.

நாம் பயன்படுத்தும் எந்த வகையான நீரும் உப்பு நீரல்ல. நன்னீர் அளவு உலகில் மிகக்குறைவே! குறிப்பாகக் குடிநீருக்கு அதைத்தானே நாம் பயன்படுத்துகிறோம். கடல்நீரை நாம் குடிக்கப் பயன்படுத்த வேண்டுமானாலும் அதையும் நீண்ட வேதியியல் நடவடிக்கைகளுக்குப் பிறகே செய்ய முடியும்! அப்படி அரிதாய்க் கிடைக்கும் நீரை நாம் எவ்வளவு சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டாமா?

அப்படியென்றால் நான் என்ன குடிநீரை வீணாக வீதியில் இறைக்கிறேனா? என்று கோபப்பட வேண்டாம். குடிநீரை வீதியில் இறைத்து வீணாக்கவில்லையே தவிர, நிச்சயம் வீணாக்கவே செய்கிறோம். குடிநீர் என்று சொன்னதும் நம்மில் சிலருக்கு கேன்களில் அடைத்து விற்கப்பட்டு, நாம் விலைக்கு வாங்கும் குடிநீர் நினைவுக்கு வரலாம். அது பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கருதி நாம் காசு கொடுத்து வாங்குகிற நீர்  அவ்வளவுதான். என்ன.. கருதி என்று இழுக்கிறீர்களே? அப்படியானால் அது பாதுகாக்கப்பட்டதில்லையா? சுத்திகரிக்கப்பட் டதில்லையா? என்று சந்தேகம் தோன்றுகிறதா? ஆம். உண்மைதான். தொடக்கத்தில் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்கத் தொடங்கிய போதுதான்,  அது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், றிக்ஷீவீயீவீமீபீ ஷ்ணீமீக்ஷீ என்று விளம்பரம் செய்தார்கள். கேன்களில் போட்டிருந்தார்கள். ஏனெனில் பாட்டிலில் வாங்கிக் குடிப்பதை நாம் பழகிக் கொள்ள வேண்டாமா? இதைக் குடித்தால் நோய் வராது என்று நாமாக நம்ப வேண்டாமா? அதற்காகத்தான்.

ஆனால் இப்போது நாம் பயன்படுத்தும் கேன் தண்ணீரைப் பாருங்கள். அதில் ‘Packaged drinking water’ என்றுதான் போட்டிருக்கும். அதாவது அடைத்து வைக்கப்பட்ட (Pack செய்யப்பட்ட) குடிநீர் அவ்வளவுதான். அதில் பாதுகாப்பும் இல்லை. சுத்திகரிப்பும் இல்லை.

அப்படிப் பார்க்கும்போது இன்று நாம் பயன்படுத்துகிற பெருமளவு நீர் குடிநீர்தான். அதைத்தான் நாம் வீணாக்கிக் கொண்டிருக் கிறோம். நமக்குக் கிடைக்கும் அளவு குடிநீரும், நிலத்தடி நீரும் கூட இல்லாமல், எத்தனை நாடுகள் தவிக்கின்றன தெரியுமா? ஏன் நமது நாட்டிலேயே எத்தனை மாநிலங்கள் தவிக்கின் றன தெரியுமா? ஆனால் நாம் அவற்றை வீணில் கழிவுகளுடன் கலக்க விடுகிறோம். எங்கெல்லாம் நாம் நீரை வீணாக்குகிறோம் என்பதற்குப் பெரிய பட்டியலே இருக்கிறது. நீங்களே கூட ஒன்று தயார் செய்யுங்களேன்.

ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் எந்தெந்த வகையில் நாம் நீரைப் பயன்படுத்து கிறோம்? அதில் எவ்வளவு பயனுள்ள அளவு? எவ்வளவு வீண் செய்கிறோம்? என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டாலே புரிந்துவிடும். குடிநீர் என்று தம்ளரில், பாட்டிலில் நாம் குடிப்பதற்காகப் பிடிக்கும் நீரிலேயே நாம் வாய்வைத்துப் பயன்படுத்தியதைப் பிறர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக என்ன செய்கிறோம்? கழிவுத் தொட்டியில் ஊற்றுகிறோம். அல்லது பாட்டிலாக

இருந்தால் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்டுச் செல்கிறோம்.

குப்பைத் தொட்டிக்குப் பதிலாக அதை ஒரு பூச்செடியில் ஊற்றலாம்; வீட்டுக்கு வெளியில் உள்ள தாவரத்திலாவது ஊற்றலாம். நிலத்தடி நீரிலாவது அது சேரும் என்று துளித்துளியாய் தண்ணீரைச் சேமிக்க வேண்டியதன் அவசியத் தைச் சொல்கிறார்கள்  சூழலியலாளர்கள். எல்லாமே நாளைய தலைமுறையாகிய நமக்குத்தான் பிஞ்சுகளே! பெரியார் தாத்தாகூட தண்ணீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் தெரியுமா? அடுத்த இதழில் பார்ப்போம்.

(காப்போம்)

சூழல் காப்போம்-2

சூழல் காப்போம்-5

Share