Home 2012 ஆகஸ்ட் துகளிலும் இல்லாத கடவுள்
புதன், 20 ஜனவரி 2021
துகளிலும் இல்லாத கடவுள்
Print E-mail

பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சிபி பயங்கரமான கடுப்பில் இருந்தான். கடுகடுவென இருந்த முகத்தோடு விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்தான். அவன் இருந்த மனநிலையில் அங்கே புரு வந்திருப்பதை அவன் கவனிக்கவில்லை.

என்ன சிபி! ஏதோ மூட் அவுட்டில் இருக்கிற மாதிரியிருக்கு! என்ற புருவின் குரல் கேட்டபின் தான் அங்கு யார் இருக்கிறார்கள் என்பதையே கவனித்தான் சிபி. அவன் பதில் சொல்லத் தொடங்குமுன்னரே, வாசலில் இருந்து ஒலித்தது அவன் அக்கா தமிழீழத்தின் குரல்.

ஆமாமா... வரும்போது வழியெல்லாம் ஒரே சண்டை, அதனால சிபியார் மூட் அவுட்டில் இருக்கிறார் என்றாள்.

சண்டையா? யார்கூட சிபியார் சண்டை போட்டார்? என்னாச்சு? என்று மேலும் கொஞ்சம் கிண்டலோடு கேட்டான் புரு, சிபியின் உடலில் காயத்தைத் தேடியபடி.

வாய்ச்சண்டைதான்என்றாள் தமிழீழம் புத்தகப் பையை இறக்கி வைத்தபடி.

சண்டையெல்லாம் இல்ல புரு! விவாதம்தான். கடவுள் துகள்னு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடவுள் அணு கண்டுபிடிக்கப்பட்டதுன்னு வர்ற வழியில பத்திரிகை போஸ்டர் தொங்கவிட்டிருக் காங்க...

அதப் பார்த்துட்டு பார்த்தியா! கடவுளைக் கண்டுபிடிச்சிருக்காங்க... கடவுள் இருக்குன்னு சொல்லிட்டாங்கன்னு ஒரேடியா குதிக்கிறான் அந்த வெங்கி மங்கி என்று விளக்கம் சொன்னான் சிபி.

யாரு அது வெங்கி மங்கி? என்று கேட்ட புருவுக்கு, அது அவன் பிரண்ட் _ வெங்கடேசன் என்றான் சிபி.

சே... சே வெங்கி மங்கின்னெல்லாம் சொல்லக்கூடாது என்று திருத்தினான் புரு.

அப்படித்தான் சொல்வேன். வெங்கி மங்கி... வெங்கி மங்கி... வெங்கி மங்கி... அவன் இன்னும் ஆறறிவுக்கு வரவேயில்லை என்று சொன்ன சிபியை சமாதானப்படுத்திய புரு.

எல்லோருக்கும் ஆறாவது அறிவு இருக்கு; அதைப் பயன்படுத்தத்தான் ஆரம்பிக்கல, சரி வெங்கி என்ன சொல்றான்?

கடவுள் துகள் கண்டுபிடிப்புனு போட்டிருக்கிறதைப் படிச்சிட்டு, கடவுளைக் கண்டுபிடிச்சாச்சுங்கிறான். அதான் நான் கேட்டேன், இப்போதான் கடவுளைக் கண்டுபிடிச் சாங்கன்னா அதென்ன தொலைஞ்சு போயிருந் துச்சா இவ்ளோ நாளு? இல்ல யாராவது கடத்தி வச்சிருந்தாங்களான்னு என்றான் சிபி.

ஒரு வேளை, அவரை தேடப்படும் குற்றவாளி மாதிரி போலீஸ் எதுவும் தேடிக்கிட் டிருந்துச்சோ? ஏன்னா பாவம் சாமியார்களைத் தேடிப்பிடிக்கிறதுதானே இப்போ போலீசுக்கு வேலையாகவே இருக்கு என்றபடி உள்ளே வந்தார்கள் குறிஞ்சியும் சூர்யாவும். சரியாகத்தான் கேக்குறீங்க... சரி, பத்திரிகைல என்ன போட்டிருக்குன்னு படிச்சானா வெங்கி? என்று கேட்டான் புரு.

எங்க படிச்சோம்? போஸ்டரைப் பார்த்துட்டுதான் துள்ள ஆரம்பிச்சுட்டானே என்று சளித்துக்கொண்டான் சிபி.

அதானே. சினிமா போஸ்டரைப் பார்த்துட்டு கதை சொல்ற ஆட்களாச்சே நாம.. சரி நீயும் படிக்கல. அவனும் படிக்கல... படிச்சிருந்தாலும் நம்ம நாட்டு பத்திரிகையெல்லாம் உங்கள மேற்கொண்டுதான் குழப்பியிருப்பான். ஏன்னா கடவுள் இல்லைன்னு நிரூபிக்கிற துகளுக்கு கடவுள் துகள்னு பேரவைச்சு பரப்புற பத்திரிகைகளைப் படிச்சா அறிவா வளரும்? என்று உண்மை நிலையைக் கூறி சலிப்பிற்குச் சென்ற புருனோ, சரி, யாருக்கு இதைப் பற்றி தெரியும்? என்று வினா தொடுத்தான் பிஞ்சுகளை நோக்கி.

இப்போதான் அதைப்பத்தி தேடிப்பார்த்தேன் புரு! அந்தத் துகளுக்கு ஹிக்ஸ் போசான்னு (Higgs Boson) பேரு வச்சிருக்காங்களாமே! என்று  மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள் பவானி.

ஆமா... இப்படி பேரு வைக்கிறதுக்கு முன்னாடி, இப்படி ஒரு துகள் இருக்கும்னு கண்டுபிடிக்கிறதுக்கும் முன்னாடி, என்னடா இவ்ளோ நாளா ஆராய்ச்சி பண்றோம்... கிடைக்கமாட்டேங்குதுங்கிற சலிப்பில் சொன்ன பேருதான் ‘Goddamn Particle’ (நாசமாய்ப் போன துகள்). அந்தப் பெயரைப் போடுறதுக்கு தயங்கிகிட்டு இந்தப் பத்திரிகைக்காரங்க போட்டதுதான் God particle (கடவுள் துகள்)_ங்கிற பேரு என்றான் புரு.

அப்படின்னா அது Goddamn particle இல்ல... Goddamn பத்திரிகைகள் என்று சீறினான் சிபி. சிபியின் சீறலுக்கு சிரிப்பைப் பரிசாய்த் தந்தனர் அனைவரும். ஹிக்ஸ் போசான்னு ஏன் பேரு வச்சிருக்காங்க தெரியுமா? என்று கேட்டான் புரு.

பவானி பதில் சொன்னாள், ஹிக்ஸ்_ங்கிற வருதான் இப்படியொரு துகள் இருக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னவரு. இப்போ கண்டுபிடிக்கிற வரைக்கும் ஆராய்ச்சி பண்ணவரு. போஸ்ங்கிறது இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திரநாத் போஸ்_ங்கிற அறிவியல் ஆராய்ச்சியாளர் பேரு! அவரும் அய்ன்ஸ் டீனோட சேர்ந்து ஆராய்ச்சி பண்ணவரு. இரண்டு பேரு பெயரையும் சேர்த்து ஹிக்ஸ் போசான்னு வைச்சிருக்காங்க என்றாள்.

சரியாச் சொன்ன! உலகம் எப்படி உருவானதுங்கிறதைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள்லாம் என்ன சொன்னாங்க? என்று கேட்டான் புரு.

உலகம் மட்டுமில்ல... இந்த பிரபஞ்சமே... அதாவது பேரண்டமே ஒரு பெரு வெடிப்பில உருவானதுதான்... அதுக்கு Big bang-னு பேரு... அப்படி ஒரு சிறு அணு வெடிச்சுதான் இன்னைக்கு இவ்ளோ பெரிய பேரண்டம் உருவாகி விரிஞ்சுக்கிட்டிருக்குன்னு நீ ஏற்கெனவே சொல்லியிருக்கியே  புரு என்றாள் குறிஞ்சி.

ஆமா... நல்லா நினைவு வச்சிருக்கீங்க... இந்த பேரண்டம் எப்படி உருவானதுங்கிறதைக் கண்டுபிடிக்கிறதுக்கு நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சாங்க... பூமி சூரியன்ல இருந்து வெடிச்சு வந்தது. இதெல்லாம் கேலக்சியில இருந்து பிரிஞ்சு சுத்திக்கிட்டிருக்கு... அதுவும் விரிவடைஞ் சுக்கிட்டிருக்கு... அப்ப கேலக்சி எதில இருந்து வந்ததுன்னு... Reverse method-ல தான் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சாங்க... அப்போ கடைசியா அணுன்னு ஒன்றிருக்குன்னு கண்டுபிடிச்சாங்க.. அதை உடைக்க முடியாதுன்னு நினைச்சுக்கிட் டிருந்தப்போ... இல்ல எலக்ட்ரான்னு ஒன்னு இருக்கு... புரோட்டான்னு ஒன்னு இருக்குன்னு. அடுத்தடுத்து அணுவுக்குள்ள இருக்கிற விசயங்களைக் கண்டுபிடிச்சாங்க.

இந்த அணுக்கள் மோதினா பெரிய அளவு சக்தி உருவாகுதுங்கிற தத்துவத்தை வச்சுதான் அணுமின்சக்தி தொடங்கி, அணுகுண்டு வரைக்கும் உருவாக்குனாங்க.

இதே மாதிரியான விசயம்தானே பெரு வெடிப்பு நடந்தபொழுதும் ஏற்பட்டிருக்கும்ங்கிற ஆராய்ச்சியோட முடிவுதான் இன்னைக்குக் கிடைச்சிருக்கிற Higgs Boson. ஏற்கெனவே 12 துகள்களும், 4 விசைகளும் இருக்குன்னு கண்டுபிடிச்சு, இதுக்கு அடுத்தும் இருக்கும் ஒரு துகள்.. அதுதான் கடைசித்துகள்... அதாவது கடைசியா கண்டுபிடிக்க வேண்டிய முதலில் இருந்த துகள்...னு முடிவுபண்ணி களத்தில் இறங்குனாங்க. பீட்டர் ஹிக்ஸ்_ங்கிற அறிவியலா ருடைய முயற்சி... 1964ல் இருந்து கிட்டத்தட்ட 48 ஆண்டு கனவு... அதுக்கான உழைப்பு... 1998ல் இருந்து இந்த ஆய்வுக்கூடத்தை 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கி நடந்த ஆய்வோட முடிவுதான் இன்னைக்கு கிடைச்சிருக்கிற இந்த துகள்.

10 ஆண்டுகள் உருவாக்குனாங்களா? வியந்தான் சூர்யா.

ஆமா... சும்மாவா? பூமியிலிருந்து 100 மீட்டர் ஆழத்தில 27 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு பெரிய Collider (இடிப்பான்) உருவாக்கி அதுக்குள்ள இந்த மிகச் சிறிய துகள்களை அதிகபட்சமான வெப்பநிலையில மோதவிட்டு அதனுடைய ஆற்றலை அளக்கிறதுன்னா சாதாரணமா? வெப்பம்னா சாதாரண அளவு இல்ல... சூரியனைப் போல பல லட்சம் மடங்கு வெப்பம் வேணும்... ஆனா அந்த வெப்பம் வெளியேறாம.. பாதுகாப்பா இருக்கிற அளவுக்கு அதைக் குளிர் விக்கணும். அதுவும் இந்த பிரபஞ் சத்திலேயே இல்லாத அளவு _2700 சி அளவுக்கு குளிர்விக்கணும் என்று விளக்கினான் புரு.

அடேயப்பா.. அப்போ பூமிக்கடியில் ஒரு பெரு வெடிப்பே நடத்தி பார்த்திருக்காங்க போல என்றாள் தமிழீழம்.

ஆக.. அவ்வளவு வெப்பத்தையும் குளிர்விக்கிற அளவுக்கு கருவி உருவாக்கிட் டோம்னா... சூரியனுக்குக் கூட ஜாலியா ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் போலிருக்கே! என்றான் சூர்யா.

நிச்சயமா... அதுவும் ஒருநாள் நடக்கும். இந்த ஹிக்ஸ் போசானும் மற்ற துகள்களும் அணுவும்தான் 13 ஆயிரம் லட்சம் ஆண்டுக்கு முன்னாடி வெடிச்சு, விரிவடைய ஆரம்பிச்சு, குளிர்ந்து... படிப்படியா வளர்ந்த இந்த பேரண்டம் உருவாகியிருக்கு... ஒரே இடத்தில உட்காந்து பூமி வான்னாரு வந்துச்சு... சூரியன் வான்னாரு வந்துச்சுன்னு கதைவிட்டு கடவுள்னு புளுகியிருக்காங்க எல்லா மதக்காரங்களும். இப்போ உலகம் உருவாக அடிப் படைக் காரணம் எந்தத் துகள்னும் கண்டுபிடிச் சாச்சு. தூண்லயும் இருப்பான் துரும்பிலயும் இருப்பான் கடவுள் சொல்லிக்கிட்டிருந்தவங்க... இப்போ கடைசித்துகள்வரை பார்த்தாச்சு... அதிலயும் கடவுள் இல்லைங்கிறது உண்மையாயி ருக்குன்னு வந்திருக்கிற முடிவைப் பார்த்து வாயைப் பொத்திகிட்டு இருக்காங்க... இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியாம, குழப்பி விடுற மாதிரி கடவுள் துகள்னு சொல்லிக்கிட்டி ருக்காங்க இந்த பத்திரிகைகள் எல்லாம் என்று நீண்ட விளக்கமளித்தான் புரு.

நாளைக்கு மாட்டுனான் அந்த வெங்கி... என்று தன் கணக்கைத் தீர்க்கத் தயாரானான் சிபி.

அவன் மாட்ட வேண்டாம். அவனுக்கும் தெளிவூட்டு என்று சொன்னபடி தன் நண்பர்களை சந்திக்கக் கிளம்பினான் புருனோ. கடைசித் துகளிலும் கடவுள் இல்லை என்னும் உண்மையை உறுதி செய்து கொண்ட பிஞ்சுகள் தங்கள் நண்பர்களுக்கும் இதை எடுத்துச் சொல்லத் தயாரானார்கள். என்ன நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்வீர்கள்தானே!

Share