அழிவிலிருந்து எழுந்த அற்புத நகரம் பெர்லின்
Print

- முனைவர் ந.க.மங்கள முருகேசன்

ஜெர்மனி என்ற நாட்டின் பெயர் கூறியவுடன் எவர் நினைவிலும் நிழலாடும் நகரம் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின். நெருப்பில் வீழ்ந்தாலும் உயிர் பிழைக்கக்கூடிய பறவை என்று கற்பனையாகக் கூறும் பறவை பீனிக்ஸ் பறவை. அதுபோல இரண்டாவது உலகப் பெரும்போரில் குண்டு மழைகளில் நனைந்த நகரம் என்று ஒரு நகரைக் கூறவேண்டுமானால் பெர்லின் நகரைத்தான் கூறவேண்டும்.

அணுகுண்டு மனித உயிர்களுக்கு எவ்வளவு அழிவைப் போருக்குப்பின் அய்ம்பது அறுபது ஆண்டுகள் கடந்த பின்னும் அழியாத கோலமாக அவலநிலையை உருவாக்கும் என்பதற்கு வாழும் நினைவுச் சின்ன நகரங்களில் பெர்லினும் ஒன்று.

பெர்லின் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. பழமை மட்டுமல்லாது அதன் வரலாற்றில்தான் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு முதலே அதாவது இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னமேயே பெர்லினைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பதிவாகி இருந்தபோதிலும் அது ஜெர்மானியப் பேரரசின் மாமன்னராக விளங்கிய பிரெடெரிக் வில்லியம் எனும் பேரரசரின் ஆட்சிக் காலம் முதலேதான் தலைநகரமாய் விளங்கியது.

அதன்பிறகு பெர்லின் நகரம் பிரஷ்யா, ஜெர்மன் பேரரசு, வெய்மர் குடிஅரசு ஆகியவற்றின் தலைநகரமாகவும் விளங்கினாலும், ஹிட்லர் என்னும் சர்வாதிகாரி _ வல்லாட்சியாளர் _ உலகையே ஆட்டிப் படைத்தவர் _ இங்கிலாந்து எனும் சிங்கத்தின் மீசையைப் பிடித்து உலுக்கிய ஹிட்லர் மீசை என்று உலகில் பலரும் அவருடைய மீசையைப்போல் நறுக்கு மீசை வைத்துக்கொண்ட மீசைக்குச் சொந்தக்காரரான ஹிட்லரின் மூன்றாம் ரெய்ச் என்னும் பெயருடைய நாட்டின் தலைநகராக விளங்கியது.

இன்னும் கொஞ்சம் பெர்லினின் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம். ஏனென்றால் உலகிலேயே ஒரு பெருஞ்சுவர் வைக்கப்பட்டு இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்ட நகரம் ஜெர்மனிதான்.

இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின் ஜெர்மனி -_ மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என்று இரண்டு நாடுகளாயிற்று. இரண்டுக்கும் தலைநகர் பெர்லின். ஒரே நாட்டு மக்கள் 1947க்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகள் ஆனதுபோல் ஒரே இன மக்கள், அண்ணன் தம்பிகள், அக்காள் தங்கைகள் சுவரினால் பிரிக்கப்பட்டார்கள்.

1996ஆம் ஆண்டு பிரிந்த இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்த அதிசயம் நிகழ்ந்தது. பெர்லினைக் கிழக்கு, மேற்கு பெர்லினாகப் பிரித்த சுவர் இடிந்தது. ஜெர்மானியக் குடிஅரசின் தலைநகரமாக மீண்டும் ஆயிற்று. பிரித்த சுவரின் கற்கள் இன்று பல வீடுகளில் நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது.

இன்றைய பெர்லின் அய்ரோப்பியக் கண்டத்தின் கலை, இலக்கியத்தில் மட்டுமில்லை. பொருளாதாரத்திலும் முதன்மைப் பங்கு வகிக்கிறது. ஜெர்மன் நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. உலகப் பொருளாதாரச் சந்தையில் அதன் நாடித்துடிப்பு விளங்குகிறது. பெர்லினில் சுமார் நாற்பது இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

உலகின் புகழ்மிக்க நகரங்கள் ஏதேனும் நதிக்கரையில் அமைந்துள்ளதுபோல் பெர்லினும் ஸ்பிரி எனும் நதியின் கரையில் அமைந்துள்ளது.

பழமையும், புதுமையும் இணைந்த ஜெர்மனியில் காணவேண்டிய கலைச் சிறப்புடைய கட்டிடங்கள் நினைவுச் சின்னங்கள் அந்நாட்டின் கலைப் பெருமையையும் வரலாற்றையும் கூறுகின்றன.

ரெய்ச் ஸ்டாக்

ஜெர்மானிய நாடாளுமன்றக் கட்டடம் தான்சி, 1884லிருந்து பத்து ஆண்டுகள் ஆயிற்று இதைக் கட்டிமுடிக்க. 137 மீட்டர் நீளம், 97 மீட்டர் அகலம், பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. 1933ல் தீ விபத்து, இரண்டாம் உலகப் போரின் தாக்குதல், இரண்டும் அதன் மைய மண்டபத்தையும், அதிலிருந்த அலங்காரங்களையும் சிதைத்தன. 1999ல் மீண்டும் மய்யமாய் கண்ணாடியால் மீண்டும் உருவாகியது. நாடாளுமன்றம் மீண்டும் அங்கே வந்தது. ரெய்ச் ஸ்டாக் தன் பழம்பெருமையை மீண்டும் அடைந்தது.

பிராண்டன்பர்கர் வாயில்

1996க்கு முன் கிழக்கு, மேற்கு ஜெர்மனியைப் பிரித்த வாயில் இன்று இணைப்பின் அடையாளம். இது கட்டப்பட்ட ஆண்டு 1791. அறுபதடி அலங்கார வாயில் இது. இதில் கிரேக்கப் புராணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உடைக்கப்பட்ட பெர்லின் சுவரில் இன்று எஞ்சி நின்று அந்நிகழ்வுக்கு சான்று தருகிறது.

பெர்லின் சுவர், செக்பாயிண்ட் சார்லி

இன்று பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் பார்வையாளர்கள் தினமும் வருகை புரிந்து வியந்து காணும் இடம் இது. 1961ல் கிழக்கு ஜெர்மனி பெர்லினை இரண்டாகப் பிரித்துச் சுவர் எழுப்பியது. அமெரிக்க அரசு இந்தச் சுவரில் மூன்று இடங்களில் செக் பாயிண்ட் சார்லி எனும் சாவடிகள் அமைத்திருந்தது. பெர்லின் சுவர் மறைந்தது. அச்சாவடிகளும் மறைந்தன.

ஆக்ஸ்சந்தை (அலெக்சாண்டர் ஃபிளாட்ஸ்)

முன்னாளில் ஆக்ஸ்சந்தை என அழைக்கப்பட்ட அலெக்சாண்டர் சதுக்கம் இது. இங்கே பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்துவிட்டன. இப்போது புதியன எழுந்துள்ளன. உலகப் புகழ்மிக்கத் தொலைக்காட்சிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது அய்ரோப்பாவின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்று. 1200 அடி உயர காங்கிரீட் அமைப்பு இது. உச்சியில் கோளவடிவில் சுழலும் உணவு விடுதி உள்ளது. 1969ல் இங்கு உலக நேரம் காட்டி, உலக நட்புக்காக நீர்ச்சுனை ஆகியன அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கட்டடங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள், பழைய தேவாலயம் ஆகியன உள்ளன.

கெய்சர் வில்லியம் தேவாலயம்

மேற்கு பெர்லினின் மய்யத்தில் உள்ளது. பிரஷ்ய ஆட்சியின்போது கட்டப்பட்டது. பழைய தேவாலயத்தில் சேதமடைந்த கோபுரங்கள், உள்ளே அலங்கார அமைப்புகள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாகும் கலைப்படைப்புகள்.

போட்ஸ்டாமர் மய்யம்

போருக்குப்பின் புதுப்பிக்கப்பட்ட அய்ரோப்பாவின் பரபரப்பு மிகுந்த இப்பகுதி பாதாள ரயில் நிலையம், திரையரங்குகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள்கொண்டு 1998 முதல் எழில் பெற்றுப் பரபரப்புடன் விளங்குகிறது.

மியூசியம் தீவு

அய்ந்து அருங்காட்சியகங்கள் _ தேசிய அருங்காட்சியகம், பழைய அருங்காட்சியகம், கெய்சர் அருங்காட்சியகம், புதிய அருங்காட்சியகம், பொகாமன் அருங்காட்சியகம் ஆகியன ஸ்பிரீ நதியில் உள்ள தீவில் உள்ளன. பிரெடெரிக் மாமன்னரால் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்திற்குச் சொந்தமான கலைப்பொருட்களைக் காணலாம். பொகாமன் அருங்காட்சியகத்தில் கிரேக்க, ரோமானியப் பேரரசுக் கலைப்பொருட்களையும், புகழ்பெற்ற பாபிலோனிய நகரின் கதவையும் காணலாம்.

இந்த மியூசியம் தீவில் 1894ஆம் ஆண்டு கட்டப்பட்ட 114 மீட்டர் நீளமும், 73 மீட்டர் அகலமும் உடைய பெர்லினர்டோம் தேவாலயம் உள்ளது. இதில் பல வண்ணக் கண்ணாடிகளுள் நுணுக்கமான வேலைப்பாடுகள் உடைய உள்ளறை காணத்தக்கது. இதில் அற்புதமான வழிபாட்டு மேடை உள்ளது.

பிரெடெரிக் மாமன்னர் சிலை

தேசிய நூலகத்தில் 44 அடி உயரத்தில் பிரெடெரிக் மாமன்னரின் வெண்கலச் சிலை கம்பீரமாக நிற்கிறது. மன்னர் காண்டே என அழைக்கப்பட்ட அவருடைய பிரியமான குதிரை மீது அரச உடை, முடி, காலணிகளுடன் எடுப்பாகத் தோன்றுகிறார். பீடத்தின் கீழே பிரெடெரிக் மன்னரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
இரண்டு தேவாலயங்கள்

பிரெஞ்சு தேவாலயம், ஜெர்மானிய தேவாலயம் எதிர் எதிரே எடுப்பாக அமைந்துள்ளன. பிரெஞ்சு தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகம் உள்ளது. ஜெர்மானிய தேவாலயம் அய்ங்கோணத்தில் அமைந்துள்ளது. ஜெர்மானிய வரலா-று தொடர்பான அருங்காட்சியகம் இதில் உள்ளது.

வியப்பின் வரலாற்றுக் குறியீடு என்று உண்மையிலேயே குறிப்பிடத்தக்க நகரம் பெர்லின் நகரம். பெர்லின் நகரம் கலை, பொழுதுபோக்குக் கூறுகள் மட்டும் கொண்டதல்ல. உயர்வான கல்வி, ஆராய்ச்சி மய்யம் அது. புகழ்மிக்க நான்கு பல்கலைக்கழகங்கள், நூற்றுக்கணக்கான கலை, தொழில் ஆகிய கல்லூரிகள் பெர்லினுக்குப் பெருமை சேர்க்கின்றன. உலகம் முழுமையிலுமிருந்து வந்து மாணவச் செல்வங்கள் கல்விக்கண் பெறுகின்றனர். அறிவியல் ஆய்வுக்கும் இங்கே பஞ்சமில்லை.

1945ஆம் ஆண்டு முடிவில் அழிவின் விளிம்பில் இருந்த பெர்லின் இன்று உயிர்பெற்றுத் திகழ்கிறது எனில் ஜெர்மன் மக்களின் உழைப்பு அதற்கு உரமாகித் தேவாலயங்களைக் காட்சிக் கூடமாக ஆக்கியிருப்பது உண்மை.

Share