Home 2012 டிசம்பர் சாமிகளின் பிறப்பும் இறப்பும் 4
வியாழன், 02 பிப்ரவரி 2023
Print E-mail

நெருப்புக் கேட்டுப் பரிதவித்த சாமிகள்

- ச.தமிழ்ச்செல்வன்

கொசப்பட்டி என்ற கிராமத்தில் நல்லசிவம், காளியம்மாள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு சொத்து சுகம் ஏதும் இல்லை. 15 ஆடுகள் தான் அவர்களின் சொத்தாக இருந்தன. அவர்களுக்கு மாலையம் மாள் என்றொரு மகள் இருந்தாள்.

அவள்தாம் நம்ம சொத்து என்று நல்லசிவம் அடிக்கடி கூறுவார். காளியம்மாளுக்கு பரமசிவம் என்று ஒரு தம்பி. மாலையம்மாளுக்குத் தன் மாமன் பரமசிவத்தைக் கண்டால் பிடிக்காது. தன் அம்மா தன் மீது மட்டும்தானே பிரியமாக இருக்கலாம். தம்பி பரமசிவத்தின் மீதும் ரொம்பப் பிரியமாக இருக்கிறாளே என்று அம்மா மீது மாலையம்மா ளுக்குக் கொஞ்சம் கோபம்.

அதனால் பரம சிவத்தோடு பேசமாட்டாள். அந்த ஊரில் இவர்களுக்கென்று சொந்தபந்தம் ஏதுமில்லை. அது முழுக்கவும் மண்பானை செய்கிற குயவர்கள் வாழும் ஊர். அதனால்தான் அவ்வூருக்குக் கொசப்பட்டி என்று பேர் வந்தது. குயவர் பேச்சு வழக்கில் கொசவர் என்று ஆகி கொசப்பட்டி ஆனது.

காலம் போனது. நல்லசிவம் ஒருநாள் உடம்பு சரியில்லை என்று படுத்தார். அப்புறம் அவர் எழுந்திருக்கவே இல்லை. அப்படியே கொஞ்ச நாளில் இறந்துவிட்டார்.இப்போது இளைஞனாக இருந்த பரமசிவம் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். பொறுப்பென்ன பொறுப்பு. அந்த 15 ஆடுகளை மேய்ப்பதுதான் பொறுப்பு. கொஞ்ச நாளில் காளியம்மாளும் இறந்துவிட்டாள்.

சாகப்போகும் நேரத்தில் தன் தம்பியை அழைத்தாள். அவன் கைகளைப் பிடித்து நானும் சாகப்போறேன். என் மகள் மாலையம்மாள் அனாதை ஆகிவிடக்கூடாது. நீதான் அவளை மணந்து கொண்டு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதன்படி அவள் இறந்த பிறகு பரமசிவமும் மாலையம்மாளும் கல்யாணம் செய்து கொண்டார்கள்.

ஆனாலும் பேருக்குத்தான் கணவன் மனைவியாக இருந்து வந்தார்கள். எப்பவும்போல மாலையம்மாள் பரமசிவத்திடம் பேசுவது கிடையாது. காலையில் சோறு பொங்கி வைப்பாள். பரமசிவம் தானே எடுத்துப் போட்டுச் சாப்பிட்டுவிட்டு காட்டுக்கு ஆடு மேய்க்கப் போய்விடுவான். மதியம் அவனுக்குக் கஞ்சிக்கலயம் கொண்டு போவாள்.

மேய்க்கிற இடத்துக்குப் போய் தூரத்தில் கஞ்சிப்பானையை வைத்து விட்டு இந்தப்பக்கம் வந்துவிடுவாள். அவன் வந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவான். போனதும் காலிப்பானையைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவாள். ஒரு பேச்சு இருக்காது.

இப்படியாக சோறும் கஞ்சிப்பானையுமாக அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஒருநாள் வழக்கம்போல மதியம் 12 மணிக்கு கணவனுக்குக் கஞ்சிக்கலயம் எடுத்துக்கொண்டு மாலையம்மாள் காடு போய்ச் சேர்ந்தாள்.

அந்தக் காடு ஊரைவிட்டு வெகு தூரத்தில் இருந்தது. தூரத்தில் அவள் தலையில் பானையோடு வருவதை பரமசிவம் பார்த்தான். சரி பானையை இறக்கட்டும் என்று காத்திருந்தான். ஆனால் அவள் அந்த இடத்தைவிட்டு நகராமல் பானையையும் இறக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் என்னன்னு தெரியலியே என்று கிட்ட ஓடிவந்தான். அவள் அப்படியே நின்று கொண்டிருக்க ஒரு மலைப்பாம்பு அவளின் கால் முதல் தலை வரை கொடி போலச் சுற்றிக் கொண்டு படம் விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அவள் ஆடாமல் அசையாமல் சத்தமே போடாமல் நின்று கொண்டிருந்தாள்.

பரமசிவம் ஒன்றுமே யோசிக்காமல் தன் கையிலிருந்த தொரட்டிக்கம்பியின் நுனியில் இருந்த கத்தியால் எட்டி அந்தப் பாம்பின் தலையைச் சீவிவிட்டான். அறுக்கப்பட்ட தலை, அறுத்த வேகத்தில் அப்படியே பறந்து வந்து பரமசிவத்தைக் கடித்துவிட்டுச் செத்து விழுந்தது. பரமசிவமும் அப்படியே வாயில் நுரை தள்ளக் கீழே செத்து விழுந்தான்.

தன்னைக் காப்பாற்றத்தானே தன் மாமன் செத்தான் என்று காட்டில் கீழே விழுந்து புரண்டு கதறி அழுதாள் மாலையம்மாள். அவனோடு அதுவரை பேசாத பேச்சையெல்லாம் அவன் பிணத்தைக் கட்டிக்கொண்டு பேசி அழுதாள் மாலையம்மாள்.

அது உச்சி வெயில் நேரம். சுற்றிலும் காடு, கணவன் உடலை அடக்கம் செய்ய நினைத்து அங்கே கிடந்த மரக்குச்சிகள் சுள்ளிகளை எடுத்து அடுக்கி அதன்மீது கணவன் உடலைக் கிடத்தினாள். பற்ற வைக்க நெருப்பு இல்லை. அந்தக் காலத்தில் தீப்பெட்டியெல்லாம் கிடையாது. ஆகவே அவள் ஓட்டமும் நடையுமாக கொசப்பட்டிக்குப் போய்ச் சேர்ந்தாள். யாரும் பிணத்தை எரிக்க நெருப்புத் தர மறுத்தார்கள்.

வீடு வீடாகப் போய்க் கேட்டாள். யாருமே தரவில்லை. அருகே இருந்த ஏழாயிரம் பண்ணை என்கிற ஊருக்கு ஓடினாள். போய் அங்கிருந்து வாங்கி வந்த நெருப்பை வைத்து கணவன் உடலுக்குத் தீ வைத்தாள். தீ எரிந்து கொண்டி ருந்தது.

அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். நடுக்காட்டில் அந்தத் தீக்கு முன்பாகத் தான் மட்டும் அனாதையாக நின்று கொண்டிருப்பதை எண்ணி ஒரு பெருமூச்சுவிட்டாள். மறுநொடியில் அந்தத் தீயில் பாய்ந்து தன்னையும் எரித்துக் கொண்டாள். ஆடுமேய்க்கிற சிறுவர்கள் மூலம் நடந்த கதை ஊர்களுக்குப் போய் சேர்ந்தது.

இப்போது அந்தக் காட்டுப்பக்கம் ஊர்களும் வந்துவிட்டன. மாலையம்மனுக்குக் கோயில் கட்டி மக்கள் கும்பிட்டு வருகிறார்கள். அதே மத்தியானம் 12 மணிக்குத்தான் இப்போதும் மாசி மாதத்தில் அவளை வழிபட்டு வருகிறார்கள். எதுக்காக இப்படி காட்டுக்குள்ளே மத்தியான வெயிலில் சாமி கும்புடுகிறார்கள் என்று விசாரிக் கப் போனபோதுதான் இந்தக் கதை கிடைத்தது. அவளுக்கு நெருப்புக் கொடுக்காததால்தான் அந்த ஊர் அழிந்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள்.

உண்மையில் மண் பானையைப் பயன் படுத்தும் பழக்கம் நாட்டில் குறைந்துவிட்டதால் மண்பானை செய்யும் தொழிலும் அழிந்துவிட்டது. அந்த ஊரைவிட்டு மக்கள் வேறு தொழில் தேடி வேறு வேறு ஊர்களுக்குப் போய்விட்டார்கள். ஊர் அப்படியே சிதைந்து போயிருக்கும். என்றாலும் மக்கள் மாலையம்மன் கதையோடு ஊர் அழிவைப் பின்னால் சேர்த்துவிட்டார்கள்.

இப்படித்தான் சாமிகளைப் பற்றிய கதைகளில் நடந்ததும் நடக்காததும் மக்கள் நம்பிக்கைகளும் கற்பனையும் எல்லாம் சேர்ந்து கிடக்கும். நாம்தான் அறிவியல் பூர்வமாக ஆய்வுசெய்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.

இப்படியும் சாமிகள் வந்துள்ளன. தமிழ் நாட்டில் பல ஊர்களில் மாலையம்மன் கோயில் கள் இருக்கின்றன. எல்லா ஊர் மாலையம்மன் சாமிக்கும் மேலே சொன்ன கதைதான் என்று நினைத்துவிட வேண்டாம். ஒவ்வொரு மாலையம் மனுக்கும் வெவ்வேறு கதை இருக்கும். அதை நாம் வயதானவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோன்று இன்னொரு சாமி கதையைக் கேளுங்கள். இந்தச்சாமி பெயர் மலட்டம்மா. மலட்டம்மா கோயில் விருதுநகர் மாவட்டம் கொம்புச் சித்தம்பட்டிக்கு வடக்கே பொம்ம கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ளது. குழந்தை பெற்று சரியாக தாய்ப்பால் ஊறாத பெண்கள் இந்தச் சாமிக்கு நேர்த்திக்கடன் போட்டு சாமி கும்பிடுகிறார்கள். ஊரில் ஆடு மாடுக ளுக்குப் பால் ஊறவில்லை என்றாலும் இச்சாமிக்கு நேர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு கணவன் மனைவிக்கு குழந்தை இல்லை யாம். அந்தக் காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சாமிக்குப் பிள்ளைவரம் கேட்டு நேத்திக்கடன் போடுவார்கள். பிறகு அதை நிறைவேற்ற அந்தச் சாமி கோயிலுக்கு நடந்தே போவார்கள். அப்போதெல்லாம் பஸ்தான் கிடையாதே.

அப்படி அந்தக் கணவன் மனைவி இருவரும் வெகு தூரத்திலிருந்து நடந்து நடந்து இராமேஸ்வரம் கோவிலுக்கு பிள்ளைவரம் கேட்டுப்போனார்களாம். போகும் வழியில் பொம்மக்கோட்டைக்கு, அருகில் வந்தபோது கணவனுக்குத் தாகம் அதிகமாகிவிட்டது. நா வறண்டு வந்தது. அவர் அப்படியே ஒரு மரத்தடி நிழலில் சுருண்டு படுத்துவிட்டார். மனைவி, சரி அத்தான் நீங்க படுத்திருங்க நான் இந்தப்பக்கம் தெரிகிற ஊரில் போய் தண்ணீர் வாங்கி வருகிறேன் என்று போனாள்.

போய் வெகுநேர மாகியும் அவள் திரும்பி வரவில்லை. கணவர் அப்படியே மயங்கிவிட்டார். அவரை ஓணான்கள் கூட்டமாக வந்து கடித்தன. தண்ணீர் வாங்கப் போனவள் ஒரு உலை மூடியில் (மண்பானை மூடி) நீருடன் திரும்பி வந்துபார்த்தால் கணவன் இறந்துகிடக்கிறார். சட்டியைக் கீழே போட்டு விட்டுக் கணவர் உடல்மீது விழுந்து கதறி அழுதாள்.

இப்படி ஊர் பேர் தெரியாத இடத்தில் வந்து, அதிலும் பிள்ளை வரம் கேட்டுப் போகிற வழியில் கணவன் இறந்துவிட்டாரே என்று அவளுக்குத் தாங்க முடியாத துக்கம். பிறகு கணவர் உடலை அடக்கம் செய்ய நினைத்து அங்க கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கி அதன் மீது உடலை வைத்தாள். நெருப்பு வாங்குவதற்காக பொம்மக்கோட்டைக்குள் மறுபடியும் போனாள்.

ஆனால் யார் வீட்டிலும் பிணத்தை எரிப்பதற்கு நெருப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு பக்கத்து ஊரான ரெட்டியாபட்டிக்குப் போனாள். அங்கே துவரைமார் எரித்த தீக்கங்கு கொடுத்தார்கள். அதை எடுத்துக் கொண்டு வந்து கணவன் உடலை எரித்து அதே தீயில் தானும் விழுந்து எரிந்து போனாள்.

பொம்மக்கோட்டை மக்கள் செய்தி கேள்விப் பட்டு ஓடிவந்தார்கள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. ஊர் மக்களின் கனவில் அந்தப் பெண் என் கணவர் உடலை எரிக்க நெருப்புக்கூட தராமல் என்னைத் தவிக்கவிட்ட பாவிகளே என்று பேசினாள். ஊர் மக்கள் பயந்துபோய் அவள் எரிந்த இடத்தில் கோவில் கட்டிக் கும்பிட்டு வருகிறார்கள். செத்துப்போன அப்பெண்ணின் பெயரோ ஊரோ யாருக்கும் தெரியவில்லை.

அவள் குழந்தை இல்லாதவள் என்பது மட்டுமே தெரியும். குழந்தை இல்லாத பெண்ணை மலடி என்று அழைக்கும் கொடிய பழக்கம் நம் நாட்டில் உண்டு. ஆகவே அவளுக்கு மலட்டம்மாள் என்று இவர்களே ஒரு பேர்வைத்து மலட்டம் மன் கோவிலைக் கட்டினார்கள். இப்போதும் அந்தச் சாமி அங்கே இருக்கிறது.

ராமேஸ்வரம் கோயில் கட்டி சில நூறு ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குப் பிறகுதான் இந்த பாவம் நடந்திருக்க வேண்டும். இப்படியே ஆய்வு செய்து கொண்டு போனால் நடந்த வருடத்தைக் கூட நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். அப்படியே சாமியின் பிறந்த ஆண்டைக் கணித்துவிடலாம்.

இப்படி பிணத்தை எரிக்கக்கூட நெருப்புக் கிடைக்காமல் பரிதவித்த அந்தப் பரிதவிப்பு இருக்கிறதே அதுதான் மக்கள் மனதை உருக்கி அவர்களை வழிபடச் செய்கிறது. செய்த குற்றத்தின் சுமை மனதை அழுத்துகிறது. பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத ஏழை மக்கள் சாமியாக்கிக் கும்பிட்டுப் பாவத்தைக் கழுவிக்கொள்ள நினைக்கிறார்கள். இந்த இரண்டு சாமிகளும் பிறப்பதற்கு அதுவே காரணமாக நிற்கிறது.

Share