Home 2012 டிசம்பர் சூழல் காப்போம்-8
வியாழன், 02 பிப்ரவரி 2023
சூழல் காப்போம்-8
Print E-mail

ஒரு தாள் கிழிக்கப்பட்டால்...........

- பிஞ்சண்ணா

ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. "Take it for Granted" இது நமக்காகத் தான் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது போல எடுத்துக் கொள்வது என்று பொருள். எடுத்துக்காட்டாக, வீட்டில் இருக்கும் அனைவருக்கும் என்று கருதி வாங்கி, சாப்பாட்டு மேசையில் கேக் வைக்கப்பட்டி ருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதை உங்களுக்குக் கொடுக்காமல் உங்கள் அண்ணனோ, தங்கையோ எடுத்துச் சாப்பிட்டு விட்டார்களானால் - அது சரியா? முழுமையாகச் சாப்பிட்டால் கூட, அதுவே தவறு என்றாலும் கூட, பரவாயில்லை - பசி என்று சொல்லலாம். பாதி சாப்பிட்டுவிட்டு, மீதியை குப்பையில் போட்டுவிட்டால் எப்படி அது சரியாகும்? அவர்களுக்கும் பங்கு உண்டு.

ஆனால் அவ்வளவும் தனக்கானது என்று எடுக்கவோ, பாதியைப் பயன்படுத்தி மீதியை குப்பையில் எறியவோ செய்யலாமா? கூடாது! ஆனால், இதே போல இயற்கையிடமிருந்து நாம் எதை எதையெல்லாம் இது நமக்கானது என்று எடுத்துக் கொள்கிறோம் தெரியுமா? எதை எதை என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவு இயற்கையிலிருந்து தான் எல்லாவற் றையும் பயன்படுத்துகிறோம்.

நாமே இயற்கை யின் உருவாக்கம் தானே! நம்முடைய உணவு, உடைத்தேவைகளுக்காக இயற்கை விளை பொருட்களைத் தான் பயன்படுத்துகிறோம். செயற்கை இழை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும், அவை எல்லாம் ஏதோ ஒரு இயற்கைப் பொருளி லிருந்து மாற்றம் செய்யப்படுபவை தான். இன்று மட்டுமல்ல; காலம் காலமாக மனித இனம் இப்படித்தான் பயன்படுத்திவருகிறது.

மற்ற உயிரினங்கள் - உணவுக்காகத் தான் பெரும்பாலும் இயற்கையைப் பயன்படுத்தின; பயன்படுத்துகின்றன. உடைக்காகக் கூட எந்த உயிரினமும் கவலைப்பட்டதில்லை. அவற்றுக்கு அந்தப் பழக்கமும் இல்லை. நன்றாகக் கவனி யுங்கள். உணவு, உறைவிடத்தைத் தவிர, எந்த உயிரினமாவது எந்த விசயத்திற்காவது எதையாவது பயன்படுத்துகிறதா என்று? நாம் தான் பயன்படுத்துகிறோம்.

காரணம், நாம் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறோம். அதைப் பயன்படுத்து வதால் பலன் பெறுகிறோம். அதெல்லாம் சரி. ஆனால், அவற்றை முறையாகப் பயன்படுத்துகி றோமா? எடுத்துக்காட்டுக்கு, காகிதத்தை (Paper) எடுத்துக் கொள்வோம். கல்லில் எழுதிய காலத்துக்குப் பிறகு, புல்லில், இலையில், பனை ஓலையில், துணியில் எழுதினார்கள்.

அன்று அவை அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. தாள் தயாரிக்கப்பட்டு, குறிப்பாக அச்சு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்ட பிறகு தாள்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியது. அனைவரும் படிக்கத் தொடங்கிய பிறகு, எழுதத் தொடங்கிய பிறகு ஒரு கட்டத்தில் அது ஒன்று தான் தொடர்பு சாதனமாக விளங்கியது. தகவல் சொல்ல, கடிதம் எழுத, செய்தித் தாளாக, அறிவிப்பு வெளியிட, ரகசியம் காக்க, ஆவணங்களாக வைத்துக் கொள்ள.... ... இப்படி எல்லாவற்றுக்குமே தாள் தான்.

அப்போது தொலைப்பேசி, தொலைக்காட்சி, கணினி, இணையம், செல்பேசி-குறுஞ்செய்தி, ஹார்டு டிஸ்க், சிடி, டிவிடி எதுவும் இல்லை. வானொலி கூட பரவலாக இல்லை. இன்றைக்கு இவையெல்லாம் வந்திருக்கின்றன. அதனால் காகிதம் என்று சொல்லப்படும் தாளின் தேவை ஓரளவு குறைந்திருக்கிறது.

ஆனால், நான் முன்பே சொன்னபடி, இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்தால், நாம் பயன்படுத்தும் கொஞ்சம் காகிதம் என்பதை மக்கள் தொகையோடு பெருக்கினால் எவ்வளவு காகிதம் தயாரிக்க வேண்டியிருக்கிறது என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். இவ்வளவு காகிதத்தைத் தயாரிக்க எவ்வளவு மரங்கள் வெட்டப்படுகின்றன தெரியுமா?

இதென்ன புதுக் கதையாக இருக்கிறது? காகிதம் தயாரிக்க மரங்கள் வெட்டப்படு கின்றனவா என்று சிலர் கேட்கக் கூடும். தெரிந்த மற்றவர்களுக்கும் நினைவூட்டுகிறோம். காகிதம் மரக் கூழில் இருந்து தயாரிக்கப்படுவது தானே! மரத்தை வெட்டி, துண்டாக்கி, தூளாக்கி, நசுக்கி, பிழிந்து, கூழாக்கி, காயவைத்து, வடித்து, காய வைத்து, நறுக்கி தாள் செய்யப்படுகிறது. (இணைய வாய்ப்பு இருப்பவர்கள் http://www.youtube.com/watch?v=jGH7kQ30SKo என்ற இணைப்பில் மரத்திலிருந்து காகிதம் எப்படி செய்யப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.)

எல்லா மரத்திலிருந்தும் காகிதம் தயாரிக்கப்படுவதில்லை. அதிகமாக பைன் மரங்களிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறதாம். அதிலும் தரம் உயர்ந்த தாள், தரம் குறைந்த தாள் என்றெல்லாம் உண்டு. தரம் உயர்ந்த தாள் என்றால் அதிகமான மரக்கூழ் பயன்படுத்தப் பட்டு, அதனால் நிறைய மரக்கூழ் கழித்துக் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டது என்று பொருள்.

எனவே தரம் உயர்ந்த தாளைப் பயன்படுத்து கிறோம் என்றால் அதற்காக நிறைய மரத்தை வெட்டுகிறோம் என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நாம் இன்று அதிகம் பயன்படுத்தும் காப்பியர் ஷீட் எனப்படும் தாள் தயாரிப்பில் ஒரு மரத்திலிருந்து 8333 காகிதம் தயாரிக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் காகிகதத்தைத் தான் நகல்  (xerox) எடுக்க, அச்சு (Print) எடுக்க நாம் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.

அலுவகங் கள், பள்ளிகள் எல்லாவற்றிலும் இவையே இன்று பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. கல்லூரிகளில் படிப்பவர்கள் எல்லாம் ஓர் ஆண்டுக்கு record எழுதுகிறோம் என்றே சில பல ரீம்களைக் காலி செய்கிறோம். ஒரு ரீம் என்பது 500 தாள்கள். கண்டிப்பாக நாம் பயன்படுத்தும் காகிதத்தின் மூலமாக மட்டுமே ஒவ்வொருவரும் மிகக் குறைந்தது ஒரு மரத்தையாவது ஓராண்டில் காலி செய்கிறோம் என்று வருகிறது கணக்கு! நாம் இதையெல்லாம் பற்றி கவலையேபடுவதில்லை.

காசு கொடுத்தால் காகிதம் வருகிறது என்று கருதிவிடுகிறோம். சரி, இதற்காகக் காகிதத்தையே பயன்படுத்தாமல் இருக்கமுடியுமா? படிக்க வேண்டாமா? எழுத வேண்டாமா? நீங்கள் எழுதும் பெரியார் பிஞ்சு கூட காகிதத்தில் தானே அச்சாகி வருகிறது? என்று கேட்கத் தோன்றும்.

எல்லாம் உண்மை தான்! ஆனாலும் மரங்க ளைக் காக்க வேண்டுமே! என்ன செய்யலாம் என்பதை ஒருபக்கம் யோசிப்போம். இன்னொரு பக்கம் என்ன செய்யலாம் என்றால், ஆசிரியர் தாத்தாவின் பிறந்தநாளை யொட்டி என்ன செய்யலாம் என்று மாணவர் களும், இளைஞர்களும் ஆசிரியர் தாத்தாவிடம் கேட்டார்கள்.

தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? எனது 80-ஆம் பிறந்தநாளையொட்டி, 80000 மரக்கன்றுகளை நடுங்கள்; அது தான் இப்போதைக்குத் தேவை என்று சொல்லியிருக் கிறார். எனவே நம் பங்காக சில மரங்களை நட்டுவிட்டு யோசியுங்கள். அதுவும் ஆசிரியர் தாத்தாவின் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல... எப்போதும் நடலாம். நடுவது மட்டும் முக்கியமல்ல.. கவனமாக வளர்க்க வேண்டும் என்ற உறுதியோடு மரக்கன்று நடவேண்டும்.

(காப்போம்)

சூழல் காப்போம்-7

சூழல் காப்போம்-9

Share