Home 2012 டிசம்பர் பிரான்ஸ் நாட்டின் நாடகத் தந்தை மோலியர் Moliere (1622-1673)
வியாழன், 02 பிப்ரவரி 2023
Print E-mail

பிரான்ஸ் நாட்டின் நாடகத்தந்தை மோலியர் Moliere(1622-1673)

17ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் மக்கள் தேவையற்ற மதச் சடங்குகளாலும் மத குருமார்களின் அளவு கடந்த அதிகாரங்களாலும் தன்னலம்மிக்க பிரபுக்களின் தான்தோன்றித்தனமான ஆட்சியாலும் அலைகழிக்கப்பட்டனர்.

இதனால் நாட்டில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு மக்கள் வறுமையின் பிடியில் சிக்குண்டு வாடினர்; அறியாமை இருளில் அழுந்திச் செயலிழந் தனர். இத்தகு சூழலில் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தவர்தான் மோலியர்.

நாடகக் கலையின் மூலம் நகைச்சுவைப் பாத்திரப் படைப்புகளை ஏற்றுத் தாமே எழுதியும்  தாமே நடித்தும் உறங்கிக் கிடந்த சமுதாயத்தில் விழிப்புணர்வை ஊட்டினார். சிந்திக்கத் தூண்டினார். வாழ்வில் வசந்தத்தைக் காண வழி வகுத்தார்.

தோற்றம்: மோலியர் 1622ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் பெயர் பெற்ற பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தையார் ஜீன் போக்லின் (Jean Poquelin), தாயார் மேரி (Marie).

மோலியரின் இயற்பெயர் ஜீன் பாப்டிஸ்டே போக்லின் (Jean Baptiste Poquelin). இவரது தந்தையார் உயர்ரக மர நாற்காலிகள், மேசைகள், கட்டில்கள் அவற்றுக்கு உகந்த மெத்தைகள் செய்யும் கைவினைக் கலைஞர். பணி சிறப்புக் கருதி இவர் அரண்மனைக்கு ஏற்ற மரச் சாமான்கள் செய்யும் பணிக்கு அங்கீகாரம் பெற்றிருந்தார்.

அரச குடும்பத்தார்க்குத் தொடர்ந்து பணி செய்து வந்தமையால் பாரிஸ் நகரிலேயே மிகச் சிறந்த பள்ளியில் படிக்கும் வாய்ப்பை மோலியர் பெற்றார். மோலியரின் தாயார் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்.

ஆகையால் மத குருமார்களின் வாக்குப்படி வாழ்ந்து வந்தார். ஆனால் மோலியர் இளம் வயதிலேயே மாறுபட்ட சிந்தனை வளம் பெற்றிருந்தார். தன் அன்னையால் பெரிதும் மதிக்கப்பெறும் மதக் குருமார்களைப்போல் பாவனை செய்து அவர்தம் போலித் தன்மைகளை நகைச்சுவை ததும்ப நடித்துக் காட்டுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

நாடக மேடை

இவருக்கு இவரது தந்தை செய்து வந்த தொழிலைத் தொடர்ந்து செய்ய விருப்பமில்லை. வசதியாக வாழ நினைத்திருந்தால் தந்தையைப் பின் தொடர்ந்து வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி உயர்ந்த தகுதிகளைப் பெற்றிருக்கலாம்.

ஆனால் இவரது எண்ணம் நாடகக் கலையின் மூலம் மக்கள் உள்ளங்களில் நீங்காத நிலையான சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புவதிலேயே நிலைத்திருந்தது. நாடகக் கலைஞர்களிடம் உயர்ந்த ஆற்றலும், பண்பும் இருந்த சூழ்நிலையிலும், பிரான்ஸ் நாட்டின் ஆதிக்க சமூகம் கலைஞர்களைக் கலைக் கூத்தாடிகள் என்ற வகையில் இழிவுபடுத்தியும்  ஏவலாளிகள் போல் கீழ்த்தரமாக நடத்தியும் வந்துள்ளது.

நாடக நிறுவனம் துவக்கம்

1642 ஆம் ஆண்டு மோலியர் சட்டத் துறையில் பட்டம் பெற்றார் ஆனால் நாடகத் துறையில் காலடி வைக்கத் துணிந்தார். 1643-ஆம் ஆண்டு இல்லஸ்ட்ரி தியேட்டர் (Illustre Theatre) என்ற நாடக நிறுவனத்தைத் துவக்கினார்.

ஓர் இயக்குநராக கதாசிரியராக  மேலாண்மை செலுத்துபவராக  நடிகராக அனைத்துப் பொறுப்புகளையும் இவரே ஏற்றுச் செயல்பட்டார். பொருளாதார நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கும் அனுபவம் இல்லாத காரணத்தால் இவர் தனது நிறுவனத்தை பாரிஸ் நகரில் நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

தொடர் முயற்சி

ஆரம்ப இன்னல்களுக்குத் துவண்டு போகாமல், 1646ஆம் ஆண்டிலிருந்து 1658ஆம் ஆண்டுவரை தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் இவர் தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். இப்பன்னிரண்டு ஆண்டுகளில் நாடகத் துறையில் சிறந்த அனுபவம் பெற்ற இவர் மீண்டும் பாரிஸ் நகரில் மிகச்சிறந்த அரங்குகளில் நாடகங்களை அரங்கேற்றி 14ஆம் லூயி மன்னரது ஆதரவையும் அங்கீகாரத்தையும் ஒருசேரப் பெற்றார்.

இந்த வாய்ப்பை மோலியர் மக்களிடையே சமத்துவ சமுதாய அமைப்பை நிலைநாட்டவும்  தனது நீண்ட நாள் கனவுகளை நனவாக்கவும் பயன்படுத்திக் கொண்டார். மக்களிடையே இவரது நாடகங்களுக்கு அமோக வரவேற்பிருந்தது. இவரது சமுதாய சீர்திருத்த எண்ணங்கள் அக்கால மதத் தலைவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்தன.

மதத் தலைவர்கள் இவரை இழிவுபடுத்த நினைத்து மனித சதையை உறிஞ்சும் ஒரு கொடிய மிருகம் (A demon in human flesh) என்றே வருணித்தனர். இவர் எழுதிய நாடகங்களில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட மிகச் பிரசித்திபெற்ற நாடகம் கபட மதகுரு (TARTUFFE)

அந்த நாடகத்தின் சாரம் வருமாறு: எந்த வேலையும் இல்லாத ஒருவன் விரைவில் செல்வந்தனாக விருப்பம் கொண்டான். பேராசை கொண்ட அவன் பல வழிமுறைகளை ஆராய்ந்து பார்த்தான். மக்கள் மோட்சம், முக்தி, சொர்க்கம் ஆகியவற்றை அடையப் பெரு விருப்பம் கொண்டிருப்பதையும், அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் காணிக்கை செலுத்தத் தயாராக இருப்பதையும் உணர்ந்தான்.

அதனால் தானும் ஒரு மத குருவாக வேடம் பூண்டு மக்களை திசை திருப்பவும் அதன்மூலம் செல்வம் ஈட்டவும் திட்டமிட்டான். இந்நிலையில் மிகுந்த செல்வச் செழிப்பில் வாழ்ந்தும் மன அமைதி இன்றி வாழும் ஒரு பிரபு போலி மதகுருவாகிய இவனைச் சந்திக்கிறார். தனக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழிமுறைகளைக் கற்றுத் தருமாறு குருவிடம் வேண்டுகிறார்.

இந்த சரியான சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கபட மதகுரு அந்தப் பிரபுவை தன்வசப்படுத்துகிறார். தனது செல்வம் முழுவதையும் கபட மதகுருவின் பெயரில் மாற்றியதுடன் தனது மகளையும் அந்த மதகுருவுக்கே மணம் முடித்துத் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். இந்நிலையில் பிரபுவின் (செல்வந்தன்) குடும்பத்தார்க்கு ஓரளவு உண்மை தெரியவருகிறது. கபட மதகுருவின் வேடத்தைக் கலைக்க பெருமுயற்சி செய்கின்றனர்.

அப்போது மதகுரு தனது உண்மையான விஸ்வரூபத்தைக் காண்பிக்கிறார். செல்வம் முழுதும் கைவசம் வாய்க்கப் பெற்ற குருவிற்கு முன்னர் பிரபுவின் குடும்பம் எம்மாத்திரம்? இறுதியில் அரசு அதிகாரிகள் குறுக்கிட்டு பிரபுவின் குடும்பத்தைக் காப்பாற்றுவது போல் நாடகம் நிறைவுறுகிறது.

மோலியரின் நாடகங்கள்

இவரது நாடகங்கள் லூயி மன்னர்கள் ஆட்சியில் வாய்ப்பிழந்த மக்களுக்கு வாழ்வளிப்பதாக அமைந்திருந்தன. பல்வேறு நூல்களையும்  செய்திகளையும் நாட்டு நடப்பையும் புரிந்துக் கொண்டு சிந்தித்துச் செயல்படும் அளவு வசதியும் வாய்ப்பும் பெற்றிருக்கவில்லை.

இந்த சூழலில் மனித நேயம் சார்ந்த போலிகளை அடையாளம் காணும் நகைச்சுவை மிகுந்த  எளிய வாழ்வியல் நெறிகளைச் சுட்டும் இவரது நாடகங்கள் மக்களிடையே அதாவது சாதாரண மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவரது பிரசித்திப் பெற்ற நாடகங்கள் வருமாறு:

1. எய்ட் பிளேஸ் (Eight Plays),

2. லி மிசான்தோர்ப் (Le Misanthrope),

3. தி ஸ்கூல் ஃபார் ஒய்வ்ஸ் (The School for Wives),

4. கபட மதகுரு (Tartuffe),

5. தி மைசர் (The Miser),

6. தி இமேஜினரி இன்வேலிட் (The Imaginary Invalid),

7. தி பர்கியர்ஸ் ஜென்டில்மேன் (The Bourgears Gentleman),

8. டான் ஜுவான் (Don Juan)

இறுதி மூச்சு

இவர் ஒரு மக்கள் கலைஞர் பொது மக்களுக்காக எழுதப்படும் அல்லது நடிக்கப் படும் எந்த ஒரு படைப்பும் காலம் கடந்தும் நீடித்து நிற்கும். இவரது நாடகங்கள் அனைத்தும் இன்று பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்று அழியாச் சித்திரங்களாக விளங்குகின்றன.

இவரது நாடகக் குழு பெரிய எண்ணிக்கையில் இடம் பெற்ற பல அங்கத்தினர் களைக் கொண்ட ஒரு கலைக்குடும்பம். இந்த அங்கத்தினர் அனைவரின் மேன்மைக்கு இவரது நாடகத்தின் வெற்றியே அடிப்படை என்பதால் மோலியர் மிகவும் கட்டுக்கோப்புடனும் _ பொறுப்புணர்வுடனும் செயல்பட்டார்.

இவர் இன்றேல் இந்த நாடகக் குழு இல்லை என்பதை உணர்ந்த இவர் ஒவ்வொரு வினாடியும் துடிப்புடன் இயங்கினார் இயக்கினார். மேடை யில் ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அதைத் தன் நகைச்சுவை திறனால் நாடகத்தின் சுவை குன்றாது நடித்து வெற்றி கண்டார். மக்களைத் தம் கலைத் திறனால் ஈர்த்தார். 1673ஆம் ஆண்டு மிகுந்த உடல்நலக் குறைவால் இவர் பாதிக்கப்பட்டார்.

பலரும் இவரை ஓய்வு எடுக்க வற்புறுத்தியும் அதையும் பொருட் படுத்தாது தொடர்ந்து நடித்து வந்தார். அப்படி அவர் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அதாவது (The Imaginary Invalid) தி இமேஜினரி இன்வேலிட் என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே மேடையில் மயக்கமுற்றார்.

சில மணி நேரத்தில் அவரது இன்னுயிர் பிரிந்தது. அவரது நாடகக் குழுவிலிருந்து பிரியாவிடை பெற்ற இவர், இன்று எல்லார் உள்ளங்களிலும் நிலையான இடம் பெற்றுள்ளார். இவரது உடலை முதலில் முறையாக நல்லடக்கம் செய்ய மதத்தலைவர்கள் மறுத்தாலும் நான்கு நாட்களுக்குப் பிறகு அரசின் பரிந்துரையின் பெயரில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

இவரது உயிர் நாடக மேடையில் மறைந்தாலும், உலகம் முழுவதிலும் உள்ள பல மேடைகளில், பல மொழிகளில் இன்றும் இவரது நாடகம் இவரது இலட்சியங்களை பரப்பிய வண்ணம் உள்ளது.

Share