Home 2012 டிசம்பர் விளையாட்டாய் விடலாமா....?
வியாழன், 02 பிப்ரவரி 2023
Print E-mail

பெற்றோர்களே......
விளையாட்டாய் விடலாமா....?
அதிர்ச்சி தரும் ஆய்வு!

அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் கிடைத்த தகவல் இந்தியக் குழந்தைகள் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் கடந்த பல ஆண்டுகளாக நமது பெரியார் பிஞ்சு இதழில் வலியுறுத்திவரும் கருத்துக்கு வலிமைசேர்க்கும் வகையில் இந்த ஆய்வு முடிவு உள்ளது.

தொலைக்காட்சி, வீடியோ கேம், கணினி விளையாட்டுகள் வந்த பின்பு நம் குழந்தைகள் வீதிக்கு வந்து விளையாடுவதை விட்டு விட்டார்கள். பெற்றோர்கள் வெட்டவெளிப்பொட் டலுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று விளையாடிய காலம் ஒன்று உண்டு. ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை.

பெற்றோர்களே தொலைக்காட்சி முன் அமர்ந்து கிரிக்கெட் பார்த்தால் குழந்தைகள் எப்படி வெளியில் போய் விளையாடும்? ஓடி ஆடி விளையாடும் உடற் பயிற்சி விளையாட்டு மரபு நம்முடையது. சென்ற நூற்றாண்டில் வந்து சேர்ந்த கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, வலை பந்து, பூப்பந்து, கூடைப்பந்து போன்றவை கூட உடற்பயிற்சியை அளிக்கும் விளையாட்டுதான்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு  முந்தைய 50 ஆண்டுகளில் பள்ளிகளில் இந்த விளையாட்டுகளை அன்றைய மாணவர்கள் விளையாடினார்கள். அதன் பயனாய் இன்று 70 வயதுகளில் முதுமையிலும் சுறு சுறுப்பானவர் களை அதிகம் பார்க்கிறோம்.

ஆனால், இன்றைய இளைஞர்களின் நிலை என்ன? 20முதல் 25 வயதுடைய இளைஞர் களில் பெரும்பாலும்  உடல் வலுவில் இளைத்த வர்களாக இருக்கிறார்கள்.நோயாளிகளாக இருக்கிறார்கள்.

காரணம் பள்ளிக்காலங்களில் கூட இவர்கள் விளையாட்டு மைதானங் களுக்குச் செல்லவில்லை. அப்படிச் சென்றாலும் அதிகம் ஓடாமலும், ஒரே இடத்தில் நின்றும் ஆடும் கிரிக்கெட்டை ஆடியவர்கள்.அதன் விளைவே இத்தகைய சோக நிலை.

இதற்கும் அடுத்த தற்போதைய தலைமுறையைப் பற்றியதே இப்போது வந்திருக்கும் ஆய்வு. இந்தியா முழுதுமுள்ள 54 நகரங்களில் 104 பள்ளிகளில் பயிலும்7 முதல் 17 வயதுடைய 49,046 சிறுவர் சிறுமியரிடம் ஓர் ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அறிந்த உண்மை இதுதான்.

50 விழுக்காடு சிறார்களுக்கு விளையாடும் உடற்தகுதி இல்லை என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குரிய உண்மை. 39.2 விழுக்காடு சிறார்களுக்கு body mass index எனச் சொல்லப்படும் உடலின் உயரத்திற்கேற்ற எடை அளவு சரியாக இல்லை; அதாவது body mass index கணக்கீட்டின்படி தேவையான அளவு இல்லை. இவர்களில் 20 விழுக் காட்டினர் மிகவும் உடல் பருமனாக இருக்கின்றனர். இவர்களுக்கு நீரிழிவு, இதயநோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் இருக்கிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணி நேரம் உடற்பயிற்சியை அளிக்கும் விளையாட்டுகளை விளையாடவேண்டும் என்பது உடலியல் நிபுணர்களின் கருத்து. ஆனால், பெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங் கள் இருந்தும் கூட மாணவர்களை விளையாட பள்ளிகள் விடுவதில்லை.

விளையாட்டு வகுப்பு நேரங்களையும் படிப்புக்கே மாற்றிவிடும் போக்கு பெரும்பான்மையான பள்ளிகளிடம் உள்ளது. இதனால் பிற பொது இடங்களிலும் மாணவர்கள் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.மாறாக விளையாட்டினைப் பார்வையிடுபவர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள்.

இந்த நிலை நீடித்தால் இந்தியக் குழந்தை களின் எதிர்காலம் என்னாகும் என்ற கவலை சமூக ஆர்வலர்களிடம் மேலோங்கி இருக்கிறது. திடமான உடல் பலமிருந்தால் உறுதியான உள்ளம் தானாகவே உருவாகிவிடும். மனித உயிரைக் காப்பது உடல்தானே!

அந்த உடல் உறுதி இல்லாமல் உருக்குலைந்தால் உயிர் நீடிக் குமா? இளம் சிறார்களுக்கு விளையாட்டுக்கு நேரம் ஒதுக்கித்தருவது பள்ளிகளின் கடமை மட்டுமல்ல:பெற்றோர்களின் கடமையும்தான்! எந்நேரமும் படிப்பு... படிப்பு.. என்றிருந்தால் உடலும் மனமும் வலுப்படுமா என்பதுதான் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்போரின் கேள்வி.

- மணிமகன்

Share