Home 2013 ஜனவரி கடலைப் பற்றித் தெரிந்துகொள்!
ஞாயிறு, 04 ஜூன் 2023
கடலைப் பற்றித் தெரிந்துகொள்!
Print E-mail

உலகைச் சுற்றி நாற்புறமும்
உப்புக் கடல்கள் வேலியிடும்
நிலமாம் மடந்தை ஆடையென
நீலக் கடலை உவமை சொல்வார்.

கடலில் முத்து, பவளமுண்டு.
கடலில் பாலம் கட்டுக்கதை.
கடலைப் பாயாய்ச் சுருட்டியதாய்
கடவுள் பெயரால் கதையளப்பார்.

தயிரை, மோரைக் கடைவதுபோல்
கடலைக் கடைந்தால் அமுதமென
முயன்ற மூடர் கடைகையிலே
முதலில் நஞ்சு வந்ததுவாம்.

நஞ்சைத் தின்றோன் சாகவில்லை.
நம்பச் சொல்வார் போய்க்கதையை.
துஞ்சும் படுக்கை பாற்கடலாம்.
கயிறும் திரிப்பார் கடல்மணலில்.

நிலங்கள் அய்ந்து வகைப்படுத்தி
நெய்தல் என்பார் கடல்நிலத்தை.
கலங்கள் மூலம் கடல்தாண்டி
சென்றான் தமிழன் உலகமெல்லாம்.

கடலின் நடுவில் நாடிருந்தால்
தீவென்பார்கள். மூன்றுபுறம்
கடல்கள் சூழ்ந்தால் தீபகற்பம்.
கற்றுத் தெளிக பள்ளியில் நீ.

- சி. விநாயகமூர்த்தி, திருவில்லிபுத்தூர்.

Share