Home 2013 ஜனவரி பூமி சுற்றும் - உலகம் வாழும்
வெள்ளி, 09 ஜூன் 2023
பூமி சுற்றும் - உலகம் வாழும்
Print E-mail

தொலைக்காட்சி அலறியது.

``டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியப்போகிறது என்று கூறியுள்ள மாயன் நாட்காட்டியை மேற்கோள்காட்டி உலகமெங்கும் ஒரே பரபரப்பாகப் பேசப்படுகிறது

கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தார் அறிவழகன். `அப்பா...என்று அன்பொழுக அழைத்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்ட தமிழ்ச்செல்வி,`எனக்கு எனப்பா வாங்கிட்டு வந்தீங்க? என்றாள். இந்தாப்பாரு... உலகம். இது உனக்குத்தான்! என்றபடி உலக உருண்டையை தமிழ்ச்செல்வியின் கையில் கொடுத்தார் அறிவழகன்.

`ஹைய்யா...சூப்பரா இருக்குப்பா...என்று கூறியபடியே வாங்கிக்கொண்டு அந்த உருண்டையை ஒரு சுற்று சுற்றிவிட்டாள். அது விர்ர்ரென்று சுற்றியது. அதில் நாடுகளெல்லாம் சுழன்றன. இத நான் என்னோட மேசையில வச்சுக்குவனே... என்றபடி தன் தாயிடம் காட்டினாள். அப்பொழுதுதான் காய்கறிக்கடை சென்று வந்திருந்த அம்மா காளீஸ்வரி, நல்லாத்தான் இருக்கு...

ஆனாத்தான் என்ன? உலகம் அழியப்போகு தாம்ல... என்று சொல்லிக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள். ``ஆமாப்பா...21 ஆம்தேதி உலகம் அழியப்போகு துன்னு டி.வி.யிலயும் சொன்னாங்க. எங்க ஸ்கூல்லயும் அதப்பத்தித்தான் ஒரே பேச்சு என்று லேசான கவலையுடன் அப்பாவிடம் சென்றாள் தமிழ்ச்செல்வி.

``நீங்க சொல்லுங்கப்பா... நெசமாவே உலகம் அழிஞ்சுருமா? ``அதெல்லாம் கட்டுக்கதைம்மா.. சும்மா டூப்... விடுறாங்க..

என் வயசுக்கே இது மாதிரி பல தடவை சொல்லிட்டாங்க. 10 ஆண்டுக்கு ஒரு முறை இது மாதிரி புரளி கிளப்புறாங்க. ஒவ்வொரு தடவையும் ஒரு காரணம் சொல்லுவாங்க. ஆனா,அதெல்லாம் ஏதாவது ஒரு பஞ்சாங்கத்துல... பைபிள்லன்னு சொல்லி பயமுறுத்துவாங்க.

இந்த தடவை மாயன் நாட்காட்டின்னு சொல்லிருக்காங்க. மொதல்ல பூமின்னா என்ன? அது எப்படி வந்துச்சு? அதோட ஆயுள் எவ்வளவு நாள்னு அறிவியல் உண்மைகளை தெரிஞ்சுக்கிட்டா... நீ...இந்தக் கேள்வியைக்  கேட்டிருக்கமாட்ட...! என்று செல்லமாய் அறிவழகன் சொல்ல, தமிழ்ச்செல்வி தொடர்ந்தாள்.

சரிப்பா...இப்பக் கேக்குறேம்ப்பா? பூமி எப்படி வந்துச்சு...?

ம்... சொல்றேன்... கேளு... இப்போதைக்கு சுருக்கமா சொல்றேன். நம்ம பெரியார் பிஞ்சு இதழ்ல விரைவில் விரிவாகவே உலகம் பூமி தோன்றிய கதை வரலாம்.

சரி, அப்படி வரும்போது நானே முழுசா படிச்சுக்குவேன். இப்போ பயந்துக்கிட்டிருக்கிற என் பிரண்ட்ஸ்-க்கு நான் விளக்கம் சொல்லிப் புரியவைக்கணும். அதுக்காக சுருக்கமாகச் சொல்லுங்க சொல்றேன். அதுக்கு முன்னாடி, இந்த உலகம் எப்படி அழியப்போவுதுன்னு மத்தவங்க சொல்றாங்க. அதச் சொல்லு முதல்ல..." என்று வினா தொடுத்தார் அறிவழகன்.

அதாவது, பூமியோட துருவங்கள் அப்படியே இடம் மாறிடுமாம்... உலகம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுத்திக்கிட்டிருக்கில்ல...

அது திடீர்னு நின்னு போய் ரிவர்ஸ்-ல சுத்த ஆரம்பிக்குமாம்! அப்புறம் நிபுரு-ன்னு ஒரு கோள் விண்வெளியில இருந்து வந்து பூமியில மோதுமாம். அப்புறம் எரிமலை வெடிச்சு, சுனாமி வந்து, பூகம்பம் ஏற்பட்டு.... என்று மூச்சு வாங்காமல் சொல்லிய தமிழ்ச்செல்வி, கொஞ்சம் நிறுத்தி இப்படித் தான் உலகம் அழியுமாம்!

ம்ம்ம்.... சரி... இதையெல்லாம் யார் சொன்னது? என்று கேட்டார் அறிவழகன்.

மாயன்கள் தான் அப்படின்னு எங்க கிளாஸ்ல பேசிக்கிட்டாங்க

மாயன் நாகரிகம்ங்கிறது பல நூற்றாண்டுகளுக்கு முன் அழிந்து போன நாகரிகம். அவங்க அன்றைக்கு இருந்த அறிவியில் சிந்தனைக் கேற்ப, அவங்களுக்கு இருந்த அறிவுக்கேற்க, அவங்க தேவைக்கேற்ப ஒரு நாள்காட்டியை செஞ்சு பயன்படுத்தியிருக்காங்க.  அதை நம்ம இன்றைக்கு பயன்படுத் துற நாட்காட்டி யோட ஒப்பிட்டுப் பார்க்கிறதே முதல்ல தப்பு! ஏன்னா, காலண்டர் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமா மனிதனின் தேவை, இயற்கையின் தன்மைக்கு ஏற்ப அறிவியல் முறைப்படி பல முறை மாற்றம் செய்யப்பட்டு இப்ப ஒரு வடிவத்துக்கு வந்திருக்கு!

ஓஹோ!

ஆமா, இன்னைக்கு நம்ம பயன்படுத் துற கிரிகோரியன் காலண்ட ரோட வடிவத்துக்கு மற்ற நாட்காட்டி களை சமப்படுத்தி யிருக்காங்க... இது முதல் விசயம். ரெண்டாவது மாயன் நாள்காட்டி முடிஞ்சவுடனே உலகம் அழிஞ்சிடும்னு அவங்க சொல்லல...

அது பலர் கட்டுன பொய்!

அப்படியாப்பா? அப்போ இந்த விண்கல் மோதும்.. பூகம்பம் வரும்னு சொன்னதெல்லாம்?

அதெல்லாம் பல பேரு பல நேரத்தில, எழுதின கதைகள், கற்பனைகள், ஊகங்கள். அதையெல் லாம் சேர்த்து மாயன் நாட்காட்டியோட முடிச்சுப் போட்டு எல்லாரையும் பயமுறுத்தியி ருக்காங்க... இதுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. என்றவர் மேலும் தொடர்ந்து,

இப்ப நீயே சொல்லு, சுத்திக்கிட்டிருக்கிற பூமி திடீர்னு நிற்குமா? தானா ரிவர்ஸ்ல சுத்துமா? நம்ம என்ன டிவிடி-யில படமா பார்க்கிறோம்? என்றதும் தமிழ்ச்செல்வி சிரித்துவிட்டாள்.

சமையலறையில் இருந்து திரும்பி வந்து, இருவரும் பேசுவதைத் தொடக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த காளீஸ்வரி, சரி, அப்போ அவங்க சொல்றதெல்லாம் பொய்ங்கிறீங்களா? என்று கேட்டாள் அறிவழகனை நோக்கி.

ஆமா... நீங்க தானே இவளுக்கு நியூட்டன் விதியெல்லாம் சொல்லிக் கொடுத்திங்க... என்று கேட்டார் அறிவழகன்.

ஆமா... அதுக்கென்ன? என்றார் காளீஸ்வரி. சரி, சொல்லுங்க... நியூட்டனோட முதல் விதி என்ன? என்று கேட்டதும், தமிழ்ச்செல்வி உற்சாகமாகிவிட்டாள். அம்மா.. மாட்டுனீங்களா... என்னை எத்தனை தடவை கேட்டிருப்பீங்க... இப்போ நீங்க சொல்லுங்க என்று குதூகலித்தாள்.

ம்ம்.. எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களாக்கும்? என்ன... எந்த பொருளாயிருந்தாலும் அது ஓய்வா இருந்தா, வேறொரு விசை அதன் மேல செயல்படாத வரைக்கும் அது ஓய்வா தான் இருக்கும். நேர்கோட்டுல செயல்பட்டுக்கிட்டிருக்கிற ஒன்னு, அதன் மேல புற விசை ஒன்னு வந்து டிஸ்டர்ப் பண்ணாத வரை தொடர்ந்து செயல்பட்டுக்கிட்டேயிருக்கும் என்று சரியாகச் சொன்னார் காளீஸ்வரி.

சரி, இந்த பூமி அதன் போக்கில சூரியன்ல இருந்து பிரிஞ்சு வந்ததுல இருந்து சுத்திக்கிட்டிருக்கு 450 கோடி ஆண்டுகளா... இப்போ மட்டும் திடீர்னு எப்படி நிற்கும்? சடன் பிரேக் போட்டு நிற்குமா? அது மட்டும் இல்லை... நின்னு போன காரையே நகர்த்தனும்னா எவ்வளவு பேர் செயல்பட வேண்டியிருக்கு? இந்த பூமி எதிர்த் திசையில் சுத்தணும்னா அப்ப யார் நின்னு சுத்திவிடுவா? அல்லது எந்தப் பொருள் சுத்திவிடும்? அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. இது நம்ம காதுல பூ சுத்துற வேலை!

ஓஹோ... அப்படின்னா அந்த விண்கல் மோதுறங்கிறது வெளியில் இருந்து வரும் விசையா இருக்குமா? என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் தமிழ்ச்செல்வி.

இது நல்ல கேள்வி! இப்படித் தான் யோசிக்கணும். ஆனா... அது உண்மையில்லை. ஏன்னா சூரியக்குடும்பத்தையும் தாண்டி உள்ள நட்சத்திரங்களின் நடமாட்டத்தையே நம்ம கண்காணிச்சுக்கிட்டிருக்கோம்.

சூரியக் குடும்பத்துக்குள்ள எந்த ஒரு பொருள் வந்தாலும் அதை கவனமா நாம ஆய்வு பண்றோம்.. அப்படி ஒரு பொருள் பூமியத் தாக்க வருதுன்னா, நம்மளால அதை பல ஆண்டுகளுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிட முடியும். அப்படி எந்தப் பொருளும் வரலைன்னு ரொம்பத் தெளிவா நம்ம அறிவியலாளர்கள் சொல்லிட்டாங்க  என்று முடித்தார்.

என்னமோ சொல்றீங்க? நாளைக்கு முழிச்சுக் கிடந்தா பார்ப்போம் என்று காளீஸ்வரி முடித்துக்கொண்டாள்.

மறுநாள் காலை வந்தது... விடிந்தது. உலகம் அப்படியே இருந்தது. உலகம் அழியும் என்று சொன்ன தொலைக்காட்சிகள் அப்படி அழியாது... பூமி சுற்றும்; உலகம் வாழும்னு ஆசிரியர் தாத்தா இனிப்பு கொடுத்து, பிரச்சாரம் செய்தார்; வீதிநாடகம் நடந்தது என்ற செய்தி வெளிவந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். பள்ளியில் தன் தோழர்களுக்கெல்லாம் உண்மை விளக்கங்களைச் சொல்லி மகிழ்ந்தாள் தமிழ்ச்செல்வி.

- இளையமகன்

Share