அமெரிக்கத் தலைநகரம் - வாஷிங்டன்
Print

- முனைவர் பேரா.ந.க.மங்களமுருகேசன்


வெள்ளை மாளிகை

இந்தியாவில் சென்னை மட்டுமே சென்னப்பர் என்பவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தில், அமெரிக்காவில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் பெரிய மனிதர்களின் பெயர்களால் அமைந்துள்ளன.

அந்த வரிசையில் அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் பெயரால் அழைக்கப்படுவது வாஷிங்டன் ஆகும். அது அமைந்துள்ள கொலம்பியா எனும் மாநிலத்தையும் சேர்த்தே வாஷிங்டன் டி.சி. என அழைக்கப்படுகிறது.

வாஷிங்டன் நகரை வடிவமைத்துக் கொடுத்ததில் பெரும்பங்கு வகித்தவர் பிரான்சு நாட்டின் கட்டிடக் கலை நிபுணர் லா என்பன்ட் என்பவர்.


ஆபிரகாம் லிங்கன் சிலை

உலக நகரங்கள் பெரிதும் நதிகளின் கரைகளில் அமைந்திருப்பதுபோல் புதிய நகரமான வாஷிங்டனும் பொடோமாக் நதி தழுவிட அமைந்துள்ளது. அமெரிக்காவின் தேசியப் பறவையான கழுகுகள் இங்கே கூடுகட்டி வாழ்கின்றன.

வாஷிங்டனில் கோடைக்காலம் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை. வெப்பநிலை அதிகமாக இருக்கும். கடும் குளிர் உள்ள பனிக் காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை. வசந்த காலம் எனில் மார்ச் முதல் மே வரை உள்ள காலம். சுற்றுலா செல்ல உகந்த மாதங்கள் இவை.

அமெரிக்க அரசு தவிர உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் ஆகியவையும் செயல்படும் வாஷிங்டன் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது வெள்ளை மாளிகை. அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் அலுவலக இல்லம். ஜார்ஜ் வாஷிங்டன் தவிர இதுவரை குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர்கள் எல்லாம் தங்கியிருந்த இல்லம். முதலில் அதிபர் மாளிகை என்றுதான் பெயர்.

ரூஸ்வெல்ட் காலம் முதலே வெள்ளை மாளிகை என அழைக்கப் பெறுகிறது. இதனைச் சுற்றி ரோஜா தோட்டத்துடன் அமைந்த அழகிய பூங்கா உள்ளது. மாளிகையில் உள்ள அறைகள் 132. இவற்றில் பச்சை, சிவப்பு, நீல அறைகள், உணவுக்கூடம் ஆகியவற்றைப் பார்வையிட 2001ஆம் ஆண்டு வரை பொதுமக்கள் அனுமதிக்கப் பெற்றனர்.


பென்டகன்

காபிடால் என்னும் சிறு குன்றின்மீது அமெரிக்க நாடாளுமன்றம், அலுவலகங்கள், அமெரிக்க நாடாளுமன்ற அவைகள் ஆகியன காபிடாலில் இருந்து இயங்குகின்றன. இங்கு அமெரிக்க விடுதலைச் சிலை உள்ளது. காபிடால் குன்றின் மீது அமெரிக்காவின் புகழ்மிக்கவர்கள் சிலைகள் உள்ளன.

அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் செயல்படும் பென்டகன் அலுவலகங்களில் 23,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அய்ந்து அடுக்குடைய இது உலகிலேயே மிகப் பெரிய அலுவலக வளாகம் ஆகும். 2001இல் தீவிரவாதிகளுடைய தாக்குதலுக்குப்பின் பொதுமக்கள் பார்வைக்குக் குறைக்கப்பட்டுவிட்டது.

550 அடி உயரமுள்ள வாஷிங்டன் நினைவில்லம் 1888 முதல் பொதுமக்கள் பார்வைக்குரியதாயிற்று. இதன் பார்வைக் கூடத்திலிருந்து வாஷிங்டன் நகரின் முழு அழகையும் பார்த்து வியக்கலாம்.

அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தாமஸ் ஜெபர்சன் நினைவைப் போற்றும் வகையில் கிரேக்க பாணியில் இவருக்கு நினைவகம் அமைந்துள்ளது. 1943இல் கட்டி முடிக்கப்பட்ட  இதில் 19 அடி உயர இவருடைய வெண்கலச் சிலை. இது வாஷிங்டன் நகரின் அடையாளங்களில் ஒன்று. இதனையும், இதைச் சுற்றியுள்ள ஏரியையும் காண அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.

லிங்கன் நினைவில்லம்

அமெரிக்க நாட்டில் அடிமைத்தளையை ஒழிக்கப் பாடுபட்டுப் படுகொலையான அமெரிக்காவின் பதினாறாவது புகழ்பெற்ற குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். இவருக்குத் தலைநகரில் கட்டப்பட்ட நினைவில்லம். அமெரிக்கக் காந்தி மார்டின் லூதர் கிங் இந்த நினைவகத்தின் முன்தான் 1963ஆம் ஆண்டில் தம்முடைய போராட்டத்தை நடத்தினார்.

வான்வெளி அருங்காட்சியகம்


வான்வெளி அருங்காட்சியகம்

அமெரிக்காவிற்குச் சுற்றுலா வரும் அனைவரும் காண விழையும் அருங்காட்சியகம் இது. 200000 சதுர அடி பரப்பில் பிரம்மாண்டமாகக் கட்டப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகம் பேர் வந்து காண்கின்றனர். 1976இல் இதனைக் கட்டினர். இங்கு விமானம், வான்வெளி தொடர்பான முப்பதாயிரம் பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர். முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்து காட்டிய விமானம், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்ற விமானம், சமீபத்தில் மறைந்தாரே  நிலவில் கால் வைத்த முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்டிராங், அவர் பயணித்த விண்கலம் அப்போல்லோ ஆகியனவற்றை இங்கே காணலாம்.

புனித பீட்டர், புனித பால்

கிறித்துவ சமய புனித பீட்டர், புனித பால் ஆகியோர் பெயரால் அமைந்த தேசிய தேவாலயம் 1083 ஆண்டுகள் கழித்து 1990இல் ஜெர்மானியப் பாணியில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 300 அடி. இதன் உள் அறைகளை வண்ணக் கண்ணாடிகள் அழகு சேர்க்கின்றன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் இறந்தபின் அவர்களில் பலரின் இறுதிப் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மார்டின் லூதர் கிங் நூலகம்


மார்ட்டின் லூதர் கிங் நினைவு நூலகம்

சென்னையில் உள்ள அண்ணா நினைவு நூலகம் போன்று அமெரிக்கக் கருப்பு மக்களுக்கு உழைத்த மார்ட்டின் லூதர் கிங் நினைவு நூலகம் பல அடுக்குகளில் பிரம்மாண்டமாக எழுந்துள்ளது. இங்குப் பல லட்சக்கணக்கான புத்தகங்கள், அரிய ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றனர். இதன் மய்ய அறையில் மார்ட்டின் லூதரின் மிகப் பெரிய ஓவியம் காண்கிறோம்.

பிற நினைவகங்கள்


தாமஸ் ஜெபர்சன் நினைவகம்

வாஷிங்டன் நினைவகம்

வாஷிங்டனில் சுற்றுலா செல்வோர் காணவேண்டிய நினைவகங்களில் மூன்றினைக் குறிப்பிடலாம். உலக இரண்டாம் போரில் நாட்டுக்காகப் போரிட்டு மடிந்த போர் மறவர்கள் நினைவகம், அன்னிய நாடுகளுக்காக வியட்நாம் போரில், கொரியப்போரில் பங்கேற்றுத் தங்கள் இன்னுயிர் ஈந்த தியாக வீரர்களுக்காண நினைவகங்களும் காண வேண்டியவை.

Share