Home 2013 மே ஓய்வு அறியாத சிறுநீரகம்
திங்கள், 18 ஜனவரி 2021
ஓய்வு அறியாத சிறுநீரகம்
Print E-mail

நாம், உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். தவறு! சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இரு புறங்களிலும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும்.

இவை நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குல பருமனும் கொண்டதாக உள்ளன. இவற்றின் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச் சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படுகின்றன. சிறுநீரகங்களை உடலின் வடிகால் என்று கூறலாம்.

வலது சிறுநீரகம் ஈரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன.

மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது.

இரத்தத்திலிருந்து உடலின் கழிவுப் பொருள்களைச் சிறுநீரகங்கள் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றுகின்றன. மேலும், இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது; எலும்புகளை உறுதிப் படுத்துவது; இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத் தியைத் தூண்டுவது; உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைக் கட்டுப்படுத்துவது; உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவுகளைக் கண்காணிப்பது போன்ற இன்றியமையாத பணிகளைக் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவை.

சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் சிறுநீர், குழாய் மூலமாக சிறுநீர்ப் பையினை அடைகிறது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆனது. அவ்வப்போது, இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகிறது.

சிறுநீர்ப் பையில் இருக்கும் நரம்பு மண்டலம் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குள் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்வது சிறுநீரைத் தேக்கி வைப்பது; சிறுநீர்ப் பை நிரம்பியதும் மூளைக்குத் தெரிவிப்பது ஆகிய பல சிறப்பான பணிகளைச் செய்கிறது.

சிறுநீர் இறக்குக் குழாய் அமைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்குப் பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது.

சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால் ஒருநாள்கூட நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியாது. உடலில் எதிர்பார்க்காத தொந்தரவுகள் வர ஆரம்பித்து விடும். விபத்தினால் உடல் பாகங்கள் நசுங்கி உடல் தசைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு, சிறுநீரகங்களிலுள்ள வடிகட்டிகள் அடைபட நேரிட்டாலும் சிறுநீரகங்கள் செயல் இழந்து போவது உண்டு.

கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம் இவைகளும் சிறுநீரகச் செயல் இழப்பு ஏற்படக் காரணங்களாகும். தவிர, சிறுநீர்ப் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.

சிறுநீரகத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?

ஒருநாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்; பாலில் தயாரித்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; மீன், கோழி போன்றவை சிறுநீரில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்; பொறித்த உணவுகளை, மசால் சேர்த்த உணவுகளைக் குறைக்க வேண்டும்.

திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழவகைகள், பூசணிக்காய், வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; கொழுப்பையும், உப்பையும், இனிப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டும். காலை வெறும் வயிற்றுடன் ஸ்கிப்பிங், உடற்பயிற்சி, வீட்டுவேலை ஆகியவற்றைச் சுறுசுறுப்புடன் செய்து வருவது உடலுக்கு நல்லது.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்; ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்; சுத்தமில்லாத தண்ணீரைக் குடிக்கக்கூடாது; சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடக்கூடாது; கண்ட கண்ட மருந்து, மாத்திரைகளைக் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

இவற்றை எல்லாம் ஒழுங்காகக் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்சனை என்பது வரவே வராது.

இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை!

Share