சாமிகளின் பிறப்பும் இறப்பும்-9
Print

அய்ஸ் காளியம்மன்


- ச.தமிழ்ச்செல்வன்

மதுரை மாவட்டம் அழகர்கோயிலுக்குச் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஊர் தாதக்கிணறு. இந்தச் சாலை ஓரத்தில் உள்ளது ஓர் அய்யனார் கோயில். அய்யனார் சாமியைத்தான் நமக்குத் தெரியுமே. உயரமாக பளபளக்கும் வண்ணத்தில் கையில் பெரிய அரிவாளுடன் நிற்பார்.

ஒருநாள் அந்த வழியாக அய்ஸ் வியாபாரி ஒருவர் போயிருக்கிறார். சைக்கிளின் பின்னால் கேரியரில் பெரிய மரப்பெட்டியில் (அய்ஸ்ப் பெட்டி) குச்சி அய்ஸ் வகைகளை எடுத்துக்கொண்டு வியாபாரத்துக்குப் போயிருக்கிறார். அப்போது ஒரு சிறுமி குறுக்கே வந்து கையை நீட்டி அவரை நிறுத்தியிருக்கிறாள். சைக்கிள் ஸ்டாண்டு போட்டு நிறுத்தி,
என்ன பாப்பா அய்ஸ் வேணுமா? என்று அவர் கேட்டதும்...

ஆமா மாமா... ஒரு அய்ஸ் எவ்வளவு காசு? என்று கேட்டாள்.

ஒரு அய்ஸ் ஒரு ரூபாய் என்று அய்ஸ்காரர் பதில் சொன்னார்.

சரி அப்போ எனக்கு ஒரு அய்ஸ் தாங்க.

தர்ரேன் பாப்பா. முதல்ல நீ காசை எடு.

முதல்ல நீங்க அய்ஸைத் தாங்க. அப்புறம் நான் காசு தாரேன்.

இல்லை... இல்லை... முதல்ல காசு அப்புறம்தான் அய்ஸ்

முதல்ல அய்ஸ்... அப்புறம்தான் காசு.

இப்படியே கொஞ்ச நேரம் இரண்டுபேரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அப்புறம் அந்தக் குழந்தை, என்ன அய்ஸ் மாமா ஒரு ரூபாய் தராமல் நான் என்னா ஓடிப்போகவா போறேன். என் மேலே நம்பிக்கையில்லையா? என்று கேட்டாள். அய்ஸ்காரர் அக்குழந்தையின் அப்பாவியான முகத்தைப் பார்த்தார். சரி, இந்தா என்று ஒரு அய்சை எடுத்துக் கொடுத்தார்.

அய்சைக் கையில் வாங்கிய அடுத்த நிமிடம் பாப்பா ஓட்டமெடுத்தாள். அய்ஸ்காரருக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. ஒவ்வொரு ரூபாயாக அய்ஸ் விற்றுக் காசைத் தேற்றிக் கொண்டு போனால்தானே அவரும் அவருடைய குடும்பமும் வாழ முடியும். அவரும் பாப்பாவை விரட்டிக் கொண்டு பின்னால் ஓடினார். ஏ... பாப்பா... நில்லு... காசைக் கொடுத்திட்டுப் போ... என்று கத்தியபடி ஓடினார்.

ஓடிய சிறுமி அப்படியே தாவிஏறி அய்யனார் சிலையின் இரண்டு கால்களுக்கு இடையே போய் நின்று கொண்டாள். அய்ஸ்காரர் மூச்சிரைக்கக் கத்தினார். நீ நல்ல பிள்ளைன்னு நினைச்சு நம்பி அய்ஸ் கொடுத்தா இப்படி என்னை ஓடவிடுறியே. காசைக்கொடு பாப்பா என்றார். உடனே அக்குழந்தை ஒரு தெய்வீகச் சிரிப்பு சிரித்தது. (மேலே அண்ணாந்து பார்த்தபடி அகககா என்று சிரித்தாள். அதுக்குப் பேர்தான் தெய்வீகச்சிரிப்பு. வேற ஒண்ணுமில்லே). சிரித்துவிட்டுச் சொன்னது அய்ஸ்கார மகனே... நான் மடப்புரத்துக்காளி... அங்கிருந்து இங்கு வந்துவிட்டேன். உனக்கு எல்லா நன்மையும் கிட்டும். போய் வா என்று ஒரு ரூபாயைக் கொடுக்காமலேயே ஓசியில் ஆசி வழங்கி அனுப்பிவிட்டாள்.

திரும்பி வந்து பார்த்தால் அவருடைய அய்ஸ் பெட்டி நிறைய காசு குவிந்து கிடந்ததாம். அப்படியே அந்த அதிசயத்தை அந்த ஊருக்குள் போய் மக்களிடம் சொன்னார் அய்ஸ்காரர். மக்களும் மடப்புரத்துக்காளி உண்மையிலேயே நம்ம ஊருக்குக் குடி வந்துவிட்டாள் என்று நம்பி ஊர்க்கூட்டம் போட்டு அங்கு ஒரு சின்னக் கோவில் எழுப்பினார்கள்.

தினசரி கோவிலில் ஒரு குச்சி அய்ஸ் வைத்துச் சாமி கும்பிட்டார்கள். அந்தச் சாமிக்கு அய்ஸ் காளியம்மா என்று பேர் ஆகிவிட்டது. அதன் பிறகு அந்த அய்ஸ் வியாபாரிக்கு நல்ல வியாபாரம் ஆனது.

அந்த ஊரில் சுகமாக வாழ்ந்து வருகிறார். (மடப்புரம் என்பது மதுரை மாவட்டத்தை ஒட்டி இருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டத்தில் உள்ள ஊர். அங்குள்ள காளியம்மன் ரொம்பப் புகழ் பெற்ற சாமி. மதுரை மாவட்ட மக்களும் அங்கு சென்று சாமி கும்பிட்டு வருவது பல காலமாகப் பழக்கம்) இதுதான் அய்ஸ் காளியம்மன் தோன்றிய வரலாறு என்று அந்த ஊர்ப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு குச்சி அய்ஸ் சாப்பிட ஆசைப்பட்டு அவ்வளவு தூரத்திலிருந்து ஒரு புகழ்பெற்ற சாமி வந்திருக்குமா என்று ஊர்க்காரர்கள் ஒரு நிமிடம் யோசித்திருந்தால் அய்ஸ் காளியம்மன் கோவில் அந்த ஊரில் வந்திருக்காது. இரண்டாவதாக நாம் யோசிக்க வேண்டியது, இந்தக் கதையை அறிவியல் பூர்வமாக நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

அந்த அய்ஸ்காரர் மடப்புரத்துக் காளியம்மனை ரொம்பப் பெரிதாக மதித்துக் கும்பிடுபவராக இருந்திருப்பார். அய்ஸ் விற்று என்னா பெரிய காசு சம்பாதிக்க முடியும்? ஒரு நாள் பூராவும் விற்று அந்த மரப்பெட்டியைக் காலி செய்தால் அவருக்கு அதிகபட்சம் நூறு ரூபாய் கிடைக்கும் (உங்கள் பள்ளிக்கூடத்தில் அய்ஸ் விற்கிறவரிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று நீங்களே கேட்டுப் பார்க்கலாமே) ஆகவே, தினசரி மனதுக்குள் மடப்புரத்துத் தாயே இப்படி என்னைச் சோதிக்கலாமா? தினசரி வெயிலில் அலைந்து ஊர் ஊராக அய்ஸ் விற்கிறேன்.

வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. எனக்கு அருள்பாலிக்கக்கூடாதா? என்று வேண்டிக் கொண்டிருப்பார். அந்த அய்யனார் சிலையைத் தாண்டும்போது அந்த மரத்தடியில் கொஞ்சம் இளைப்பாறலாமே என்று ஒதுங்கியிருக்கலாம். அப்படியே அலுப்பில் கண்ணயர்ந்து தூங்கியிருக்கலாம். அவர் தினசரி அய்ஸ் விற்பதும் அம்மனைக் கும்பிடுவதும் கலந்து மேற்சொன்ன பாப்பா கதை கனவில் வந்திருக்கலாம். கண் விழித்துப்பார்த்த போது அய்ஸ் பெட்டியின் மீது நிறைய காசு இருந்திருக்கலாம்.

அந்த வழியே போன நல்லவர்கள் சிலர் தூங்குபவரை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து அவர்களே அய்ஸை எடுத்துக்கொண்டு மேலே காசைப்போட்டுவிட்டுப் போயிருக்கலாம். தூங்கி எழுந்தவர் உண்மையிலேயே இது தேவியின் திருவிளையாடல்தான் என்று நம்பி ஊராரிடம் சொல்லியிருக்கலாம். சாமி சம்பந்தப்பட்ட முக்கால்வாசிக் கதைகளில் கனவுகள் கண்டிப்பாக இருக்கும்.

கனவு என்பது என்ன, பகலில் நாம் விழித்திருக்கும்போது நாம் ஆசைப்பட்டு நடக்காமல் போனது ஆசைப்பட்டபடி நடந்ததும் பார்க்காததும் பார்த்ததும் எல்லாம் கலந்து நாம் தூங்கும்போது கனவாக வரும். நம் மூளையின் பல செயல்பாடுகளில் ஒன்று இப்படிக் கனவுகளை அவுத்து விடுவது. கனவு நம் மூளையின் கற்பனை.

கடவுளும் நம் மூளையின் கற்பனை என்பதால்தான் சாமிகள் பற்றிய கதைகளில் கனவுகளும் கலந்து நிற்கின்றன. அதற்குப்பிறகு அந்த அய்ஸ்காரர் ஓகோ என்று வாழ்ந்ததாகக் கதை சொல்கிறவர்கள் சொல்வதில் உண்மை இருக்க முடியுமா? அந்த அய்ஸ்காரருக்குச் சொந்தமாக அந்த ஊரில் பங்களா ஒன்றும் காணப்படவில்லை.

சொல்லப்போனால் அந்த ஊரிலே பங்களாவே கிடையாது. அய்ஸ் விற்று ஒருவன் நம் நாட்டில் லட்சாதிபதியாக முடியுமா என்ன? கிடைத்த கஞ்சி என்றைக்கும் கிடைத்திருக்கும். அதுவே நல்ல வாழ்க்கைதானே என்று மக்கள் நினைத்திருக்கலாம். சாமி சம்பந்தப்பட்ட கதைகளை அதுக்குப்பிறகு எல்லோரும் நல்ல சுகத்தோடு வாழ்ந்தார்கள் என்று முடித்தால்தான் மரியாதை என்று ஒரு நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. அதனாலும் கதையை அப்படி முடித்திருக்கலாம்.

ஆகவே, சாமிகள் பற்றிய எந்தக் கதை ஆனாலும் ஆய்வு செய்து புரிந்து கொள்வது தான் நமக்குத் தேவையான அறிவியல் பார்வையாக இருக்க முடியும். ஒரு கொலையோ தற்கொலையோ பரிதாபச் சாவோ இல்லாமல் இப்படி அய்ஸ்காரர் சொன்னதை நம்பி உண்டான சாமிகளும் நம் நாட்டில் உண்டு.

தொடரும்.

Share