Home 2013 மே பெற்றோர் பக்கம்
வியாழன், 22 அக்டோபர் 2020
பெற்றோர் பக்கம்
Print E-mail

ஆபத்தைத் தரும் அவசர உணவு

கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றனர்.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்துக் கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர். இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது, என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதனைச் சாப்பிடக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடுகிறோம் என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

ஒரு பாக்கெட் 5 ரூபாயில் தொடங்கி பாக்கெட் பாக்கெட்டாக வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலே படியுங்கள். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

இவர் இன்சைட் என்கிற நுகர்வோர் விழிப்புணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.  இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இந்த இந்த சத்துகள் குறிப்பிட்ட அளவுகளில் இருக்க வேண்டும் என்பதற்கான அளவு மதிப்பீடுகள் இந்தியாவில் இதுவரை வரையறுக்கப்படவில்லை. இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து தரச் சோதனை நடத்தினர்.

குழந்தைகளைக் கவர கோடி கோடியாய் பணம் செலவு செய்து விளம்பரம் ஒளிபரப்பாகும் நூடுல்ஸ்களில் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம், புரதம், நார்ச்சத்து ஆகியன மிக மிகக் குறைந்த அளவே உள்ளன. பிரபல முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸ்களில்கூட அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் உப்பு மற்றும் கொழுப்பு உள்ளது. 100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மி.கிராம் வரை தான் சோடியம் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மி.கிராம் முதல் 1943 மி.கிராம் வரை சோடியம் இருக்கிறது.

நூடுல்ஸில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்தநாளங்களில் கொழுப்புப் படிதல், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் என்ற பல்வேறு பிரச்சினைகளும் குழந்தைகளைத் தாக்கக் கூடும்.

நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவில்லை.

கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை என்று சத்துமிகுந்த தானியங்கள் விளைந்த நிலங்கள் தற்போது விலை நிலமாக மாறிவிட்டன. எனவே, குப்பைகளை உணவுப் பொருள் என்ற பெயரில் பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றனர் என்று ஆய்வாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஆதங்கப்பட்ட ஆய்வாளர்கள் இந்தப் பிரச்சினை தொடர்பான விளக்கம் கேட்டு குறிப்பிட்ட முன்னணி நிறுவனங்களுக்குக் கடிதம் அனுப்பினர். ஆய்வு நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் அலட்சியம் செய்யப்பட்டு உள்ளது.

எந்தவிதச் சத்தும் இல்லாமல் உடல்நலத்திற்குத் தீங்கு தரும் உணவே பாக்கெட்களில் விற்பனைக்கு வருகிறது என்று ஆய்வாளர்கள் தரப்பில் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தக் குரல், விளம்பரம் என்னும் சக்தி வாய்ந்த சாதனத்தின் மூலம் முறியடிக்கப்பட்டு விடுகிறது.

பாக்கெட்களில் விற்கப்படும் சிப்ஸ் வகைகளும் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடியவையே. வண்ண வண்ணப் பாக்கெட்களில் அழகழகான வடிவமைப்புடன் விற்பனைக்கு வரும் சிப்ஸ் வகைகள் சாப்பிடும் நேரத்திற்கு நல்ல நொறுக்குத் தீனியாக (Snacks) இருப்பினும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதைப் பெற்றோர்தான் குழந்தைகளுக்குப் புரிய வைத்து அவர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வழி செய்ய வேண்டும்.

குழந்தைப் பருவத்திலேயே துரித உணவுகளுக்கு அடிமையாகி, வளர்ந்த பிறகு ஆரோக்கியக் குறைவிற்கு உள்ளாகும் நிலைக்கு இன்றைய குழந்தைகள் ஆளாகின்றனர். எனவே, நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கேட்டை ஒவ்வொரு தாயும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு, குழந்தைகளுக்குப் புரியும் வகையில் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

துரித உணவு வகைகள் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பைப் பெறக் காரணம் என்ன என்று பார்ப்போமானால், பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். அவர்களால் காலை வேளையில் விதவிதமான சிற்றுண்டிகளைச் சமைத்துக் கொடுக்க முடியாது. அப்படியே சமைத்துக் கொடுக்க நினைத்தாலும், அவசர அவசரமாகச் செய்யும் சிற்றுண்டி சுவையாக வருவதில்லை. அப்போது, கடையில் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுத்துவிடலாமே என நினைக்கின்றனர்.

கடையில் வாங்கிக் கொடுத்தாலும் அது சுகாதாரமாக இருக்குமா? வயிற்றுக்கு ஏதேனும் கெடுதல் விளைவிக்குமோ என்ற கேள்விகள் எழுகின்றன. இப்படியொரு சூழ்நிலையில் சில நிமிடங்களில் வீட்டிலேயே செய்து முடிக்கும் நூடுல்ஸ் போன்றன நினைவுக்கு வருகின்றன.

குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன, வேலையும் எளிதில் முடிகிறது, வீட்டிலேயே செய்து கொடுத்துவிட்டோம் என்ற மனநிறைவு தாய்மார்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்த மனநிறைவு குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்போது நாம் நம்மை - குழந்தைகளின் உணவுப் பழக்கங்களை மாற்றித்தான் ஆகவேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர் விடுமுறை நாள்களில் வகைவகையான சிற்றுண்டிகளைக் கொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி தாமும் இன்புறலாம்.

கோடை வெயிலினைச் சமாளிக்க கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்காமல், இளநீர், நுங்கு, பதநீர், வெள்ளரி, தர்பூசணி, கிர்ணிப் பழங்களை வாங்கிக் கொடுக்கலாம். வீட்டிலேயே மோர், கேழ்வரகுக் கூழ், எலுமிச்சைச் சாறு, நன்னாரி சர்பத் போன்றவற்றைத் தயாரித்துக் கொடுக்கலாம்.

Share