Home 2013 ஆகஸ்ட் சூழல் காப்போம்-14
வெள்ளி, 09 ஜூன் 2023
சூழல் காப்போம்-14
Print E-mail

சூழல் காப்பது நமது பொறுப்பு

வாழ்க்கையின் அன்றாடச் செயல்களின் போது இயற்கையை, சூழலை நாம் எவ்வாறு சீரழிக்கிறோம்; வீணடிக்கிறோம் என்பதையெல்லாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல், அதனைச் சரி செய்வதற்கான நமது பங்களிப்பையும் செய்ய வேண்டும் என்ற உந்துதலையும் பெறுகிறோம்.

வெகு எளிதாக நம் கைகளுக்குள்ளேயே சூழலியல் எதிரிகளைச் சுமந்து செல்கிறோம். அப்படியா? என்று வியப்பு மேலிடும்! உண்மைதான். காய்கறி வாங்கி வரும்போது, துணிகள் வாங்கி வரும்போது, மருந்துகள், எண்ணெய், இறைச்சி, புத்தகம், கணினி, ..., ..., ..., இன்னும்... இன்னும்... என்ன வாங்கி வந்தாலும் அதனைச் சுமப்பதற்கு நாம் பயன்படுத்தும் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்-கைத்தான் குறிப்பிடுகிறேன்.

முன்பெல்லாம் பரோட்டா, இட்டளி என்று உணவுக் கடையில் சென்று வாங்க வேண்டுமென்றால், வீட்டிலிருந்து சம்படம், சில்வர் டப்பா, குழம்பு -சட்னி வாங்குவதற்கென்று தூக்குச் சட்டி போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள். இப்போது இட்டளிக்கு தனி பிளாஸ்டிக் கவர், சட்னிக்கு ஒன்று, சாம்பாருக்கு ஒன்று, குருமாவுக்கு ஒன்று, காரச் சட்னிக்கு ஒன்று, இவற்றையெல்லாம் சேர்த்து எடுத்துச் செல்ல பெரிய கவர் ஒன்று.

அதுவும் கிழிந்து விடாமல் இருக்க மற்றொன்றையும் சேர்த்து எத்தனை பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறோம். துணிக்கடைக்குப் போனால், ஒவ்வொன்றுக்கும் ஒன்று, மொத்தமாக ஒன்று, இலவசமாக ஒரு சில. இப்படி எல்லாவற்றையும் எடுத்துப் பாருங்கள். இவற்றில் மீண்டும் நாம் பயன்படுத்தத்தக்க அளவில் எத்தனை  பைகள் உள்ளன? பாதிக்கு மேற்பட்ட பைகள் மிகவும் மெல்லிதான, மீண்டும் பயன்படுத்த வாய்ப்பில்லாத, சாமானியத்தில் மக்காத பிளாஸ்டிக் பைகள்.

தெருவெங்கும் திரண்டிருக்கும் குப்பைகளைப் பாருங்கள். அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் பைகள்தான். அவை குப்பையாக மட்டும் இருப்பதில்லை. மாடு, ஆடு, யானை பிற விலங்குகளால் உண்ணப்படும் உணவுகளோடு கலந்து, அல்லது அவற்றால் தவறாக உண்ணப்பட்டு, அவ்விலங்குகள் உயிரிழக்கக் காரணமாகிறது. மழை நீரை மண்ணில் புகவிடாமல் தடுத்து, நிலத்தடி நீர் மட்டம் குறையக் காரணமாகிறது.

எரிக்கும்போது காற்றுமண்டலத்தில் தேவையற்ற வாயுக்களை அதிகப்படுத்துகிறது. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து எடுத்துச் செல்லும்போது, உண்டாகும் வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன், பியூரான் போன்றவை உணவுடன் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்துகிறது.

இத்தனை கேடு தரும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு வெறுங்கையை வீசிக்கிட்டுப் போய் பொருள் வாங்கிவரலாம்; ஸ்டைலா இருக்கும்; மழையில் நனையாது; தண்ணீர் உள்ளே போகாது என்று நாம் என்னென்னவோ சாக்கு போக்குகளைச் சொல்கிறோம். தண்ணீர் உள்ளே போகாது என்பது உண்மைதான். அதனால்தான் மழைத் தண்ணீர் மண்ணுக்குப் போகவில்லை என்பதை உணர்வோமா? வெறுங்கையை வீசிக் கொண்டு போவதால் ஸ்டைலாக இருக்கும்தான். ஆனால், நமது கையைவிட்டு இயற்கை போய்விடுகிறது.

மஞ்சள் நிறப்பைகள் என்று ஒரு காலத்தில் கிண்டல் செய்யப்படும் பைகள்தான் பெரும்பாலான கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று எல்லாம் பிளாஸ்டிக் பைகள்.  பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் விதத்தில்தான் மத்திய அரசு அவற்றிற்குத் தனியாகக் காசு வாங்கச் சொல்லியிருக்கிறது. இது வரவேற்கத் தகுந்த ஒன்று. ஓசியில் கொடுப்பதால் தானே பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் 3 ரூபாய், 5 ரூபாய் என்று கொடுத்தால், தானாக வீட்டிலிருந்து பைகளை எடுத்துவரத் தோன்றும் அல்லவா?

இன்று ஸ்டைலுக்கும் குறைவில்லை. துணிப்பைகள், சணல் பைகள் போன்றவை பல வடிவங்களில், அளவுகளில், வண்ணங்களில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். வாகனங்களில் பக்கவாட்டில் பெட்டி வைத்துக் கொண்டிருப்பது இதே ஸ்டைல் என்ற பெயரில் குறைந்துவிட்டது. அவ்வாறு பெட்டிகள் வைத்துக் கொண்டால் எவ்வளவோ நன்மை உண்டு. மழை நீரை மண்ணுக்குப் போகாமல் தடுப்பது பிளாஸ்டிக் மட்டுமல்ல... சிமெண்ட் தளங்களுக்கும் அதில் பெரும் பங்குண்டு.

வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளமும், சாலைகளில் தாரும் போட்டு நிரப்பினால் மழை நீர் எப்படி மண்ணுக்குப் போகும்? குப்பைகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று பிரித்து, காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள் போன்ற மக்குபவற்றை உரமாக்கலாம். தாள், பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற மக்காதவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பலாம். இதற்கென தனித்தனி குப்பைத் தொட்டிகள் வைத்துப் பழகினால் குப்பைகளைப் பிரிப்பது வெகு எளிது.

தேவையான அளவு தண்ணீரைப் பயன்படுத்துவது, வெளியூர் பயணங்களின் போது ஆங்காங்கே வாங்கி, அங்கேயே வீணடிக்காமல், தேவையானதை உடன் எடுத்துச் செல்லலாம். இதனால் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு குறையும். 15 விநாடிகளுக்கு மேல் போக்குவரத்து சிக்னல் சிவப்பு விளக்கில் இருந்தால், எஞ்சினை அணைத்துவிடுங்கள் _ எரிபொருளைச் சேமிக்கலாம் என்கிறார்கள். நாமும் செய்யலாமே!

சூழல் கெட்டுவிட்டது என்று யார் யார் மீதோ குற்றம் சொல்லாமல், அன்றாடம் நாம் செய்ய முடிந்த பணிகளில் தொடங்கலாம்; வீடுகளில் செய்யலாம்; நண்பர்களைப் பழக்கலாம்; பள்ளிகளில் நடைமுறைப்படுத்தலாம். ஒவ்வொருவரும் செய்துவிட்டு வெளியில் வந்து பார்த்தால் நாடும் உலகமும் மாறித்தானே இருக்கும்.

இந்த உலகம் அனைவருக்குமானது. நாம் சொல்லும் அனைவருக்கும் என்பதில் மனிதர்கள் மட்டுமல்ல. விலங்குகள், தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், கடல்வாழ் உயிரினங்கள் உள்பட அனைத்து உயிரினங்களுக்குமானது. அதை அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாக வழங்க வேண்டியது நம் கடமை. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் பூமிக்கு சூரிய வெளிச்சம் கிடைக்காது _- உலகம் அழியும் என்கிறார்கள். நாம் போகிற வேகத்தில், இன்னும் 50 ஆண்டுகளில் அதனை அழித்துவிடுவோம் போலும்.

எதையும் பயன்படுத்தக்கூடாது என்பதல்ல... அனைத்தும் நமக்கானதுதான். ஆனால், தேவைக்குப் பயன்படுத்தும்வரை அது நிலைத்திருக்கும். தேவையில்லாமல் பயன்படுத்தினால் எதுவும் அழியும்; நாமும் அழிவோம். பெரியார் தாத்தா சொன்ன சிக்கனம் _- பணத்துக்கு மட்டுமல்ல; அனைத்துக்கும்தான்.

இந்த உலகம் இப்போது நம் கைகளில் தரப்பட்டிருக்கிறது. பொறுப்பு இனி நம்முடையது! வாருங்கள்.... சூழல் காப்போம்.

(தொடர் நிறைவடைகிறது. செயல் தொடரட்டும்)

Share