Home 2013 ஆகஸ்ட் பிரபஞ்ச ரகசியம் - 2
வெள்ளி, 09 ஜூன் 2023
பிரபஞ்ச ரகசியம் - 2
Print E-mail

வேற்றுக் கிரகத்தில் நம்மைப் போன்றே உயிர்கள் ‘WOW'

பால்வெளி மண்டலம்

- சரவணா ராஜேந்திரன்

சென்ற தொடரில் விண்வெளி எங்கும் நீர் உள்ளது என்ற உண்மையினைப் பல ஆய்வுகள் மூலம் அறிந்துகொண்டோம்.

அப்படி என்றால் உயிர்கள் எங்கிருந்து வந்தன?

பூமியில் உயிர்கள்:

இதுவரை உயிர்கள் பற்றிய ஆய்வுகளில் புவியின் மேலோட்டில் வெப்பமும் மிதமான குளிரும் உள்ள தருணத்தில் கூழ்மம் போன்ற வேதிக்கூட்டுப்பொருட்களால் உயிர் மூலக்கூறுகள் உருவாகி இருக்கலாம் என்ற கருத்து இருந்து வந்தது.

யூரே

யூரே (Urey) மற்றும் மில்லர் என்ற உயிராய்வாளர்கள் தகுந்த புறச்சூழலில் உயிர் மூலக்கூறுகள் ((Organic Molecules) உருவாகின்றன என்றனர்.

மில்லர்

அறிவியல் வளர்ச்சியின் ஆரம்பகாலமான 19ஆம் நூற்றாண்டில் இந்த ஆய்வாளர்களின் சோதனை அடிப்படையிலான முடிவுகள், மிகவும் பிரபலமாகி, அதுவே நமது பாடப்புத்தகங்களிலும் உயிர்களின் தோற்றம் என சொல்லித் தரப்படுகிறது.

உயிரிகள் தோன்ற நீர், காற்று மற்றும் மின்னூட்டம் பெற்ற தனிமங்கள் தேவை. இவை தற்போது இந்த விண்வெளி எங்கும் இருக்கின்றன. இதிலிருந்து தகுந்த காலநிலைகொண்ட எந்த ஒரு இடத்திலும் உயிர்கள் உருவாகலாம் என்பது உறுதியானது.

உயிர் என்றால் என்ன?

உணர்ச்சியுள்ள, இயக்கம் கொண்ட, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஒன்றைத்தான் உயிர்ப்பொருள் என்று கூறுகிறோம். அதன்படி, உயிர் மூலக்கூறுகள் இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் எங்கும் பரவி இருக்கின்றன என்பது முடிவானது. இந்த உயிர் மூலக்கூறுகள் பரிணாமம் பெற்ற _ சிந்தனை அறிவு பெற்ற உயிரினங்களாகவும் இருக்கலாம் (மனிதன்). காற்றைப் போன்றும், மேகம் போன்றும் கூட்டமாக இருக்கும் நுண்ணுயிராகவும் இருக்கலாம். அல்லது நீரில் வெளியுலகம் என்றால் என்னவென்று அறியாத நீர்வாழ் உயிரிகளாகக் கூட இருக்கலாம்.

விண்வெளியில் உயிர்கள்

கிளிமஞ்சாரோ என்ற எரிமலையைப் பற்றி  கேள்விப்பட்டிருப்பீர்கள். தான்சானியா நாட்டில் உள்ள இந்த எரிமலை, பூமி தோன்றி அதன் மேற்பரப்பு குளிர்ந்த (சுமார் 300 கோடி ஆண்டு) காலத்தில் உருவான மிகவும் உயரமான எரிமலை யாகும். இந்த மலையில் உள்ள பனிக்கட்டிகளின் கீழ் புதைந்து கிடக்கும் சில விண்கற்களை ஜெர்மானிய உயிராய்விய லாளர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது உயிரோட்டம் கொடுக்கும் தனிமங்கள் அடங்கிய தொகுதிகள் சில விண்கற்களுக்குள் புதைந்து இருப்பதைக் கண்டனர். ஆனால் இவை, கோடிக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் புதைந்து இருப்பதால் ஆய்வாளர்களால் உறுதியான முடிவிற்கு வர இயலவில்லை.

1970ஆ-ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஒரு சம்பவமாக உயிர்கள் விண்வெளியில் இருந்து வந்ததை 50% உறுதிசெய்துள்ளது.

1969ஆ-ம் ஆண்டு செப்டம்பர் 28ஆ-ம் தேதி சிரில் பொன்னம்பெருமா (Cyril Ponnamperuma) என்ற இலங்கையைச் சேர்ந்த உயிராய்வாளரை அவரது ஆஸ்திரேலிய நண்பர் உடனடியாக மெல்போர்ன் வரும்படி அழைத்தார். கொழும்பில் இருந்து ஆர்வமுடன் சென்ற சிரிலுக்கு ஓர் வியப்பூட்டும் காட்சி காத்திருந்தது.

அந்த நண்பர் தன்னுடைய பண்ணை வீட்டின் கூரையில் விண்வெளியில் இருந்து விழுந்த எரிகல் ஒன்றைக் காட்டினார். கிரிலுக்கு விண்ணில் இருந்து வந்த புதிய கல் அப்போது பிறந்த புதிய குழந்தைபோல் இருந்தது. (இதுவரை விண்வெளியில் இருந்து விழுந்த உடனேயே மாசடையாமல் ஆய்வு செய்ய எந்த ஒரு எரிகல்லும் கிடைத்ததில்லை.

மண்ணில் விழுந்து பூமியில் உள்ள காற்று, நீர், இதர தாதுஉப்புக்களால் பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் நமக்குத் தெரியவந்தது). உடனே காற்றுப் புகாத பெட்டியில் அடைத்து பெர்லினுக்குக் (ஜெர்மன்) கொண்டு சென்றார். அங்கு அக்கல்லை ஆய்வு செய்தபோது அதில் க்ளைசன், ஆலைன், குளுடாமிக், வெலைன், மற்றும் புரோலைன் ஆகிய அய்ந்து அமினோ அமிலங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். இதனை, 1970ஆம் ஆண்டு அறிக்கையாக வெளியிட்டார்.

இந்த அமினோ அமிலங்களில் உயிர் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு  முந்தைய கூற்றான பூமியில் உயிரினத் தோற்றம் குறித்த கோட்பாட்டை உடைத்தெறிந்து விட்டது.   சமீபத்தில் செவ்வாய் கிரகணத்தில் கிரியோசிட்டியின் ஆய்வின்படி மீண்டும் அண்ட வெளியில் இருந்து உயிரினம் வந்திருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். (செவ்வாயில் அமிலத்தன்மை கொண்ட உயிர்கனிமப் பொருள்களின் மூலக்கூறுகளை கிரியோஸிட்டி கண்டறிந்து அனுப்பியுள்ளது, (நாசா செய்தித் தொகுப்பு, 23.11.12).

ஆற்று நீர்ப்படுகை ஒன்றும் கண்டறியப்பட்டது (சனவரி 12, -2013).

உயிர் மூலக்கூறுகள் விண்வெளியில் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. நாம் சாதாரணமாகக் காணும் எருக்கஞ்செடி விதைகள் போல் பறந்து கொண்டே இருக்கிறது. நிதானமாக அது வளர்வதற்குத் தேவையான இடம் கிடைக்கும் போது  எப்படி அது தாவரமாக மாறுகிறதோ அதே போல் உயிர்மூலக்கூறுகள் வளர்வதற்குத் தேவையான இடம், காலம், சூழல் இருந்ததால் உயிர் உருவானது. பரிணாம வளர்ச்சி யின் காரணமாக ஒரு செல் உயிராகத் தோன்றி, ஆறறிவு கொண்ட மனிதன்வரை உருமாறியுள்ளது.

ஆம், பூமி மட்டுமல்ல; பூமியைப் போன்ற சூழ்நிலை கொண்ட வேற்றுக் கிரகங்களிலும் இதே நிலைதான். அப்படியென்றால், நமது பால்வெளியிலேயே எண்ணிலடங்கா நட்சத்திரங்களைச் (சூரியன்கள்) சுற்றிவரும் கோள்களில் உயிர் இருக்க வேண்டும், இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதர்களைப் போன்ற திறன்படைத்த இதர கோள்களில் உயிர்களைக் காணும் திறன் கொண்ட அறிவினை நாம் இன்றுவரை பெறவில்லை. ஆனால், விரைவில் பெற்றுவிடுவோம் என்கிறார்கள் நாசா விண்வெளி ஆய்வாளர்கள்.

அப்படியெனில், நம்மைப் போன்ற உயிரினம் வேற்றுக் கிரகத்தில் உள்ளதா? ஆம்! நம்மைவிட அறிவுத்திறன் கொண்ட உயிரினம் உள்ளது. இதற்கான ஆதாரமும் கிடைத் துள்ளது; இந்தச் செய்தி வியப்பாக இருக்கிறதா?

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வெல்சையன் பல்கலைக்கழகத்தில் விண்வெளியில் இருந்து வரும் ஒலிஅலைகளைச் சேகரிக்கும் ஆய்வுக்கூடம் ஒன்று உள்ளது. எல்லையில்லா இந்த விண்வெளியில் இருந்து வரும் அனைத்து ஓசைகளையும் இரவு பகலாக ஆய்வு செய்து வந்தனர்.

இங்கு நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய ஒலிஅலைவாங்கி தொலை நோக்கி வழியாக தினமும் விண்வெளியில் இருந்து வரும் ஒலிஅலைகளை ஆய்வு செய்து கொண்டிருந்த ஜெரி எஹமான் என்பவரின் கணினித் திரையில் 1977ஆ-ம் ஆண்டு ஆகஸ்ட் 15இ-ல் விண்வெளியின் பொதுவான மெல்லிய இரைச்சலுக்கு இடையில் சில வினாடிகள் ஒரு சத்தம் வந்து சென்றது.

முதலில் அலைவரிசைக் குழப்பம் அல்லது கணினி இயக்கச் சிக்கல் எனக் கருதப்பட்டது. ஆனால், அதை ஆய்வு செய்தபோது மனித குலத்திற்கு முதன்முதலாக விண்வெளியில் இருந்து எங்கோ வாழும் உயிரினம் அனுப்பிய சமிக்கை எனத் தெரிய வந்தது, அந்த ஓசை சில வினாடிகளே கேட்டது. அது ஷ் ஷீ ஷ் என்ற சத்தம், அவ்வளவுதான், அதன் பிறகு அது கேட்கவே இல்லை. இது பிற கோள்களில் இருந்து வந்த சமிக்கை என்பது உறுதிசெய்யப்பட்டவுடன் இந்த சமிக்கை குறித்த ஆய்வு செய்யப்பட்டது.

சிரில் பொன்னம்பெருமா

1987ஆ-ம் ஆண்டு இந்த சமிக்கை அனுப்பிய விதம் மற்றும் சமிக்கையின் அறிவியல் விவரங்கள் வெளியிடப்பட்டன, அதாவது செயற்கையாக சத்தம் எழுப்பும் அந்த ஓசையை அதிக செறிவூட்டம் கொண்ட மின்னலைகளாக மாற்றி அவற்றை விண்வெளியில் அனுப்புதல், அதாவது கிட்டத்தட்ட நமது தொலைக்காட்சி, செல்பேசி அழைப்புகள் போன்ற தொழில்நுட்பம்தான். ஆனால், வானவெளியில் இருந்து வந்த சமிக்கை மிகவும் சக்திவாய்ந்த மின்னலைகள் கொண்டது. இது போன்ற மின்னலைகளை உருவாக்குவது தற்போதைய மனிதர்களுக்குச் சாத்தியமில்லை.

மேலும், இந்த சமிக்கை வந்த இடமும் உறுதிசெய்யப்பட்டது, புவியின் தென்பகுதி தொடுவானத்திற்கு மேலே உள்ள பகுதியில் தொலைநோக்கிகளுக்கு மட்டும் புலனாகக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து இந்த சமிக்கை வந்ததும், இதை அனுப்பிய காலம் சுமார் 800 லிருந்து 1000 இருக்கும் என ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. விண்வெளியில் எங்கோ வாழும் உயிர்கள் தங்களைப் போன்ற உயிரினங்களைத் தேடி அனுப்பிய முதல் சமிக்கை ஆகும்.

அதாவது, முகலாயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக, ராஜராஜசோழன் காலத்தில் எங்கிருந்தோ புறப்பட்ட ரேடியோ சமிக்கை நமக்கு 1977இ-ல் கிடைக்கிறது. இந்த 1000 வருடங்களில் அவர்கள் அனுப்பிய சமிக்கையை மறந்து போயிருப்பார்கள்,  நமது விஞ்ஞானிகளும் பதில் சமிக்கையை அனுப்பினார்கள். சமிக்கை அந்த உயிர்களைச் சென்றடைய இன்னும் 1000 வருடங்கள் ஆகலாம். அல்லது அதைவிட அதிகமான வருடங்கள் ஆகலாம். இதிலிருந்து, உயிரினம் பூமியில் மட்டுமல்ல, இந்த விண்வெளியின் எந்த இடத்திலும் சாதாரணமாக வாழும் ஒன்றுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

நமது சூரியனின் இருப்பிடமான பால்வெளியில் சூரியனைப்போல் பல எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களை பல கோள்கள் சுற்றி வருகின்றன. நமது பூமியைப்போல உயிரினம் வாழத் தகுந்த அமைப்புக் கொண்ட கோள்களில் உயிரினங்கள் வாழும்.

ஆனால், அந்தக் கோள்களில் வாழும் உயிரினங்களுடனான நேரடித் தொடர்பு என்பது இன்றுவரை இயலாத காரியமாக உள்ளது. நமது சூரியனை அடுத்த நட்சத்திரத்தைச் சென்றடைவதற்கே ஒளி வேகத்தில் பயணித்தாலும் குறைந்தபட்சம் 100 வருடங்கள் வரை ஆகலாம்.

ஆய்வாளர்கள் விண்வெளியில் உள்ள உயிரினங்களைத் தேடிச் செல்லும் பணிக்காக சமிக்கைகளைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்த சமிக்கைகளை ஏதாவது கோள்களில் வாழும் அறிவு படைத்த உயிரினங்கள் பார்த்து அவர்கள் பதில் அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

பூமி போன்ற காற்று நீர் மற்றும் உயிரோட்டம் கொண்ட தரை தளம் உள்ள  கோள்களில் மட்டும் உயிர் வாழுமா? இதற்கான விடை அடுத்த தொடரில்... அந்த ரகசியங்களைத் தேடி வியாழன் கோள்களின் சந்திரன்களில் ஒன்றான  யூரோப்பா செல்வோம்.

ரகசியம் வெளிவரும்..

Share