சடை எருமை
Print

தரைமட்டத்திலிருந்து 12 ஆயிரம் அடிக்கு மேலே 20 ஆயிரம் அடி உயரத்தில் குளுகுளு வாழ்க்கை வாழும் சடை எருமைகள் (யாக்) இமயமலை நாடுகளின் பசு என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கு, கவரிமா என்ற பெயரும் உண்டு.

இந்தியா, நேபாளம், பூடான், திபெத், மங்கோலியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மட்டுமே யாக்குகள் வாழுகின்றன. இந்தியாவில் அருணாசலப் பிரதேசம், சிக்கிம், ஜம்மு-_காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் காணப்படுகின்றன. குளிர்தாங்குவதற்காக, இவற்றின் உடலின் மீது அமைந்துள்ள அடர்த்தியான உரோமக் கம்பளத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் நம் நாட்டு எருமையின் தோற்றத்தினைக் கொண்டிருக்கும்.

போவிடே (Bovidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த இந்திய யாக்கின் விஞ்ஞானப் பெயர் போஸ் குருன்னியன்ஸ் என்பதாகும்.

பள்ளத்தாக்கு வகை, புல்வெளி வகை, வெள்ளை நிற வகை, நீள்முடி வகை என சீனர்கள் 4 வகைப்படுத்தியுள்ளனர். இவை தவிர, கரும்பழுப்பு நிறத்திலிருக்கும் யாக் 6 அடி உயரத்தில் 500 கிலோ எடையில் இருக்கும்.

அனைத்துத் தேசத்திலும் யாக் வளர்ப்பவர்கள் புத்த மதத்தினைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றார்கள். புத்த மடாலயங்களில் ஏற்றப்படும் தீபம் யாக் நெய்யால் மட்டுமே எரிக்கப்படுகிறது. எனவே, தீபத்திற்கு யாக் நெய் வழங்குகிறார்கள்.

யாக் வளர்ப்பவர்கள் புரோக்பா என்று அழைக்கப்படுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் யாக்வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. கவரிமா அல்லது யாக் அல்லது சடை எருமை என அழைக்கப்படும் இவை பால், இறைச்சி, உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச் செல்வதற்கும், ஏர் உழுவதற்கும் வளர்க்கப்படுகின்றன. இதன் காய்ந்த சாணமானது திபெத்தில் ஒரு முக்கியமான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. திபெத் பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் யாக்கின் சாணமே எளிதில் கிடைக்கும் எரிபொருளாக உள்ளது. யாக்கின் உரோமம் கம்பளம் நெய்யவும் பயன்படுகிறது.

10 சதவிகிதம் கொழுப்புச் சத்து உள்ள சடை எருமையின் பால் தங்க நிறத்தில் இருக்கும். எனவே, தங்கத் திரவம் என்றும் சொல்கிறார்கள். திபெத் நாட்டின் டீ கடைகளில் கிடைக்கும் மிகவும் பிரபலமான ஸால்ட் டீ யாக் பாலில் தயாரிக்கப்படுகிறது.

மயிர் நீப்பின் உயிர் வாழாதா?

தன் உடம்பில் உள்ள முடி(மயிர்) நீங்கிவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன், திருக்குறளிலும்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (குறள் 969)

என்று படித்திருப்பீர்கள். இந்தக் குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களுள் பலர், கவரிமா என்பதற்கு, மயிர்க்கற்றையுடைய விலங்கு ஆகிய மான் - கவரிமான் என்றே எழுதியுள்ளனர். சிலர் கவரிமா என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இளங்குமரனார் என்னும் உரையாசிரியர் மட்டும், குளிர்காப்பாம் மயிர் நீங்கினால் உயிரோடு வாழாத கவரிமா என்று தட்பவெப்ப நிலையினை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளார்.

திருவள்ளுவர், கவரிமான் என்று குறிப்பிடாமல், மயிர்த்திரள் உடைய விலங்கு என்ற பொருளில் கவரிமா என்று கூறியுள்ளார். எனவே, மயிர்க்கற்றை அல்லது திரள் சடைசடையாக அடர்ந்து வளர்ந்துள்ள விலங்குதான் கவரிமா. (மா-விலங்கு) மலைகளின் உயரமான பகுதிகளில் கடுமையான குளிரில் வாழும் இவற்றிற்கு சடைசடையாகக் காட்சியளிக்கும் இவற்றின் முடியே குளிரிலிருந்து இவற்றைக் காக்கின்றன. முடி இவற்றின் உடம்பிலிருந்து நீங்கும்போது, கடும் குளிர் தாங்க முடியாமல் உயிர் இழக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

தகவல் : பேரா.ந.வெற்றியழகன்

//
Share