அறிஞர்களின் வாழ்வில்
Print

கடைசி அறிவுரை

மரணப் படுக்கை யிலிருந்த கன்பூசிய சிடம் அவரது சீடர்களுள் ஒருவர், கடைசியாக ஏதாவது அறிவுரை சொல்லுங்கள் என்றார்.
கன்பூசியஸ் தன் வாயைத் திறந்து காட்டி, என் வாயில் என்ன தெரிகிறது? என்றார். நாக்கு என பதில் அளித்தார் சீடர். பற்கள் இருக்கிறதா என்று கேட்டதும், இல்லை என்றார் சீடர். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றார் கன்பூசியஸ். எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார் சீடர்.

நாக்கு மென்மையானது. பல் வலிமைமிக்கது. நாக்கு பிறந்தது முதல் நம் உடல் உறுப்புகளுள் ஒன்றாக உள்ளது. பல் பிறகுதான் முளைக்கிறது. வயது முதிர முதிர கீழே விழுந்து விடுகிறது. நாக்கு அப்படியே உள்ளது. நாக்கைப் போல மென்மையானவர்களாக இருங்கள். நீண்டநாள் வாழ்வீர்கள் என்றார்.

தன்னடக்கம்

சிறந்த மேதையாகத் திகழ்ந்த எச்.சி.வெல்ஸ் வறுமையில் வாடினார். எனினும், சூழ்நிலைகளைக் கவனத்தில் கொள்ளாமல் தமது லட்சிய நெறியை நோக்கி எழுதிக்கொண்டே இருந்தார். இளமைக் காலத்தில் அனுபவித்து வந்த துன்பங்கள் இவரை ஓர் எழுத்துச் சிற்பியாக்கியது.

உலக மக்கள் அனைவரும் போரும் குழப்பமுமின்றி ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். தம்மைப்பற்றிக் கூறும்போது,

என் மூளை அவ்வளவு சிறந்ததன்று. மூளைப் பொருட்காட்சியில் என் மூளையை வைத்தால் அதற்கு மூன்றாம் பரிசுகூடக் கிடைக்காது. லாயிட் ஜார்ஜ், பெர்னாட்ஷா, ஜூலியன் ஹக்ஸ்லி போன்றவர்களுக்கு இருக்கும் மூளை எனக்கு இல்லை. பல புத்தகங்கள் எழுதிய காரணத்தால் என்னைப் புகழ்கிறார்கள். எனக்குப் பொழுது போகவில்லை, ஏதோ எழுதினேன் என்று அடக்கமாகச் சொல்லியுள்ளார்.


சாதுரியப் பேச்சு

ஒருமுறை குழுவாகப் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சினிடையே சிறிது நேரம் எழுந்து சென்றார் சர்ச்சில். அப்போது அவரது கைக்குட்டையை மேசையிலேயே வைத்துச் சென்றுவிட்டார்.

சர்ச்சிலைப் பிடிக்காத ஒருவர், அந்தக் கைக்குட்டையை எடுத்து, கழுதையின் முகத்தை வரைந்து வைத்துவிட்டார். திரும்பி வந்து அமர்ந்த சர்ச்சில், கைக்குட்டைப் படத்தைப் பார்த்தார். யார் வரைந்திருப்பார் என யூகித்து அறிந்தார். வரைந்தவரிடம் காட்டி, நீங்க உங்க முகத்தை இதில் துடைச்சீங்களா? என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம்.

யாருடைய சத்தம்?

சார்லஸ் லாம்ப் என்னும் ஆங்கில அறிஞர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத் திலிருந்த நபர்களுள் ஒருவர் உஸ்....உஸ் என்று சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தார்.

பேச்சை நிறுத்திய லாம்ப், மூன்றின் கூச்சல்தான் உஸ்....உஸ் என்ற சத்தம் தரக் கூடியது. 1. குள்ள வாத்து, 2. பாம்பு, 3. மூடன். இப்போது வந்த சத்தம் இதில் யாருடையது என்று தெரியவில்லை. கொஞ்சம் முன்னால் வந்தால் எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் என்றார். பின்பு, எந்தவித இடையூறுமின்றிப் பேச்சைத் தொடர்ந்தார்.


சொர்க்கம் செல்ல ஆசையா?

பெர்னாட்ஷா பள்ளிச் சிறுவனாக இருந்த போது, ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, உங்களில் சொர்க்கம் போக விரும்புகிறவர்கள் எழுந்து நில்லுங்கள் என்று கூறியுள்ளார்.

பெர்னாட்ஷா தவிர அனைத்து மாணவர்களும் எழுந்தனர். வியப்படைந்த ஆசிரியர், உனக்குச் சொர்க்கம் செல்ல ஆசை இல்லையா? என்று பெர்னாட்ஷாவைப் பார்த்துக் கேட்டதும், எனக்கும் சொர்க்கம் செல்லும் ஆசை உள்ளது.  ஆனால், இவர்கள் எல்லோரும் சொர்க்கம் சென்றபின் அது சொர்க்கமாகவா இருக்கும் என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தாராம்.


நினைவாற்றல்

வரலாற்று ஆசிரியர் மெக்காலே அதிக நினைவாற்றல் கொண்ட வராகத் திகழ்ந்தார். ஒரு புத்தகத்தில் ஓர் அத்தி யாயத்தை ஒரே ஒரு முறை படித்து அப்படியே ஒப்பித்துவிடுவாராம்.

ஏழு வயதிலிருந்தே சரித்திரப் புத்தகங்களை எழுதத் தொடங்கிய பெருமைக்குரியவர். ஜான் மில்டன் எழுதிய இழந்த சொர்க்கம் (Paradise Lost)  என்னும் நூலினை ஒரே இரவில் படித்து ஒப்பிப்பதாக நண்பரிடம் பந்தயம் கட்டினார். சொன்னபடியே படித்து நூல் முழுவதையும் காலையில் ஒப்பித்தாராம் மெக்காலே.


வழி உண்டு

பேராசிரியர் நியூக்லிட் தன்னுடன் பணிபுரியும் பேராசிரிய நண்பர்களுடன் எகிப்து பிரமிடுகளைப் பார்க்கச் சென்றிருந்தார்.

அப்போது பேராசிரியர்களுள் ஒருவர், நியூக்லிட்டை மட்டம் தட்ட நினைத்தார். எல்லோரும் உங்களைப் பெரிய அறிஞர் என்று  போற்றுகிறார்கள். இதோ, எதிரில் உள்ள இந்தப் பிரமிடின் சரியான உயரத்தினை உங்களால் சொல்ல முடியுமா? நண்பரே, உங்களிடம்தான் உயரம் அளக்கும் டேப் உள்ளதே என்று கிண்டலாகக் கேட்டார். மற்ற நண்பர்கள் அனைவரும் சிரித்தனர்.

நண்பர்களின் கேலிச் சிரிப்பினைப் பார்த்த நியூக்லிட் கோபப்படவில்லை. நண்பர்களே, முடியாத செயல் என எதுவுமில்லை. எதற்கும் ஒரு வழி கண்டிப்பாக இருக்கும். இப்போது இந்தப் பிரமிடின் உயரத்தை அளக்க ஒரு வழி உள்ளது என்றார்.

கேட்ட நண்பர்கள் திகைத்தனர். முதலில் நியூக்லிட், பிரமிடின் நிழலினை அளந்து குறித்தார். பின்பு, நண்பரின் உயரத்தை அளந்தார். நண்பரின் உயரத்திற்கும் நிழலின் அளவுக்கும் உள்ள வேறுபாட்டைக் கணித்தார். பிரமிடின் உயரத்தைக் கூறினார். நியூக்லிட் கூறிய அளவு பிரமிடின் சரியான உயரமாக இருந்ததாம். பேராசிரிய நண்பர்கள் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

Share