Home 2013 செப்டம்பர் பிரபஞ்ச ரகசியம் - 3 பனிக்கட்டியால் ஆன உலகம்
புதன், 28 அக்டோபர் 2020
பிரபஞ்ச ரகசியம் - 3 பனிக்கட்டியால் ஆன உலகம்
Print E-mail

நமது சூரியக்குடும்பத்தின் 5ஆ-வது கோளான வியாழன் பூமியைவிட 120 மடங்கு மிகப்பெரிய கோளாகும். இதன் தரைத் தளம் பற்றி இன்றுவரை நமது அறிவியலாளர்களுக்குத் தெரியவில்லை. இதற்குத் தடையாக இருப்பது இதன் வளிமண்டலம்.

இதன் வளிமண்டலம் சுமார் 600 கி.மீட்டர் உயரம் வரை பல்வேறு அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அடுக்குகள் கொண்ட வளிமண்டலத்தின் மேற்புறம் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களாலும், அதன் கீழே நீராவி, கந்தகம், மற்றும் அமோனியா போன்றவைகளாலும், அதனைத் தொடர்ந்து மீத்தேன், ஹைட்ரஜனேற்றம் கொண்ட சயனைடுகளாலும் உள்ளது. மேலும் அமோனியா, ஹைட்ரஜன், கந்தகம் கொண்ட கலவைகளால் ஆன கண்ணாடிபோன்ற துகள்களால்(கிரிஸ்டல்) உறையாக மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வியாழனைச்சுற்றி கோடிக்கணக்கான விண்கற்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.  சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது மோதியதன் காரணத்தால் உலகின் மிகப்பெரிய குளிர் இரத்தப் பிராணி டைனோசர் அழிந்தது. இதே போன்று ஆயிரக்கணக்கான விண்கற்கள் வியாழனைத் தினமும் தாக்கிக்கொண்டு இருக்கின்றன. இந்தத் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளவே வியாழன் கோள் இத்தகைய பாதுகாப்பான வளையத்தை இயற்கையிலேயே உருவாக்கியுள்ளது.

சமீபத்திய தகவலின்படி வியாழன் கோளின் தரைப்பகுதியில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகம் மற்றும் கார்பன் அடங்கிய மிதமான தட்பவெப்பம் நிலவுவது தெரியவந்தது. இதை வைத்து வியாழனில் உயிர்கள் வாழும் வாய்ப்பு 50 விழுக்காடு இருக்கலாம் என தெரியவருகிறது. ஆனால், அவை எவ்வாறான உயிர்கள் என்பதுதான் புதிராக உள்ளது. தாவரங்களைப் போன்ற உயிரினம் நமது பூமியில் மட்டுமே தரைத் தளத்தில் வாழ்கிறது. ஆனால், வியாழனின் வளிமண்டல அடுக்கில் இருந்தே உயிர்கள் வாழும் சூழல் நிலவுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மோனியா, நீர், மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைட் கலந்த (கிரிஸ்டல்) மேகங்களின் இடையிடையே ஆன உரசல்களால் பல கோடி ஆண்டுகளாக தொடர்ந்து மின்னல் வெட்டிக்கொண்டே இருக்கிறது.

இந்த மின்னல்களின் காரணமாக வாயுக்கலவைகளில் மின்னேற்றம் பெற்று புதிய உயிர்களாக உருவாகி இருக்கலாம். அந்த உயிர்கள் தங்களுக்கான சக்தியை(இரையை) மின்னலில் இருந்தே பெறக்கூடும். அந்த உயிர்கள் சூழலுக்கு ஏற்ப தன்னைத்தானே மாற்றிக்கொண்டு வாழும் வகையில் உடலமைப்பைப் பெற்று இருக்கும். பூமியில் இருக்கும் தாவரங்களைப் போலவே வியாழனில் வாழும் இந்த உயிரினங்களும் வாழ்க்கையை நடத்துகின்றன.

இலைகள் மீது படும் சூரிய ஒளியில் இருந்துதான் தனக்கு வேண்டிய உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. நமக்குத் தேவையான ஆக்சிஜனையும் தருகின்றன.

வியாழனில் மழை

அவற்றில் இதே போன்று பலநூறு கி.மீ அகலமுடைய இலைகள் போன்ற புற அமைப்பைக்கொண்ட உயிரினங்கள் மின்னல்களில் இருந்து பெறும் ஒளியில் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக்கொண்டு அதீத அளவு ஆக்சிஜனை வெளியிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் மேகக்கூட்டங்களில் நீராவி மற்றும் ஈரப்பதத்தின் தன்மை அவ்வப்போது அதிகரித்து மழையாகப் பெய்ய வாய்ப்புள்ளது. இது வியாழனின் வளிமண்டலத்தின் அடிப்பகுதியில் எப்பொழுதும் நடந்து கொண்டு இருப்பதுதான். பூமியைப் போலவே வியாழனிலும் மழைபெய்வது சாத்தியமென்றால் அங்கு உயிர்கள் பல்கிப் பெருகுவது சாத்தியமே. இந்த மறைவான உலகத்தை நேரில் கண்டறிய 1989 அக்டோபரில் கலிலியோ (நிணீறீவீறீமீஷீ) என்ற செயற்கைக்கோளை அமெரிக்கா அனுப்பியது. இந்த செயற்கைக்கோள் தன்னுடைய 6 ஆண்டுகால பயணத்திற்குப் பிறகு 1996-ஆம் ஆண்டு அக்டோபரில் வியாழனை நெருங்கியது. அங்கிருந்து கோளின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வாயுக்களின் அடர்த்தி போன்றவற்றைப் பற்றிய விரிவான தகவலைத் தந்துவிட்டு வியாழனின் வாயுமண்டலத்தில் வினாடிக்கு 30 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்து வளிமண்டல வெப்பநிலை பற்றிய தகவலைப் பூமிக்கு அனுப்பிக்கொண்டே 75 நிமிடங்கள் பயணித்தது. பிறகு வாயுக்களின் அழுத்தம் மற்றும் அதீத வெப்பம் காரணமாக எரிந்து சாம்பலாகிவிட்டது.

கோள்களின் தன்மையைக் கண்டறிதல்

இதுவரை கண்காணாத பல ஆயிரம் ஒளியாண்டுகள் தூரம் உள்ள கோள்கள் பலவற்றை _ அதன் தன்மைகளை நமது அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு கோள் நமது அறிவியலாளர்களின் தொலைநோக்கியில் தென்பட்டால் அதைநோக்கி லேசர் ஒளிகளை அனுப்புவார்கள். அது அந்தக் கோளின்மீது பட்டு வரும் எதிரொளிப்புத் தன்மையை வைத்து புதிய கோளின் வெப்பம், அவற்றின் சுழற்சித்திறன் போன்றவற்றைக் கணக்கிட்டுக் கிடைக்கும் விடைகளை ஏற்கெனவே கண்டறிந்த கோள்களுடன் ஒப்பிட்டு, இது உயிரோட்டமுள்ள கோள், இது உயிரோட்டமற்ற கோள் என முடிவு செய்யப்படுகிறது.

வியாழனையும் இதே முறையில்தான் கணக்கிட்டுள்ளோம். வியாழனின் கடுமையான வாயுச்சுழலால் நமது அறிவியலாளர்கள் இக்கோள் ஒரு பிரமாண்ட வாயுக்கோளம் என்றே கூறிக்கொண்டு வந்தனர். வியாழன் கோளை 1610லேயே கலிலியோ விரிவாக ஆராய்ந்தார். அப்போது அதனைச்சுற்றி 4 நிலவுகள் இருப்பதைக் கண்டறிந்தார். அதன் பிறகு வந்த அறிவியலாளர்கள் தொடர் ஆய்வு மூலம் 12 நிலவுகள் உள்ளதைக் கண்டறிந்தனர்.

வியாழனின் நிலவுகள்

கலிலியோ கண்டறிந்த 4 நிலவிற்கு ஒன்றை அவரது பெயரிலேயே கலிலியோ கலிஸ்டோ (Galileo Callisto) என அழைத்தனர். இவோ(Io), ,  யுரோப்பா(Europa), கனய்மெட்(Ganymede), போன்ற நிலவுகள் வியாழனை இடைவிடாது தொடர்ந்து தாக்கும் விண்கற்களில் கால்பாகத்தைத் தன்னுள் ஈர்த்துக்கொண்டு வருகிறது. இதில் இவோ என்ற நிலவு, சூரியனில் இருந்து பிரிந்து வந்த போது எப்படி நெருப்புக் கோளமாக இருந்ததோ அப்படியேதான் இன்றுவரை உள்ளது. தரைத்தளம் முழுவதும் எரிமலைக் குழம்புகளால் சூழப்பட்டு எரிமலைச் சமுத்திரம் போல் காணப்படுகிறது. இதன்மீது விடாது பொழியும் விண்கற்களின் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான கி.மீட்டர் உயரம் வரை லாவா அலைகள் எழுந்து அடங்குகின்றன. அடுத்து கலிலியோ கலிஸ்டோ மற்றும் கனய்மெட் என்ற நிலவுகளின் தெளிவான படங்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தக் கோள்களில் பல பகுதிகள் வெப்பமாகவும் சில பகுதிகள் குளிர்ந்தும் உள்ளன. கலிலியோ நிலவின் துருவப்பகுதியில் மிகவும் பெரிய அளவினாலான பனிமலைகளையும் நமது அறிவியலாளர்கள் செயற்கைக்கோள் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். கடந்த நூற்றாண்டில் ஆபத்து மிகுந்த விலங்குகளைப் பற்றிய ஆய்வு செய்பவர்கள் அதன் குட்டிகளைப் பிடித்து பெரிய விலங்குகளின் தன்மையை மதிப்பிடுவார்கள். யுரோப்பாவையும் அவ்வாறே நமது அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வியாழனைப் பற்றி நாம் மேலே அறிந்த பல தகவல்களை நமக்குக் கொடுத்தனர்.

யுரோப்பா (Europa)

மனிதனை வியக்க வைத்த ஒன்று யுரோப்பாவாகும். இந்தத் தொடரின் முதலாம் பாகத்தில் இப்பிரபஞ்சத்தில் காணும் இடமெங்கும் நீர் நிறைந்திருக்கிறது என அறிந்து கொண்டோம். ஆனால், இந்த யுரோப்பா துணைக்கோள் முழுவதும் பனிக்கட்டியால் ஆனது. வியாழன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அணிந்து கொண்ட குளிர்சாதனக் கவசம் என்று இந்த நிலவைக் கூறலாம். இந்த நிலவு வியாழனை 3 நாட்களுக்குள் சுற்றிவருகிறது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 42 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது. இதன் மேற்பகுதி மைனஸ் 150 டிகிரி முதல் மைனஸ் 300 டிகிரி வரை கடுங்குளிர் நிலவுகிறது.

மேற்புறம் ஆக்சிஜனின் அளவு நமது துருவப்பகுதிகளைப் போன்றுதான் உள்ளது.  யுரோப்பாவை 28 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் அளவுள்ள பனிக்கட்டி மூடியுள்ளது. பனிக்கட்டியின் கீழ் பல்லாயிரம் கி.மீட்டர் ஆழமுள்ள பெருங்கடல்கள் உள்ளது. துருவப்பகுதிகளில் உள்ள கடல் பகுதியில் 100 விழுக்காடு தூய தண்ணீரும் மத்தியரேகைப் பகுதியில் அடர்த்தி மிகுந்த உப்பு நீரும் உள்ளது. வியாழனின் ஈர்ப்புவிசையால் அடிக்கடி சுருங்கி விரிந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இதன் அடிப்பகுதி மிகவும் வெப்பமாக இருக்கிறது. மேலே பனிக்கட்டி, அதன் அடிப்பகுதியில் மிதமான வெப்பம் கொண்ட நீர். ஆழத்தில் அதீத கொதிநிலையில் உள்ள நீர் என வியப்பான ஓர் உலகைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. அதைவிட வியப்பான செய்தி, நீர்வாழ் உயிரினங்கள் அடங்கிய மிகப்பெரிய உலகம் இங்கு உள்ளது. ஆனால், எந்த வகையான கடல்வாழ் உயிரினம் என்று இன்றுவரை அறியப்படவில்லை. இருப்பினும், புவியின் ஆழத்தில் உள்ள ஒளிவிடும் தன்மை கொண்ட கடல்வாழ் உயிரினங்கள் யுரோப்பாவில் இருக்க வாய்ப்புள்ளது.

மேலும், அங்கு உள்ள உயிரினங்களுக்கு உணவுத்தொகுதி அளவுக்கு அதிகமாக இருப்பதால் நமது திமிங்கலங்களைவிட பெரிய உயிரினங்களும் மிகவும் சிறிய கிரில் போன்றனவும் (சிற்றிறால்கள்) இங்கு இருக்க வாய்ப்புண்டு. இந்த நிலவில் வாழும் உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக வாழவேண்டிய நிலையில்தான் இருக்கும்.

யுரோப்பாவில் பனிமலைகள் உருவான விதம்

வியாழனின் அருகில் செல்லும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக திடீர் என பனிக்கட்டிப் பாளங்களில் விரிசல் விழுந்து விடும். பல நூறு கிலோ மீட்டர்கள் ஏற்படும் இந்த விரிசல்களின் ஊடாக அதீத அழுத்தத்தில் தண்ணீர் நீருற்றுப் போல் உயர எழும்புகிறது. வெளியில் உள்ள கடுமையான குளிரின் காரணமாக உயரமாக எழும்பிய நீரூற்றுகள் சில வினாடிகளில் உறைந்துவிடுகின்றன. அப்படி உறைந்த பனியடுக்குகள் நாளடைவில் பனிமலைகளாக உருமாறுகிறது. இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் கீழான சமதளங்களாக உள்ளன. சிலி நாட்டிலுள்ள ஆட்டகாமா (Atacama desert, Chile) பாலைவனத்தில் அமைந்த மிகப்பெரிய தொலைநோக்கி மய்யத்தில் இந்த நிலவை ஆராய்வதற்கென்றே பிரிவு ஒன்றை அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் நாசா இணைந்து  உருவாக்கியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, இதன் மேற்புறத்தில் கடுங்குளிரையும் தாங்கும் உயிரினம் வாழ்வதற்கான சூழல் இருந்தாலும், மேல்தளத்தில் உயிரினங்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும் கதிரியக்கம் எப்போதும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. பிரபஞ்சம் ஆற்றல் நிறைந்த ஒரு பெட்டகமாகும். இங்கு எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் ஆற்றலுக்குப் பஞ்சமிருக்காது. கழுகு தனது குஞ்சுக்கு இரையை ஊட்டி விட்டுச் செல்வது போல் சூரியனும் நமக்கு முக்கியத் தேவைகளில் ஒன்றை அவ்வப்போது தந்துவிட்டுச் செல்கிறது. சூரியன் அளிக்கும் இந்த இரையானது சூரிய ஒளியைவிட மிகவும் அவசியமானதாகும். இந்த இரை நமக்குக் கிடைக்காவிட்டால், பூமியில் உயிர்கள் உருவாகி இருக்க வாய்ப்பில்லை. இது பூமி இன்னும் 450 கோடி ஆண்டுகள் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அது எவ்வகையான ஆற்றல் என்ற ரகசியத்தை அடுத்த தொடரில் சூரியனில் இறங்கித் தேடலாம்.

- சரவண ராஜேந்திரன்

//
Share