குத்துச்சண்டை (Boxing)
Print

பண்டைக் கால மக்களால் விளையாடப்பட்ட குத்துச்சண்டை பல்வேறு பரிமாணங்களைப் பெற்று  விளையாடப்படுகிறது. 1946ஆம் ஆண்டில் சர்வதேச குத்துச்சண்டைக் கழகம் லண்டனில் தொடங்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 1904ஆம் ஆண்டு செயின்ட் லூயிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு 1954 முதல் ஆசியப் போட்டிகளில் விளையாடப்பட்டு வருகிறது.

களம்:

91 மீட்டருக்குக் குறையாமலும் 1.22 மீட்டருக்கு அதிகமாகாமலும் உயரம் உள்ள மேடை 30 மீட்டர் அகலம், 38 மி.மீ. கனத்துடன் 7 மீட்டர் நீளமுள்ள  பலகைகளால் அமைக்கப்பட வேண்டும். மேடையின் 4 மூலைகளிலும் 10 முதல் 15 செ.மீ. கனமுள்ள 2.67 மீட்டர் உயர கம்பங்கள் பொருத்தப்பட வேண்டும்.

6.10 மீட்டர் நீள அகலமுள்ள சதுர வடிவில் இருக்கும் ஆடுகளத்தின் 4 மூலைகளிலும் கம்பங்கள் பொருத்தப்பட வேண்டும். ஒரு மூலையில் சிவப்பு நிறப் பஞ்சு அட்டையும் அதற்கு நேர் எதிர் மூலையில் நீலநிறப் பஞ்சு அட்டையும் பொருத்திய இடத்தில் அந்தந்த நிற உடை அணிந்த போட்டியாளர் அமருவர்.

பஞ்சினால் நிரப்பப்பட்டு தோல் அல்லது சிந்தடிக் உறையினால் மூடப்பட்ட கையுறை (Gloves), 2.5 மீட்டர் நீளமும் 5 செ.மீ. அகலமும் உள்ள துணி (bandage) பல், உதடுகளின் பாதுகாப்புக்காக உள் பாதுகாப்பு அட்டை (Gum Shield) உள்பக்கம் பஞ்சினால் செய்யப்பட்ட அட்டை தலையையும் காதுகளையும் பாதுகாக்க உதவும். கால்சட்டைக்குள் அடிவயிற்றுப் பகுதியில் பாதுகாப்புக்காக அட்டை ஆகியவற்றை அணிந்துகொள்ள வேண்டும்.

நேர் தாக்குதல் (Straight)

ஒரு கையை மடக்கிக் கொண்டு மறுகையைத் தோளுக்கு நேராக நீட்டி எதிரியின் முகத்தில் குத்துவதாகும்.

மடக்கித் தாக்குதல் (Hook)

குத்தும் கையை மடக்கி மிக வேகமாக எதிரியின் தலையில் குத்த வேண்டும். எதிரி நம்மை முகத்தில் குத்த வரும்போது தலையைப் பக்கவாட்டில் எடுத்து, உடனே எதிரியின் முகத்தில் குத்த வேண்டும்.

மேல்வெட்டு (Upper Cut)

எதிரி மிக அருகில் வந்து உடம்பில் தாக்க வரும்போது எதிரியின் இடது பக்கமாக விலக வலதுகையால் எதிரியின் தாடையில் குத்த வேண்டும். அப்போது, வலது கையைக் கீழிருந்து மேலாக வளைத்து எடுக்க வேண்டும்.

தற்காப்புத் திறன்கள் (Weaving)

தலை அசைவுகள் தலையை மிக வேகமாக இட அல்லது வலப்பக்கம் விலக்கவும், முன்புறமாக குனியவும், முழங்கால் மடக்கி சிறிது உட்காரவும் பயிற்சி எடுக்க வேண்டும். இது எதிரியின் குத்திலிருந்து தப்பிக்க உதவும்.

பக்கவாட்டில் விலகுதல்

எதிரி வலது கையால் குத்தும்போது நாம் நமது வலது காலை எடுத்து வைத்து விலகவேண்டும். இது எதிரியைச் சமநிலை இழக்கச் செய்யும்.

தடுத்தல்

எதிரி குத்தும்போது 2 கைகளையும் மடக்கி முகத்துக்கு நேராக முன்கையை வைத்து முகத்தில் குத்து விழாமல் முன்கையால் தடுக்கவேண்டும்.

தள்ளுதல் (Parrying)

எதிரி இடது கையால் குத்தும்போது நாம் வலது கையை நீட்டி வலது முன்கையால் எதிரியின் இடதுகையை வலப் பக்கமாகத் தள்ள வேண்டும். எதிரி சிறிது சமநிலை இழக்கும்போது நாம் இடது கையால் குத்த வேண்டும். இதேபோல் இடது முன் கையால் தடுத்து வலது கையால் குத்த வேண்டும்.

எடை சரிபார்த்தல்

போட்டிகளின் முதல் நாள் காலையில் மருத்துவப் பரிசோதனையும் எடை சரிபார்த்தலும் நடைபெறும்.

சுற்றுகள்:

2 நிமிடம் கொண்ட 4 சுற்றுகள் உண்டு. ஒவ்வொரு சுற்றின் இடைவெளியிலும் 1 நிமிட இடைவெளி உண்டு. மிக இளையோர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு 2 நிமிட 3 சுற்றுகளில் 1 நிமிட ஓய்வு உண்டு.

புள்ளி வழங்கும் முறை

ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீரர் மற்ற வீரரை எத்தனை தடவை குத்தினார் என்பதை நடுவர் கணக்கு வைப்பார். இடுப்புக்கு மேலே எதிரியின் உடலின் எந்தப் பாகத்திலும் தடுக்கப்படாமல் கையுறையின் முஷ்டியால் குத்தினால் புள்ளிகள் வழங்க கணக்கில் கொள்ளப்படும். விதிமீறல், கையுறை முஷ்டியில்லா வேறு இடங்களிலோ அல்லது கைகளிலோ குத்தினால் புள்ளி (Point) கிடையாது.

தவறுகள்

ஒரு வீரரை நடுவர் எச்சரித்தால் எதிரிக்கு 1 புள்ளி வழங்கப்படும். இது குறிப்புத்தாளில் கீ என்று குறிக்கப்படும்.

புள்ளி

3 சரியான குத்துகளுக்கு 1 புள்ளி வழங்கப்படும். ஒரு சுற்றில் அதிக புள்ளி எடுத்தவருக்கு 20 புள்ளிகள் வழங்கப்படும். இருவரும் சமமாக இருப்பின் இருவருக்கும் 20 புள்ளிகள் வழங்கப்படும். முடிவில் அதிக புள்ளிகள் எடுத்திருப்பவரே வெற்றி பெற்றவராவார்.

நீக்குமுறை மூலம் வெற்றி (Win by knockout)

தரையில் விழும் போட்டியாளர் 10 எண்ணுவதற்குள் எழவில்லை யெனில் எதிர்வீரர் வெற்றி பெற்றவராகிறார்.

Share