அறிஞர்களின் வாழ்வில்.....
Print

பாடங்களே ஓவியமாக.....


ராபர்ட் ரிப்ளே

உலகப் புகழ்பெற்ற ஓவிய மேதையாகத் திகழ்ந்தவர் ராபர்ட் ரிப்ளே. குழந்தைப் பருவத்திலேயே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளிக்கூடத்தில் எழுதச் சொல்லும்போது படங்களை வரைந்து கொண்டிருப்பார். ரிப்ளே படம் வரைவதை ஆசிரியர் ஒருவர் பார்த்துவிட்டார்.

ரிப்ளேயின் ஓவிய ஆர்வத்தை _ வரைந்திருந்த நுணுக்கத்தை உணர்ந்த ஆசிரியர், எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய பாடங்களைப் படித்துப் பார்த்து ஓவியமாகவே வரைந்து கொடுத்துவிடு. அதனை நான் கட்டுரைகளாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த ஊக்கமே பின்னாளில் ஓவியம் வரைய சம்பவங்களைத் தேடி 197 நாடுகள் அலைய வைத்துள்ளது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் ரசிகர்களைக் கொண்டிருந்த ரிப்ளேவுக்கு 30 லட்சம் கடிதங்கள் வந்திருந்ததாக இவரைப் பற்றிய குறிப்புகளில் காணப்படுகிறது.

ஆங்கில அகராதி


ஜான்சன்

முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் ஜான்சன் என்பது எல்லோருக்கும் தெரியும். இவருக்கு, தலைக்கனம் கொண்டவர் என்ற பெயரும் உண்டு. தனது விருப்பு வெறுப்புகளை அகராதியின் அர்த்தத்தில் புகுத்தியவர்.

ஸ்காட்லாந்து மக்களைப் பிடிக்காது என்ற வெறுப்பினை அகராதியில் காட்டியவர். ஓட்ஸ் என்ற வார்த்தைக்கு, தானியம் என்று அர்த்தம் சொன்ன ஜான்சன், ஒருவகைத் தானியம்,  இந்தத் தானியத்தை இங்கிலாந்தில் குதிரைகளும் ஸ்காட்லாந்தில் மனிதர்களும் சாப்பிடுவர் என்று கூறியுள்ளார்.

10 வருடங்கள் தனியாக உழைத்து, ஆங்கில அகராதியை முடித்தவர் ஜான்சன். பிரெஞ்சு மொழி அகராதி 40 மொழி வல்லுநர்களால் 40 ஆண்டுகள் உழைத்து உருவாகியுள்ளது. உங்களால் எப்படி 10 ஆண்டுகளில் தனியாக முடிக்க முடிந்தது என்று நண்பர் ஒருவர் ஜான்சனிடம் கேட்டுள்ளார்.

40 பிரெஞ்சுக்காரர்கள் 40 ஆண்டுகளில் செய்து முடித்ததை ஓர் ஆங்கிலேயன் 10 வருடங்களில் செய்து முடித்ததிலிருந்து, 10 ஆங்கிலேயர் 1600 பிரெஞ்சுக்காரர்களுக்குச் சமம் என்ற உண்மை தெரிகிறது என்றாராம் ஜான்சன்.

எதையும் - யாரையும் எடுத்தெறிந்து பேசும் ஜான்சன், தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது, அடக்கத்தைப் பின்பற்றியுள்ளார். உங்கள் அகராதியில் ஒரு வார்த்தையின் அர்த்தம் தவறாக உள்ளது என்று பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டியபோது, தவறுக்கு என் அறியாமைதான் காரணம் என ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜான்சன் ஸ்காட்லாந்து மக்களைப் பற்றி மோசமான எண்ணம் வைத்திருப் பினும் அவரது ஸ்காட்லாந்து நண்பர் பாஸ்வெல் பற்றி, பாஸ்வெல் எழுதிய வாழ்க்கை வரலாறு, ஆங்கில இலக்கியத்தில் நிலையான இடத்தினைப் பெற்றுவிட்டது; மேலும், வாழ்க்கை வரலாறு  எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரி நூலாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.

மகா மடையர்


மார்க் டுவைன்

மார்க் டுவைன் என்ற நகைச்சுவை எழுத்தாளர் தனது ஆரம்ப காலத்தில் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் குழுவில் 6 மாதங்கள் பணியாற்றினார். ஒருநாள் ஆசிரியர் டுவைனை அழைத்து, இனி நீங்கள் வேலைக்கு வரத் தேவையில்லை என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட டுவைன், ஏன்? என்று கேட்டுள்ளார்.

நீ ஒரு சோம்பேறி, ஒன்றுக்கும் உதவாதவன் என்று கூறியதும், நீங்கள் ஒரு மகாமடையர் என்றாராம், டுவைன். ஆசிரியரின் திகைப்பைப் பார்த்ததும், நான் ஓர் உதவாக்கரை என்பதைத் தெரிய உங்களுக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. இது அப்போதே எனக்குத் தெரியும்! என்றாராம் டுவைன்.

கலையின் சிகரம்


அலெக்சாண்டர் டூமாஸ்

உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் என அழைக்கப் படுபவர் அலெக்சாண்டர் டூமாஸ். 68 ஆண்டுகள் வாழ்ந்த இவர், 1,200 புத்தகங்களை எழுதியுள்ளார். எழுத்தின் மூலம் அதிகம் சம்பாதித்தவர் என்ற பெயரும் புகழும் இவருக்கு உண்டு.

டூமாசின் தந்தை, நெப்போலியனின் குதிரைப் படையில் போர் வீரன் என்பதால் உலகின் பல பாகங்களுக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். ஒவ்வொரு இடத்திற்குச் சென்று வந்ததும், தன் மகன் டூமாசை அழைத்து, தான் சென்று வந்த நாடுகள், அந்நாட்டின் சிறப்பம்சங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், அங்கு தோன்றிய எழுத்தாளர்கள், அவர்களின் நூல்கள், அந்த நூல்களின் மூலம் அந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியெல்லாம் விரிவாகக் கூறுவார்.

பின்பு, பேனாவின் சக்தியையும், எழுத்தின் வலிமையையும் கதை போல சொல்வார். டூமாசின் வெற்றிக்கு இந்நிகழ்வுகளே அடிப்படையாயின.

-அன்டோனி (Antony), -மூன்று துப்பாக்கி வீரர்கள் (The Three Musketeers) போன்ற படைப்புகள் டூமாசின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்பவை. புகழும் பணமும் போட்டி போட்டுக் கொண்டு வரவே, -டூமாஸ் பணம் கொடுத்து, தமது வீட்டில் சிலரை வைத்து எழுதி அதனைத் தமது பெயரில் வெளியிடுகிறார் என்று பொறாமையாளர்கள் பிரச்சாரம் செய்தனர்.

பொய்ப் பிரச்சாரங்கள் அனைத்தையும் வீழ்த்திய டூமாஸ், நாவல்களை நீல நிறத் தாள்களிலும், கவிதைகளை மஞ்சள் நிறத் தாள்களிலும், கட்டுரைகளை ரோஜா நிறத் தாள்களிலும் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். -கலையின் சிகரம் என பெர்னாட்ஷாவினால் அழைக்கப்பட்டவர்.

Share