Home 2013 நவம்பர் பிரபஞ்ச ரகசியம் 5
திங்கள், 17 ஜனவரி 2022
பிரபஞ்ச ரகசியம் 5
Print E-mail

மனிதர்கள் வாழ இன்னொரு கோளும் இருக்கு!

- சரவணா ராஜேந்திரன்

பிரபஞ்ச ரகசியம் 3ஆவது தொடரில் பனிக்கட்டியால் மூடிய யுரோப்பா என்னும் வியாழனின் நிலவைப்பற்றிப் பார்த்தோம், இந்தப் பயணத்தின் போது பூமியின் மாதிரியைப் போன்று புதுமையான ஒரு நிலவைச் சந்திக்கப் போகிறோம். அதற்கு முன்பு கோள்கள் பற்றிய சிறிய எளிய அறிமுகம்:

மனித குலம் அறிவுபெற்ற காலத்திலிருந்து (சுமார் 30,000 ஆண்டுகள்) இரவு நேரம் என்பது வெற்று வானம்தான். ஆகையால்தான் மனிதன் மிகவும் கூர்ந்து நோக்கி வந்தான். அப்போது வானில் சில பொருள்கள் மட்டும் ஒரே மாதிரியாக குறிப்பிட்ட வரிசையில் வருவதைக் கண்டான். சில காலங்களில் அவை ஒரே நேர்க்கோட்டில் வர அவற்றைத் தனித்துவம் வாய்ந்த ஒரு பொருளாக கணக்கில் கொண்டார்கள்.


டைடனின் தரைத் தளம்

இவை காலப்போக்கில் கோள்கள் எனப்பட்டன, . கோள்கள்: அறிவியல் ரீதியான மனித குலத்தின் இந்த மாபெரும் கண்டு பிடிப்பை உலகம் முழுவதும் பிரமிடுகள் கட்டுவதற்கான அளவீடு, கடல்பயண வழிகாட்டி, மற்றும் வசந்த, மழை குளிர் மற்றும் கோடைக்கால ஆரம்பக் குறியீடுகளாகப் பயன்படுத்தினர். ஆனால், இந்தியாவில் இன்றும் மூடநம்பிக்கைகளுக்கு மூல காரணமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசுத்துறையும் விதிவிலக்கல்ல.

அதாவது, அமாவாசை தினத்தன்று தேர்தல் முடிவுகள் அறிவித்தல், அன்று புதிய திட்டங்கள் செயல்படுத்த அறிக்கைவிடுதல் போன்றன இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பார்த்தீர்களா? நாம் பார்க்கும் - படிக்கும் அதே கோள்களைக் கொண்டு மக்களை மூடர்களாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

விண்வெளி ஆய்வு மய்யமான இஸ்ரோ (Isro) கூட தன்னுடைய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ ஜோதிடர்களிடம் ராகுகாலம் எமகண்டம் நல்லநேரம் பார்க்கிறது. கோள்களில் ஒன்று மட்டும் வித்தியாசமாகத் தெரிய அதைப்பற்றி பல கட்டுக்கதைகளை மெல்ல மெல்லக் கிளப்பிவிட்டனர்,

அந்தக் கட்டுக்கதைகள் மனிதனுக்கு சிந்திக்கும் அறிவு வளர வளர மக்களை ஏமாற்றும் காரணியாக மாறத் தொடங்கியது. தனது வாழ்வின் தற்செயல் நிகழ்வுகளை எல்லாம் விண்ணில் வித்தியாசமாகத் தெரிந்த அந்த ஒரு பொருளுடன் தொடர்புபடுத்திப் பேசிக்கொண்டு இருந்தான்.

நாட்கள் ஆக ஆக சில சோம்பேறிகள் கூட்டம் அதையே வயிறு வளர்க்கும் கலையாக மாற்றிக்கொண்டது. வானில் தெரிந்த அந்த வித்தியாசமான பொருள்தான் சனிக்கோள். ஏன் இது வித்தியாசமாகத் தெரிகிறது? சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள்தான் சனிக்கோளை அதிக ஆர்வம் கொண்டு பார்க்கக் காரணமாகிவிட்டது. இதுதான் சனி என்ற சொல்லிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் காரணமேயன்றி வேறொன்றுமில்லை,

சனிக்கோளைப்பற்றியும் அது தொடர்பான மூடநம்பிக்கை பற்றியும் நாம் அடுத்த தொடரில்  விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். இப்போது, புதிய உலகமான சனிக்கோளின் நிலவு டைடனை நோக்கிப் பயணம் செய்யலாம்,

டைடன் (Titan)

நமது சூரியக் குடும்பத்தில் சில கோள்களுக்கு இருக்கும் துணைக்கோள்கள் போல்(நிலவு) சனிக்கோளிற்கும் பல நிலவுகள் உண்டு. அவை: 1.டைடன் (Titan), 2.ரேஹ (Rhea), 3.அய்ப்டஸ் (Iapetus), 4.டையோன் (Dione), 5.தித்தேஸ் (Tethys), 6.என்சிலடுஸ் (Enceladus), 7.மிமாஸ் (Mimas), 8.ஹைபெரின் (Hyperion), 9.ப்ரொமெதெஸ் (Prometheus), 10.பண்டொர (Pandora), 11.பொயிபி (Phoebe), 12.ஜனஸ் (Janus), 13.எபிமெதிஸ் (Epimetheus), 14.ஹெலெனே (Helene), 15.டெலிஸ்டொ (Telesto), 16.கலிப்ஸோ (Galypso), 17.அட்லஸ் (Atlas), 18.பான் (Pan), 19.யாமீர் (Ymir), 20.பாலிஅஃக் (Paaliag), 21.சியர்னஃக் (Siarnag), 22.டார்வொஸ் (Tarvos), 23.கிவியுக் (Kiviug), 24.இஜிரக் (Ijirag), 25.த்ரிமெர் (Thrymr), 26.ஸ்கதி (Skathi), 27.முன்டில்ஃபாரி (Mundilfari), 28.ஏரிப்போ (Erriapo), 29.அல்பிஒரக்ஸ் (Albiorox).

இவை இதுவரை சனிக்கோளைச் சுற்றிக்கொண்டு இருக்கும் நிலவுகளில் கண்டுபிடிக்கப்பட்டு பெயர் வைக்கப்பட்டவை. இந்தப் பெயர்கள் அனைத்தும், கிரேக்க புராணக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஆகும். 2007 வரை சுமார் 60க்கும் மேற்பட்ட நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.


டைடனை ஆய்வு செய்யும் கசினி விண்கலம்

மேலும், பல நிலவுகள் அங்கு இருப்பதால் அதைக் கண்டறியும் பணியும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இங்கு உள்ள அனைத்து நிலவுகளையும்விட நாம் இந்தத் தொடரின் முன்னுரையில் கண்ட டைடன்தான் தற்போது நமது சூரியக் குடும்பத்தில் அதிசயக் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது.

கிரேக்கக் கடவுளான டைடனின் பெயரையே இதற்கும் வைத்துள்ளனர். இந்த நிலவு நமது நிலவைவிட இரண்டு மடங்கு பெரியது.

டைடன் நிலவு நமது அறிவியலாளர்களை ஏன் அதிக அளவு ஈர்த்தது என்றால், நமது பூமியை ஒத்த தரைத்தளம் வளிமண்டலம் என அனைத்தும் அமைந்து உயிர்வாழத் தகுந்த இடமாக உள்ளது. உயிர்வாழத் தேவையான முக்கியத் தனிமங்களான மீத்தேன், கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன், நைட்ரஜன் என பெரிய உயிர்மப்பொருட்கள் அடங்கிய பெட்டகமே இந்த நிலவில் உள்ளது.


பூமி & டைடன்

இது பூமியில் உயிரினம் உருவாகும் போது எப்படி இருந்ததோ அதே போல் தற்போது காணப்படுவதுதான் நம் அறிவியலாளர்களை ஈர்க்க முக்கியக் காரணியாகும். இதன் மூலம் நம் பூமியில் உயிரினம் எப்படித் தோன்றியது என்பதையும் நமது அழகான கோளில் உயிரின வளர்ச்சியையும்  அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பூமியிலும் டைடன் நிலவிலும் உள்ள தனிமங்கள் அனைத்தும் ஒருமித்தே காணப்படுகின்றன.

டைடன்

H2 (Hydrogen) ஹைட்ரஜன்
CO (Carbon Monoxide) கார்பன் மோனாக்ஸைடு
CO2 (Carbon Dioxide) கார்பன் டை ஆக்ஸைடு
C2N2 (Cyanogen) சைனோஜென்
C2H2 (Acetylene) அசிடலின்
C2H4 (Ethylene) எதலின்
C4H2 (Diacetylene) டை அசிடலின்
C3H4 (Methylacetlyene) மெதைல்லசிட்டலைன்
C3H8 (Propane)  ப்ரொபென்
HCN (Hydrogen Cyanide) ஹைட்ரஜன் சயனைட்
HC3N (Cyanoacetylene) சைனொஅசிட்டலின்

பூமி

H2 (Hydrogen) ஹைட்ரஜன்
CO (Carbon Monoxide) கார்பன் மோனாக்சைடு
Ne (Neon) நியோன்
O3 (Ozone)  ஓஸோன்
N2O (Nitrous Oxide)  நைட்ரஸ் ஆக்ஸைடு
He (Helium) ஹீலியம்
Xe (Xenon) ஸெனான்
Kr (Krypton) க்ரிப்டொன்
NO2 (Nitrogen Dioxide) நைட்ரஜன் டை ஆக்ஸைடு

டைடனிற்கும் பூமிக்கும் உள்ள ஒற்றுமையை மேலே உள்ள விவரங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்வெளியில் இருந்து வேற்றுக் கோள் மனிதர்கள் யாரேனும் பூமி, டைடன் இரண்டையும் பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் என்று கூறும்படி இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். காரணம், இரண்டுமே தங்களது வாயுமண்டலத்தில் அதிக அளவு ஈரப்பதத்தைக் கொண்டுள்ளன. டைடனில் சமுத்திரங்கள் மற்றும் மிகப்பெரிய ஏரிகள் காணப்படுகிறது.

இது நீரால் ஆனது அல்ல, திரவ நிலையில் உள்ள மீத்தேன் மற்றும் திரவ ஹைட்ரஜன்களால் ஆனதாகும். சிலிகனும் கார்பன் தன்மையில் இங்கு காணப்படுவதால் உயிரினம் வாழ முற்றிலும் உகந்த சூழல் இங்கு நிலவுகிறது. ஆனால், இதன் தரைத்தளத்தில் கதிரியக்கத்தன்மை மற்ற கோள்கள் மற்றும் நிலவுகளைவிட குறைவாக இருக்கிறது. மேலும், கதிரியக்கத்தை உறிஞ்சும் அளவிற்கு நீர்மக் கனிமங்கள் இருப்பதால் இங்கு உயிரினங்கள் வாழ்வதில் அதிக சிரமமிருக்காது.


டைடனின் மேஹா சமுத்திரம் (Mehaa Sea)
பின்னணியில் சனிக்கோள்.
வயோஜர் விண்கலம் அனுப்பிய படம்.

காற்றுவெளியில் தனித்த நிலையில் ஆக்ஸிஜன் இல்லாவிட்டாலும், இங்கு இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் இதர ஆக்ஸிஜனேற்றம் கொண்ட தனிமங்கள் தாவரங்கள் வளர மிகவும் தகுதியான இடமாக உள்ளது. டைடனில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஆராய நாசா மற்றும் அய்ரோப்பிய வானியல் ஆய்வு மய்யம் (NASA, ESA) இணைந்து சென்ற வருடம் (The Ttitan Saturn System mission) (TSSM) டைடன் சனிக்கோள் என்ற ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் விண்கலம் 2016ஆம் ஆண்டு டைடனை நோக்கிப் பயணிக்கும். இந்த ஆய்வுக்கலம் 7 வருடங்களாகப் பயணித்து 2023 அன்று டைடனை அடையும். விண்கலத்துடன் எந்தச் சூழலிலும் விளையும் 20 வகையான தாவர வகைகள் மற்றும் ஈஸ்டுகள், பாக்டீரியங்கள், காளான்கள், பூஞ்சைகள் ஆகியவற்றை அனுப்பி அங்கு அவற்றின் வளர்ச்சியைப் பரிசோதிக்க உள்ளனர்.

இவை அங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றி வளர்ச்சியடைய ஆரம்பித்தால் மனித இனம் முதன்முதலாக பூமியை விட்டு வேறு இடத்திற்குச் சென்று வாழ்வதற்குத் தேவைப்படும் ஒரு புதிய இடம் கிடைத்துவிடும்.

சனிக்கோளின் வளையங்களில் 90 விழுக்காடு பனிக்காட்டிதான் உள்ளது. இந்தப் பனிக்கட்டிகளைக் கொண்டு சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் சமுத்திரத்தால் நிரப்பி விடலாம். சனிக்கோள், அதன் பனிக்கட்டியினாலான வளையம், அங்கு எப்படி நீர் வந்து பனிக்கட்டியாக மாறியது என்பதைப் பற்றிய ரகசியம் தொடரும்.

Share