Home 2014 ஜனவரி அன்பு மடல்
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
அன்பு மடல்
Print E-mail

தள்ளிப் போட்டால் சோம்பேறித்தனம் துள்ளிக் குதிக்கும்

பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே,

புத்தாண்டு- _ ஆங்கிலப் புத்தாண்டு, தை முதல்  நாளைக் கொண்ட தமிழ்ப் புத்தாண்டு இரண்டும் பிறக்கப் போகின்றன. நீங்களும் விழாவாகக் கொண்டாடுங்கள், தை முதல் நாள்தான் திராவிடர் திருநாள் _ தமிழ்ப் புத்தாண்டு. மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றார் நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தாத்தா.

உழவோர் உலகத்தோர்க்கு அச்சாணி என்று வள்ளுவர் கூறினார் அல்லவா?

அந்த உழவர் பெருநாள்-_ அறுவடைத் திருநாள் தையில்தானே!

தைதைதைதக்கா .... குறித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்;

அன்னை பொங்கல் தருவார்; தந்தை புத்தாடை வாங்கித் தருவார். தாத்தா பாட்டி அன்பு முத்தங்களைத் தந்து வாழ்த்துகளைக் கூறுவார்கள்.

அதிருக்கட்டும், நீங்கள் எல்லாம் கொஞ்சம் வளர்ந்திடும் வரும் ஆண்டுகளில் உங்களுக்கு எல்லாம் ஓர் அருமையான வாய்ப்பு கிடைக்கப் போகிறதே!

சுற்றுலா சென்று பார்த்துச் சுவைக்கலாமே. சென்னையில் கோல்டன் பீச் தங்கக் கடற்கரை, எம்.ஜி.எம், நியூவேல்ட், கிஷ்கிந்தா, மேட்டுப்பாளையம் பகுதியில் பிளாக்தண்டர் என்று சென்று சுவைத்த உங்களுக்கு இனி அவை எதுவும் தராத ஒரு வாய்ப்பை திருச்சி அருகில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர்  பரப்பில் அமையவுள்ள பெரியார் உலகம் தரும்.

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (Statue of Liberty) போல் பெரியார் தாத்தாவின் முழு உருவ வெண்கலச் சிலை 95 அடி உயரத்தில் 40 அடி பீடத்தின் மீது _ ஆக 135 அடி உயரத்தில் உருவாக்க முதற்கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன!

மாபெரும் சிலை மட்டுமா? நீங்கள் கண்டு ரசித்து   மகிழ, பெரியார் அறிவியல் கூடம், பிளானிட்டோரியம் என்ற கோள் அரங்கம், விண்கலப் பயணம் பற்றிய முழு அனுபவ உண்மைகள், குழந்தைகள் பூங்கா, நூலகம் _ உணவகங்கள்_ இப்படி பலப்பல இடம்பெறப் போகின்றன! பள்ளி விடுமுறைக் காலங்களில் அங்கே சென்று இரண்டு மூன்று நாள்களைக் கூட நீங்கள் செலவழித்து புத்தறிவும் புத்தாக்கமும் பெற்று வீடு திரும்பலாம்!

தஞ்சையில் நமது இயக்கத் தோழர்கள் திரட்டித் தந்த 1005 பவுன் தொகை மூலநிதியாகி _ வசூல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

3 ஆண்டுகளுக்குள் சிலையை முதலில் அமைத்துவிட நமது தோழர்கள் திட்டமிட்டுப் பணிபுரிவதில் மும்முரமாய் உள்ளனர்!

நீங்கள் _ பெரியார் பிஞ்சுகள் அனைவரும் அதற்காக உங்கள் உண்டியல்களில் இப்போதிருந்தே சேமிக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு நாளும் கிடைக்கும் காசுகளில் மிச்சப்படுத்தி உண்டியலில் போட்டுக்கொண்டே இருங்கள்! அதனால் சேமிக்கும் பழக்கமும் வளரும். அதே நேரத்தில் கொடுக்கும் மனப்பான்மையும் சிறுவயதிலேயே உங்கள் மனதில் பதிந்து, ஆழ வேர் ஊன்றி, உங்களை எதிர்காலத்தில் சிறந்த தொண்டறச் செம்மல்களாக ஆக்கும் என்பது உறுதி.

உம், அடுத்து சில மாதங்களில் உங்களில் பலர் தஞ்சையில் பெரியார் பிஞ்சுகள் -_ பழகு முகாமிற்கு வருவீர்கள் அல்லவா? அங்கே சந்திப்போம்!

தேர்வுக்குரிய பருவம் இது. நன்றாய் படியுங்கள், அன்றாடம் படியுங்கள் _ இன்றைய  படிப்பு, வீட்டுப் பாடம் (Home Work) செய்து முடிக்க தள்ளிப்போடக் கூடாது. இன்றைய சாப்பாட்டை நாளைக்குச் சாப்பிட தள்ளிப் போடுவோமா? மாட்டோம் -_இல்லையா? அதைவிட அறிவுக்குக் கல்வி அவசியம் இல்லையா?

அன்றாடப் படிப்பு _ வீட்டுப் படிப்பு வேலை _ உடனுக்குடன் முடித்தால் மாமலையும் ஓர் கடுகுதான்! எளிதில் எதுவும் முடியும்தானே!

கீழே உள்ள ஆங்கிலச் சொல்லைப் பாருங்கள்; படியுங்கள்.

NO  WHERE

ஏழு ஆங்கில எழுத்துகள்தானே! இதை எப்படிப் படிப்பீர்கள்? நோ வேர் என்றா?

அல்லது Now Here _ நவ் ஹியர் என்றா? அதற்குரிய பொருள் புரிகிறதா? இப்போது உங்களுக்குக் கிடைத்துள்ள நேரத்தில் _ அதாவது உரிய நேரத்தில் _ உங்கள் பணியை முடித்து மகிழுங்கள். தள்ளிப் போட்டால் சோம்பேறித்தனம் துள்ளிக் குதிக்கிறது என்று அல்லவா ஆகும்.  கூடாது! கூடாது!

உங்கள் பிரியமுள்ள,
தாத்தா  கி.வீரமணி

Share