Home 2014 ஜனவரி அவமானங்கள் என்ன செய்யும்?
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
அவமானங்கள் என்ன செய்யும்?
Print E-mail

- பிஞ்சு மாமா

இனிய பிஞ்சுகளே...

செய்தித்தாள் படிக்கும் பழக்கமும், தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்கும் வழக்கமும் உங்களுக்கு உண்டா? அப்படி இருந்தால் கடந்த 2013 டிசம்பர் 5 அன்று, தென் ஆப்பிரிக்க கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்த செய்தியைப் படித்திருப்பீர்கள்.

உலகில் எவருமே அனுபவிக்காத சிறை வாழ்க்கையை அனுபவித்தவர் மண்டேலா. 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களின் நிற வெறியை எதிர்த்து முதலில் அறவழியிலும் பின்னர் ஆயுதம் ஏந்தியும் போராடியவர்.

இவரது இளமைக் காலம் மிகவும் கொடுமையானது. பலமுறை வெள்ளையர்களின் ஒடுக்குமுறைக்கும் வெறுப்புக்கும் ஆளானவர்.

பள்ளிப் பருவத்தில் மண்டேலா கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் உடையவராக இருந்தார். இவர் இடம்பெற்றிருந்த அணியில் மண்டேலாவும் இன்னொருவரும் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெள்ளையர்கள். ஒருமுறை நடைபெற்ற போட்டியின்போது மண்டேலா 2 கோல் போட்டதால் அவரது அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், மண்டேலாவின் அணியில் இடம் பெற்றிருந்த வெள்ளையர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கருப்பினத்தைச் சேர்ந்தவன் போட்ட கோலினால் நாம் வெற்றி பெறுவதா என நினைத்த வெள்ளையர்கள், மண்டேலா தவறான முறையில் கோல் போட்டதாகச் சொல்லி தங்கள் வெற்றியை நிராகரித்துவிட்டனர்.

இவர் வாழ்வில் சந்தித்த இன்னொரு நிகழ்வு இது

வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவர் தனது கைப்பை கீழே விழுந்தது தெரியாமல் சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனைக் கவனித்த மண்டேலா, கைப்பையினை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று வெள்ளைக்காரப் பெண்மணியிடம் கொடுத்துள்ளார்.

மாணவராக நெல்சன் மண்டேலா

கைப்பையினையும் மண்டேலாவையும் பார்த்த பெண்மணியின் மனதில், ஒரு கருப்பினச் சிறுவன் எடுத்துக் கொண்டுவந்த கைப்பையினை வாங்க வேண்டுமா? என்ற எண்ணம் மேலிடவே, கைப்பையினை வாங்கி வீசி எறிந்துவிட்டுச் சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த சிறுவன் மண்டேலா, அவர்கள் தவறவிட்டுச் சென்ற பொருளினை நாம் எடுத்துக் கொடுத்து உதவிதானே செய்தோம் என்று நினைத்துக் குழம்பியுள்ளார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்.  விட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார் மண்டேலா. அப்போது, ரயிலில் நண்பர்களுடன் பயணம் செய்யும்போது பலமுறை டிக்கெட் பரிசோதகரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். நிறத்தால், இனத்தால் குறைந்தவர் எப்படி மற்ற மாணவர்களுடன் பயணம் செய்யலாம் என்று கேட்டு ரயிலினை நிறுத்தி மண்டேலாவை இறக்கி விட்டிருக்கிறார்கள்.

இந்த இன்னல்களுக்கிடையில் சட்டம் பயின்று தொழில் செய்தபோதும் கொடுமைகள் குறையவில்லை.

ஜோகன்ஸ்பர்க்கில் சட்ட அலுவலகம் அமைத்ததும் ஏராளமான வழக்குகள் வந்துள்ளன. அப்போது, நீதிமன்றங்களில் மண்டேலா பலமுறை அவமதிக்கப்பட்டுள்ளார். கருப்பினத்தைச் சேர்ந்த இவரிடம் சாட்சி சொல்லவோ குறுக்கு விசாரணை செய்யவோ வெள்ளையர்கள் விரும்பவில்லை.

மண்டேலா கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப்போவதில்லை என்றும் நீதிபதியிடமே பதில் அளிக்கிறோம் என்றும் கூறி மண்டேலாவை மட்டம் தட்டியுள்ளனர். ஒரு நீதிபதி, எங்கே உன் தகுதிச் சான்று? வழக்குரைஞருக்குரிய தகுதிச் சான்றினைக் காட்டினால் மட்டுமே உன்னை ஒரு வழக்குரைஞராக ஏற்றுக்கொள்ள முடியும் என்று வேண்டுமென்றே கூறியுள்ளார்.

இன்னொரு நீதிபதியோ, என்னால் உன்னை ஒரு வழக்குரைஞராக ஒத்துக்கொள்ள முடியாது என்று கூறி நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேற்றியுள்ளார்.

அருகிலிருந்த ஊர்களில் உள்ள நீதிமன்றங்களுக்குச் செல்லும்போதும் பிறரின் ஏளனப் பார்வையையும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவனால், எப்படி வழக்குரைஞராக முடிந்தது என்ற வசைச் சொற்களையும் கேட்டுக்கொண்டே சென்று வந்துள்ளார்.

இவ்வளவு கொடுமைகளையும் கண்டு மண்டேலா துவளவில்லை; தளரவில்லை; ஓய்ந்துவிடவில்லை. கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. இதன் விளைவு, தனது போராட்டத்தில் வென்றார்.

1990ஆம் ஆண்டு உலகம் மண்டேலா பக்கம் நின்றது. விடுதலை செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் அதிபராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்தக் கருப்பு மனிதரின் வெள்ளை உள்ளத்துக்குச் சான்றாக இன்னொரு நிகழ்வும் உண்டு.

தெரிந்துகொள்ள இங்கு அழுத்தவும்.

Share